சத்தமும் அசாத்தியமும் அதிகம்!- 'மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 பகுதி 1'-இல் புரொஃபசர் டீம் எப்படி?

சத்தமும் அசாத்தியமும் அதிகம்!- 'மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 பகுதி 1'-இல் புரொஃபசர் டீம் எப்படி?
சத்தமும் அசாத்தியமும் அதிகம்!- 'மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 பகுதி 1'-இல் புரொஃபசர் டீம் எப்படி?

ஒரு நாள் ஒரு கொள்ளக்கார கூட்டம் பேங்க் ஆஃப் ஸ்பெயினுக்குள்ள தங்கத்த திருட போக, போலீஸ் அவங்கள தொறத்த, அவங்க ஒளிய, போலீஸ் அவங்கள நெருங்க, சரி தங்கத்தோட தப்பிச்சிடலாம்னு நெனைக்கும்போது, ராணுவமும் சேர, சரி இங்கேயே இருந்து டிஃபன்ட் பண்லாம்னு நெனைக்கும்போது, அங்களுக்கான பிடி இறுக இறுக... இங்குட்டு பாத்தா போலீஸ், அங்குட்டு போனா ராணுவம் என்னடா ஏழவு வாழ்க்கனு புலம்பி, கொஞ்சம் சுதாரிச்சு, இழக்க எதுவுமில்லைன்னு கவலையே படாம துப்பாக்கிய தூக்கிட்டு 'இப்போ வாங்கடா'ன்னு வேட்டைக்கு நின்னா... அதுதான் 'மணி ஹெய்ஸ்' சீசன் 5 - பகுதி ஒன்று!

முதல் 4 சீசன்களில் இருந்த விறுவிறுப்பையும், பரபரப்பையும் கொஞ்சம் கூட குறையாமல் அதே வீரியத்துடன் அடுப்பிலிருந்து எடுத்த தோசைக்கல்லைப் போல 5-வது சீசனின் முதல் பகுதியை கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். எதிரான எல்லாமே ஒன்று சேர்ந்து, நிலைமை கழுத்தை நெரிக்கையில் மூச்சு முட்டும்போது ஆக்ஸிஜனுக்கு வாய்ப்பேயில்லை எனும் சூழலில், இயற்கையாக எங்கிருந்தோ வரும் காற்று உயிர்பிழைக்க வைத்து ஆசுவாசப்படுத்துவதைப் போல ஆங்காங்கே படபடப்புகளுக்கு ரெஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.

ஆர்த்ரோ தட்டி தூக்கியிருக்கிறார். எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் மனுஷன். ஓட விடுகிறார். ஒரு கவர்னர் என்றும் பாராமல், 'யோவ் சும்மா இருய்யா' என மிரட்டி அதகளப்படுத்துகிறார். மணி ஹெய்ஸ்ட் தொடரின் எரிபொருள் ஆர்த்ரோ தான். முடிந்தளவுக்கு வெறுப்பேற்றியிருக்கிறார். அவர், இருந்தாலும் தொல்லை, இல்லாவிட்டாலும் சுவாரஸ்யத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். 'டின்னருக்கு டென்வர் ரோஸ்ட்'. 'நீ வாடகை அப்பா டா' என்ற ஆர்த்ரோவின் வசனங்களுக்கான தமிழ் டப்பிங்கும் அட்டகாசம்!

'வெப்பன பாத்ததும் வெறி ஆயிட்டான்' என்ற தமிழ் மொழிபெயர்ப்பு, 'யாருயா அந்த டிரான்ஸ்லேட்டர்' என பார்க்கத் தூண்டுகிறது. தவிர, போலீஸ் அதிகாரி அலிசியா ரத்த வெறியுடன் வேட்டையாட துடிக்கிறார். நடிப்பில் மிரட்டுகிறார். பெர்லினுக்கான இன்மையை பலேர்மோ சிறப்பாக நிரப்பியிருக்கிறார். ஒரு தலைவனாக பொறுப்பும், பொறுமையும் உணர்ந்து செயல்பட்டவிதம் ஈர்க்கிறது. ஒருவருக்கு பாதிப்பு என்றாலும், ஒட்டுமொத்த குழுவுமே துடிப்பதுதான் மணி ஹெய்ஸ்ட்டின் மிகப்பெரிய வெற்றி. சின்ன சின்ன சண்டைகள் வந்து போனாலும், அவர்களுக்குள்ளான 'பாண்டிங்'தான் தொடரை உயிர்ப்புடன் வைக்கிறது.

'நான் இருக்கேன்; பயப்படாத!' என்ற வார்த்தைகளுக்குள் அத்தனை வலிமை ஒளிந்திருக்கிறது. 5 எபிசோட்டிலும் கிட்டத்தட்ட எல்லோரும் அந்த வாக்கியத்தை பயன்படுத்துகிறார்கள். யாரும் யாரையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. ஒருத்தருக்கான காயம் மற்றவருக்கு வலியை தருகிறது என்பதை நம்மை அவர்களுடன் எளிதாக கனெக்ட் செய்ய வைக்கிறது. அதன்மூலம் அவர்களின உணர்வுகள் நமக்கு கடத்தப்படுவது எளிதாகிவிடுகிறது.

