திரை விமர்சனம்: முருங்கைக்காய் சிப்ஸ் - நமத்துப் போன பழைய சமாச்சாரம்!

திரை விமர்சனம்: முருங்கைக்காய் சிப்ஸ் - நமத்துப் போன பழைய சமாச்சாரம்!
திரை விமர்சனம்: முருங்கைக்காய் சிப்ஸ் - நமத்துப் போன பழைய சமாச்சாரம்!

ஷாந்தனு, அதுல்யா, பாக்யராஜ், யோகிபாபு, ஊர்வசி, முனிஷ்காந்த், மனோபாலா, மயில்சாமி, மதுமிதா என பெரிய நடிகர் பட்டாளத்தோடு களமிறங்கி இருக்கிறது 'முருங்கைக்காய் சிப்ஸ்'. ஸ்ரீஜர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? - இதோ ஒரு விரைவுப் பார்வை...

ஷாந்தனுவிற்கும் அதுல்யாவிற்கும் திருமணம் முடிந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது ஷாந்தனுவை சந்திக்கும் அவரது தாத்தா பாக்யராஜ் தம் குடும்ப வழக்கம் என ஒன்றைக் கூறுகிறார். அதன்படி 'முதலிரவானது திருமணத்தன்று நடக்கக் கூடாது. ஆனால், புதுமணத்தம்பதிகள் ஒரே அறையில் இருக்க வேண்டும்.' இப்படியொரு சிக்கலான டாஸ்க் வழங்கப்படுகிறது. இவ்விஷயம் நாயகி அதுல்யாவிற்கு தெரியாது. ஷாந்தனு இந்த டாஸ்க்கில் வென்றாரா அல்லது அதுல்யாவின் முதலிரவு ஆசை வென்றதா என்பதே திரைக்கதை.

இந்தக் கதை வெற்றிபெறும் என தயாரிப்பாளர் ரவிந்தர் எப்படி நம்பினார் எனத் தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அவ்வளவு கதைப் பஞ்சமா...? யூடியூபர்கள் கூட நல்ல நல்ல கான்சப்டில் வீடியோ எடுத்து வைரல் செய்கின்றனர். இந்நிலையில், இப்படியொரு சினிமா தேவையற்ற பொருட்செலவு மற்றும் நேர விரயம்.

பாக்யராஜ், முருங்கைக் காய் என சில விஷயங்களைச் சேர்த்தால் போதும், படம் ஓடும் என்ற நம்பிக்கை தவறானது. யோகி பாபு அவரது நண்பர்களுடன் செய்யும் வேகாத நகைச்சுவைக் காமெடிகள் தனி ட்ராக்காக போய்க் கொண்டிருக்கிறது. எவ்வளவு முயன்றும் சிரிப்பு வரவில்லை. படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தும் அவை சிரிக்க வைப்பதற்கு பதிலாக அசூயையுணர்வைத் ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், இதெல்லாம் ரொம்பவே பழைய ஜோக்ஸ்.

நாட்டுக் கோழி பிரியாணி வாங்கி வரச் சொல்லும்போது, "எந்த நாட்டுக் கோழி?" என டிக்டாக் கவுன்டர் காமடியை வேறு வைத்திருக்கிறார்கள். ரொம்பவே பிற்போக்குத் தனமான வசனங்களும், காட்சிகளும் பல இடங்களில் வருகின்றன.

"நடுராத்திரி தெரியாத நம்பர்ல இருந்து கால் வரும்போது அத ஒரு பொண்ணு எடுத்து பேசுறானா, அவ நல்ல பொண்ணா இருக்கமாட்டா" என்றொரு வசனம். இப்படியெல்லாம் சிந்தித்த அறிவுஜீவிக்கு லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக சிலை வைக்கலாம். ஊர்வசி அதுல்யாவிடம் வந்து "திருமணத்தன்று முதலிரவு நடக்காவிட்டால் குழந்தை பிறக்காது. அது நம்ம குடும்பத்துக்கு ஒரு வழக்கமா தொடருது. அதனால எப்டியாது உறவு கொள்ளணும்" என்ற சாரத்தில் எமோஷனலாக பேசுகிறார். ஆனால், ரசிகர்களுக்கு கோவம்தான் வருகிறது.

ஒரே இரவில் 108 கன்னிப் பெண்களை வைத்து பூஜை செய்வது, உடலுறவை கண்டுபிடிக்கும் மீட்டர், முத்த காலிங் பெல் என எந்த ஐடியாவும் வொர்க் அவுட் ஆகவில்லை. ஒளிப்பதிவாளர் ரமேஷ் சகக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு விசு கால சினிமா ஒளி அமைப்பை நினைவுபடுத்துத்துகிறது. இப்போதெல்லாம் டிவி சீரியல்களில் கூட அவ்வளவு ரிச் லைட்டிங் செய்கிறார்கள்.

உங்களிடம் ரசிகர்கள் வேறு பல நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள் ஷாந்துனு. பாவக்கதைகளில் செட்டில்டாக அழகாக நடித்த ஷாந்தனுவை எல்லோருமே ரசித்தார்கள். இந்த முருங்கைக்காய், ரசகுல்லா போன்ற பழைய விஷயங்களை யாரேனும் கொண்டுவந்தால் தவிர்த்துவிட்டு நல்ல கதைகளைத் தேர்வு செய்யுங்கள்.

ஆக, முருங்கைக்காய் சிப்ஸ் நமத்துப் போன சிப்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com