இடுக்கி அணையால் முடிவது, முல்லைபெரியாறில் ஏன் சாத்தியமில்லை !
எப்படி இடுக்கி அணையில் 75 டி.எம்.சி தண்ணீரை தேக்க முடிகிறது? ஏன் முல்லை பெரியாற்றிலிருந்து 20 டி.எம்.சி தண்ணீருக்கும் மேல் நம்மால் பெற முடியவில்லை?
சாதாரணமாக அணையைத் திறந்ததும் கால்வாயில் தண்ணீர் பாய்ந்து விவசாயத்துக்கு பயன்படுத்துவது போன்ற அமைப்பு முல்லை பெரியாறு அணையில் இல்லை. இந்த அணையின் பணி மேற்கு நோக்கி பாயும் பெரியாறு எனும் ஆற்றை தடுப்பது மட்டுமே. இந்த பிரதான அணையின் நீளம் 1,200 அடி. உயரம் 155 அடி. அஸ்திவார சுவர் வரை உயரம் 158 அடி. அஸ்திவாரத்தின் அகலம் 115.5 அடி. நீர் தேக்க அளவு 152 அடி. நீர் வெளியேற்றும் மதகுகள் 13 நீர்போக்கிகள், உபரி நீர் வெளியேறும் மதகுகள் என 'பிரதான சுவரில்' எதையும் பார்க்க முடியாது.
நீர் தேங்கும் இடம், உபரிநீர் வெளியேறும் இடம், தமிழகத்துக்கு நீர் எடுக்கும் சுரங்கப்பகுதி என அனைத்துமே ஒவ்வொரு திசையில் இருக்கும். அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்க முடியாது. அணையில் மண் சேராது. அணை சுவரை அலைகள் மோதாது என பல அதிசயங்களை உள்ளடக்கியது இந்த பெரியாறு அணை.
அணையில் தேங்கும் நீர் 6,100 அடி நீளம், 80 அடி அகலம், 60 அடி ஆழம் உள்ள ஒரு கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்கும் சுரங்க பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பும் வகையில், மலை பாறையில் 15 அடி அகலம், ஏழரை அடி உயரம் 5,704 அடி நீளத்தில் ஆங்கில எழுத்து ‘D’ வடிவில் குடையப்பட்ட சுரங்கம் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
அதாவது மேற்கு நோக்கி (கேரளா) ஓடும் ஆற்றை தடுத்து நிறுத்தி சுரங்க பாதை வழியே கிழக்கு நோக்கி (தமிழகம்) திருப்பிவிடுவதுதான் இந்த அணையின் பணி. தேனி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்த பிறகு வைகை அணையில் சேமிக்கப்படுகிறது முல்லை பெரியாறு.