'இவ்வளவு பிரச்னையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' என்ற பிரபஞ்சனின் வரிகளைப்போல, ரத்தமும் சதையுமான காட்சிகளில் காதல் இழையோடிக்கொண்டிருக்கிறது. துப்பாக்கிகள் ஏந்திக்கொண்டிருக்கும் வேளையில், காதல் துயிலெழுந்துவிடுகிறது. இது போன்ற காட்சிகள் தொடரை சுவாரஸ்யமாக்கி நம்மையும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்துகிறது. 'நாம பண்ற முதல் கொலை நம்மள விடாது. துரத்திக்கொண்டேயிருக்கும்' என்ற வார்த்தை அவ்வளவு கனக்கிறது. கூடவே, அந்தக் கொலை ஏற்படுத்தும் மனநிலை மாற்றங்களை அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.

வெறும் கொள்ளையடிக்கும் தொடர் என கடந்துவிட முடியாது. திருட்டு என்பதை தாண்டி, யாரையும் காயப்படுத்த கூடாது; எந்த உயிரும் வீணாக பறிபோய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். தவறி நிகழ்ந்தாலும் அதனால் ஏற்படும் மனரீதியான பாதிப்புகளையும், சம்பந்தபட்டவர்கள் இறந்துவிடக்கூடாது எனவும் துடித்துப்போவார்கள். 'எங்களுக்குத் தேவை பணம் மட்டுமே உயிர்கள் அல்ல' என்பதை எல்லா சீசனிலும் பணத்தைப்போல கடத்திக்கொண்டே செல்கிறார்கள்.

முந்தைய ஒவ்வொரு சீசனிலும் முக்கிய கதாபாத்திரங்கள் மரணிக்கும்போதும், அவர்களின் சகாக்கள் போலவே பார்வையாளர்களுக்கும் சோகம் தொற்றும். ஆனால், அந்த சோகம் நீண்ட நேரம் நீடிக்காது. அந்தக் கதாபாத்திரங்கள் இறந்த வடுக்களே தெரியாதபடி, ஒவ்வொரு எபிசோடின் ஃப்ளாஷ்பேக்கிலும் அவர்கள் வலம் வருவர். அப்படித்தான் ஆஸ்லோ, பெர்லின், மாஸ்கோ, நைரோபி ஆகியோர் இன்னமும் நம்மோடு புழங்கிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பெர்லினின் ஆரம்ப நாட்கள் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருப்பது ரசிகர்களின் வெகுவாக ஈர்க்கும் என்பதில் வியப்பில்லை.

'சாத்தியமில்லாததும் சாத்தியமே' என்பதை லாஜிக்கலோடு உணர்த்துவதுதான் பார்வையாளர்களாகிய நம்மிடம் புரொஃபசர் கன்வே செய்யும் விஷயம். இம்முறையும் அதை சாத்தியப்படுத்திய புரொஃபசர், முன்னெப்போதையும் விட இம்முறை அளவுக்கதிகமாக யுத்தச் சத்தங்களையும் கூட்டச் செய்திருக்கிறார். கூடவே, எளிதில் அசைத்துப் பார்க்க முடியாதவரான புரொஃபசரே சென்டிமென்ட்டால் அசைக்கப்பட்டிருப்பதையும் உணரலாம்.

தனி மனித உளவியல் முதல் அரசுகளின் அணுகுமுறை வரை அனைத்தையும் நுண்ணியமாக அணுகும் போக்கும் இம்முறை சற்றே கூடியிருக்கிறது. அரசும் அதிகாரமும் தனக்குத் தேவையான தருணங்களில் எந்த லெவலுக்கும் கீழறங்கும் என்பதையும், தேர்ந்தெடுக்கும் பாதை எதிர்மறையாக இருந்தாலும் அதிகாரவர்க்கம் பேணாத எத்திக்ஸை பின்பற்றுவதில் புரொஃபசர் அண்ட் கோ அக்கறை காட்டுவதும் சமகால அரசியல் முரண்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதேவேளையில், முந்தைய எபிசோடுகளில் பெண் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடும்போது, ஆண்களின் ஆதிக்கமே ஓய்ந்திருந்ததை பேலன்ஸ் செய்யும் விதமாகவும் இந்தப் புதிய பகுதி இருக்க முயற்சிக்கிறது. மணிலா என்னும் திருநங்கை கதாபாத்திரமும், அவரை ஒட்டிய சமூக அரசியலும் கூட கச்சிதமாக பதிவு செய்யப்படிருக்கிறது.

'நாடகம்தான் விடும் வேளையில் உச்சகாட்சி நடக்குதம்மா' என்ற வசனத்துக்கு ஏற்ப, அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள், அதையொட்டி பின்னப்பட்டிருக்கும் கதை என எந்தவித அசதியும் இல்லாமல், நதியைப்போல அதன் ஓட்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இதை மேற்கொண்டு சொன்னால் ஸ்பாய்லரில் முடியலாம். ஆக, மணி ஹெய்ஸ்ட் 5-வது சீசனின் முதல் பகுதி எதிர்பார்ப்புகளை ஏமாற்றாது என்பது மட்டும் உறுதி!

-கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com