”முடிந்தால் தடுத்துப்பாருங்கள்” பட்டியலின ஆலைய நுழைவு போராட்டத்தில் முத்துராமலிங்க தேவர்!

”முடிந்தால் தடுத்துப்பாருங்கள்” பட்டியலின ஆலைய நுழைவு போராட்டத்தில் முத்துராமலிங்க தேவர்!
”முடிந்தால் தடுத்துப்பாருங்கள்” பட்டியலின ஆலைய நுழைவு போராட்டத்தில் முத்துராமலிங்க தேவர்!

பட்டியலின மக்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஒரு நிலை ஒரு காலத்தில் இருந்தது. பின்னர் 1939ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் கோயிலில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

1937 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்பதை அறிந்து அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மாட்டேன் என மறுத்தார். இது காங்கிரஸ்காரர்களிடமும் ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் வைத்தியநாத அய்யர் தலைமையில், நடைபெற்ற ஆலய பிரவேசத்துக்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறு அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுகொண்ட முத்துராமலிங்கத் தேவர் மதுரை முழுவதும் துண்டு பிரசுரங்கள் மூலம் எதிர்ப்பை காட்டி வந்த மேல் ஜாதியினருக்கு எச்சரிக்கை விடுத்தார். அதாவது எக்காரணம் கொண்டும் பட்டியலின மக்களின் ஆலய பிரவேசத்திற்கு பிரச்னை கொடுக்காமல் ஒதுங்கி இருக்குமாறு துண்டு பிரசுரங்களில் தெரிவித்திருந்தார். மேலும், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்ய வரும் மக்களை என்னுடைய சமுதாயத்து மக்கள் தூண்களாக நின்று பாதுகாப்பார்கள். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை எனது சமுதாயம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்’ என்று முத்துராமலிங்க தேவர் சொன்னதாக ஒரு தகவலும் உண்டு.

1939 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை 10 மணிக்கு முத்துராமலிங்கத் தேவர், பட்டியலின மக்களுடன் தனது ஆதரவாளர் படை சூழ ஆலயப் பிரவேசம் செய்தார். இதைத்தொடர்ந்து ராஜாஜி ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார். குறிப்பிட்ட சமூகத்தினரை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நுழைவைத் தாங்க முடியாமல், மீனாட்சி கோயிலை விட்டு வெளியேறி மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி கோயில் அமைத்து அங்கு பூஜையும் நடத்தியுள்ளனர். 1945 வரை இக்கோயிலில் பூஜை நடைபெற்றுள்ளது. பின்னர், சிதைந்து போனதால் பழையபடி மீனாட்சியம்மன் கோயிலுக்கே அர்ச்சகர்கள் திரும்பினர்.

இந்த போராட்டம் ஒரு புறமிருக்க இதற்கு முன்னதாகவே முத்துராமலிங்க தேவர் ஒரு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார். அதாவது, குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தினார் முத்துராமலிங்க தேவர். தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக முத்துராமலிங்க தேவர் சென்னையில் முதன் முதலாக போராடினார். இவரின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை திரட்டினார்.

இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை கைது செய்தது. இதனால் முத்துராமலிங்க தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் நடந்த போராட்டத்தால் இந்த சட்டம் நீக்கப்பட்டது.

முத்துராமலிங்க தேவரின் 113 ஆவது பிறந்தநாள் இன்று. அதேபோல் அவரது 58 வது இறந்த தினமும் இன்றுதான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com