உ.பி.தேர்தல் களம் - பா.ஜ.க.வில் இணைந்த முலாயம்சிங் மருமகள்..சமாஜ்வாதிக்கு நெருக்கடி?

உ.பி.தேர்தல் களம் - பா.ஜ.க.வில் இணைந்த முலாயம்சிங் மருமகள்..சமாஜ்வாதிக்கு நெருக்கடி?
உ.பி.தேர்தல் களம் - பா.ஜ.க.வில் இணைந்த முலாயம்சிங் மருமகள்..சமாஜ்வாதிக்கு நெருக்கடி?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அடுத்தடுத்து திருப்பங்கள் நிலவி வரும்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பா.ஜ.க.வில் இணைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அடுத்தமாதம் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்ராகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்ப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. மற்றும் சமாஜ்வாதி கட்சியிடையேதான் இருமுனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நடைபெற இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான சில தினங்களில், ஆளும் பா.ஜ.க. கட்சியிலிருந்து 3 அமைச்சர்கள் உள்பட பல எம்.எல்.ஏக்கள் பதவி விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதனால் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மகிழ்ச்சியில் இருந்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கின் மருமகள், இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். முலாயம் சிங்கின் இளையமகன் பர்திக் யாதவ். இவரின் மனைவி அபர்னா யாதவ் (32). அபர்னா பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தது. தற்போது, அபர்னா யாதவ் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அபர்னா யாதவ் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி - பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பா.ஜ.க.வின் இணைந்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அபர்னா யாதவ் பா.ஜ.க.வில் இணைந்துள்ள நிகழ்வு சமாஜ்வாதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அபர்னா யாதவிற்கு பாஜக வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அது சமாஜ்வாதி கட்சிக்கும், அதன் தலைவர் அகிலேஷ் யாதவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில் ‘‘முலாயம் சிங்கின் மருமகளை பா.ஜ.க. வரவேற்கிறது. முலாயம் சிங் யாதவின் மருமகளாக இருந்தாலும், அபர்னா யாதவ் அவ்வப்போது பல விஷயங்களில் தனது கருத்துக்களை சொந்தமாக வெளிப்படுத்தினார். அவர் பா.ஜ.க. குடும்பத்தின் ஒரு பகுதியாக நாங்கள் உணர்ந்தோம். அகிலேஷ் யாதவால் தனது குடும்பத்தில் உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை’’ என்று தெரிவித்தார். அபர்னா யாதவ், கடந்த 2017-ம் ஆண்டு லக்னோ கண்டோன்மெண்ட் சட்டப்பேரவை தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு, பா.ஜ.க. ரிட்டா பகுகுணா ஜோஷியிடம் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com