மணிப்பூர் முதல்வராகும் பிரேன்சிங் - யார் அவர்? என்ன செய்தார்?

மணிப்பூர் முதல்வராகும் பிரேன்சிங் - யார் அவர்? என்ன செய்தார்?
மணிப்பூர் முதல்வராகும் பிரேன்சிங் - யார் அவர்? என்ன செய்தார்?

மணிப்பூரில் மாநில முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பிரேன்சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2ஆவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள பிரேன் சிங், யார்? அவரது அரசியல் பாதை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி, மீண்டும் முதலமைச்சராகிறார் பிரேன் சிங். மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து, முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக அம்மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநில பா.ஜ.க. மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பிரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் பிரவேசத்தை தொடங்கியவர் பிரேன் சிங். ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னா் காங்கிரஸில் இணைந்து 2003-ல் அப்போதைய முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தார். பின்னர், இபோபி சிங்கின் நம்பிக்கைக்குரிய நபராக மாறிய பிரேன் சிங், 2007 சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அமைச்சரானார்.

இதையடுத்து 2012 தேர்தலில் தொடர்ந்து 3-ஆவது முறையாக அதே தொகுதியிலிருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், இபோபி சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸிலிருந்து கடந்த 2016-இல் விலகிய அவா், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தாா். பா.ஜ.க. செய்தித் தொடாபாளராகவும், தேர்தல் நிர்வாகக் குழு இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டாா். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அதே ஹெய்ன்காங் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற அவா், மணிப்பூா் மாநில முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றாா்.

அந்தத் தோ்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக வெறும் 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியோ 28 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியிலிருந்து சில எம்எல்ஏ-க்களை பாஜக பக்கம் வரவழைத்து பிரேன் சிங் ஆட்சி அமைத்தார். தற்போதைய தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் முதலமைச்சராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோர உள்ளார். 21ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com