“நினைத்தாலே கலங்கும்; அதுதான் தோனி..!” - உருகும் ரசிகர்கள்..!

“நினைத்தாலே கலங்கும்; அதுதான் தோனி..!” - உருகும் ரசிகர்கள்..!

“நினைத்தாலே கலங்கும்; அதுதான் தோனி..!” - உருகும் ரசிகர்கள்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் மகேந்திரசிங் தோனி என்ற ‘தல’ தோனி, சர்வதேச கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்து இன்றுடன் 15 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. தற்போதுள்ள இந்திய அணியில் தோனி இல்லை. உலகக் கோப்பை முடிந்தபோது, சென்ற அவர் இன்னும் அணிக்கு திரும்பவில்லை. இதில் பல உள் அரசியல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தோனி அணியில் இல்லாவிட்டாலும், அவரது ரசிகர்கள் இன்னும் அவரை கொண்டாடத் தவறவில்லை.

தோனிக்கு வயதாகிவிட்டது. அவரது தலைமையில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சீனியர் அணியாக இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தபோது, சீனியர் என்றாலும் சிங்கம் சிங்கம்தான் என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதற்கு ஏற்றாற்போல தோனியும் ஐபிஎல் போட்டிகளில் புயல் போல விளையாடினார். ரசிகர்கள் இந்த அளவிற்கு கொண்டாட அப்படி என்னதான் செய்துவிட்டார் தோனி..?

2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில், முதன் முதலாக களமிறங்கினார் தோனி. முதல் போட்டியில் அவர் எடுத்த ரன்கள் அரை சதமோ, சதமோ அல்ல, வெறும் பூஜ்ஜியம்தான். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங் என ஜாம்பவான்களுக்கு மத்தியில் விளையாடிய தோனியை யாருமே கவனிக்கவில்லை. பங்க் முடி, கட்டுமஸ்த்தான உடல் என தனக்கென ஒரு ஸ்டைலில் வலம் வந்த தோனி, தனது திறமையை நிரூபிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை.

2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் 2வது போட்டியில், தனது அபார பேட்டிங்கை உலகிற்கு வெளிப்படுத்தினார் தோனி. 4 சிக்ஸர், 15 பவுண்டரிகள் என 123 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். அவரது அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி 356 ரன்கள் குவித்ததுடன், 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இதைத்தொடர்ந்து இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் தோனி தொடர்ந்து சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த நேரத்தில் இந்திய அணியில் இருந்த கீப்பிங் வெற்றிடத்தை சரியாக நிரப்பினார். இதனால் தோனி ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு வந்தது.

2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோற்று தொடக்கத்திலேயே வெளியேறியது. இதனால் கடுப்பான ரசிகர்கள் தோனியின் வீட்டில் கற்களை வீசி தாக்கினர். அதன்பிறகு தோனி ஜொலிக்காமல் போய்விடுவார் என பலரும் விமர்சித்தனர்.

ஆனால் ஐஐசி சார்பில் முதன்முதலாக நடத்தப்பட்ட 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய தோனி, யாரும் எதிர்பாராத விதமாக கோப்பை வென்று கொடுத்தார். அந்தத் தொடரில் அவர் எடுத்த சில அதிரடி முடிவுகள் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதுமட்டுமின்றி போட்டியின் நிலை எப்படி இருந்தாலும், முகத்தில் சிரிப்புடனே இருந்த தோனி ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

அந்தக் கோப்பைக்கு பின்னர் தோனிக்கு தொடர்ந்து வெற்றி முகம்தான். ஆஸ்திரேலியாவிற்கு சென்று அங்கேயே அவர்களை தோற்கடித்தார். பலமுறை ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கி துவண்டு போய்கிடந்த இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் இந்த வெற்றி பெரும் புத்துணர்ச்சியை கொடுத்தது. இதற்கெல்லாம் மேலாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், கோப்பையை வென்று இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தினார். அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தடுமாறிய நேரத்தில் களமிறங்கிய தோனி, கடைசி வரை நின்று வெற்றியை பறித்துக்கொடுத்தார். இறுதியாக அவர் அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸர் இன்னமும் ரசிகர்களின் மனதில் பசுமை மாறாமல் நினைவு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் திரோபி கோப்பையையும் தோனி வென்றார். இதனால் அனைத்து உலகக் கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார். இந்திய ரசிகர்களின் நாயகனாக வலம் வந்த தோனி மீது ஒருபடி அதிகமான பாசத்தை காட்டிய தமிழக ரசிகர்கள், அவரை ‘தல’ என செல்லமாக அழைத்தனர். அதற்கு காரணம், ஐபிஎல். 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டியில், இறுதிப் போட்டிவரை சென்னையை கொண்டு சென்றது.

2010 மற்றும் 2011ஆம் ஆண்டில் கோப்பை வென்றுகொடுத்தார். இத்தனை சாதனைகளை படைத்த தோனி இன்று இந்திய அணியில் இல்லையென்பதை நினைத்தாலே கண்கள் கலங்குகிறது என அவரது ரசிகர்கள் உருகிக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம் 2020 ஐபிஎல் போட்டியில் தான் யார் ? என்பதை மீண்டும் நிரூபித்து விட்டு, இந்திய அணியில் தோனி கட்டாயம் இடம்பிடிப்பார் எனவும் ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com