பணம் பண்ண ப்ளான் B -25: நிதி நிர்வாகத்தில் இந்த தவறுகள் நிச்சயம் தவிர்க்க வேண்டியவை!

பணம் பண்ண ப்ளான் B -25: நிதி நிர்வாகத்தில் இந்த தவறுகள் நிச்சயம் தவிர்க்க வேண்டியவை!
பணம் பண்ண ப்ளான் B -25: நிதி நிர்வாகத்தில் இந்த தவறுகள் நிச்சயம் தவிர்க்க வேண்டியவை!

வண்டியை சரியான நேரத்தில் சர்வீஸுக்கு விடும் நாம், ஓய்வு காலம் என்பது குறித்த சிந்தனையில்லாமல் இருப்பது கவலைக்குரியது.

நம்மில் பலருக்கும் நாம் சரியாக எந்த செயலை செய்கிறோம் என்பது தெரியும் அல்லது எந்த செயல் சரியானது என்பது தெரியும். ஆனால் நாம் செய்யும் தவறுகள் எதுவும் தெரியாது. அதைவிட முக்கியம் எது தவறு என்பதே புரியாது. நிதி சார்ந்த விஷயங்களிலும் இதேபோல நாம் செய்யும் தவறுகள் நம் கண்ணுக்கு தெரியவதில்லை.

அதிகமாக கடன் வாங்குவது, காப்பீடு இல்லாமல் இருப்பது, நிதிசார்ந்த இலக்கு இல்லாமல் இருப்பது, செலவுகளுக்கு கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பொதுவான தவறுகளை இங்கு கூறப்போவதில்லை. இவை தவறு என அனைவருக்கும் தெரியும்.

அசெட் அலோகேஷன்

சேமிப்பு இல்லாமல் யாரும் இருப்பதில்லை. ஆனால் அந்த சேமிப்பை சரியான வகையில் பிரித்து முதலீடு செய்வதில்லை. இதற்கு பிற முதலீடுகள் குறித்து தெரியவில்லை என்பது பொருள் அல்ல. சிலருக்கு சில முதலீடு பிடித்தமானவையாக மாறி இருக்கும். அந்த முதலீட்டை விட்டு அவர்கள் வெளியே வரமாட்டார்கள். சிலருக்கு பிக்ஸட் டெபாசிட், சிலருக்கு தங்கம், சிலருக்கு ரியல் எஸ்டேட், சிலருக்கு பங்குச்சந்தை. குறிப்பிட்ட எந்த முதலீடும் சரி தவறு என முடிவெடுக்க முடியாது. இந்த முதலீடு யாருக்கு எந்த விகிதத்தில் தேவை என்று மட்டுமே பார்க்க வேண்டும்.

கார், இரு சக்கர வாகனங்கள், செல்ஃபோன், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவை மதிப்பு குறையும் சொத்துகள். இதில் முதலீடு செய்தால் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும். இதைவிட முதலீடு உயரும் சொத்துகளில் முதலீடு செய்வது நல்லது. ஆனால் அனைத்து விதமான முதலீட்டையும் ஒரே பிரிவில் செய்யக்கூடாது.

ஓய்வு காலம்

தற்போது வேலைக்கு செல்லத் தொடங்குவோருக்கு ஓய்வு காலம் என்ற ஒன்றே வராது என கருதுகின்றனர். சம்பளத்தில் மீதி தொகையை சேமிக்கின்றனர். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் தேவைக்கே சேமிப்பதில்லை என்னும்போது, ஓய்வு காலத்தை குறித்து யாரும் சரியாக திட்டமிடுவதாக தெரியவில்லை. தற்போது ஓய்வு காலத்துக்காக பல திட்டங்கள் வெளியாகி வருகின்றன. இந்த திட்டங்கள் நமக்கானதல்ல எனறு கருதும்போக்கு இருக்கிறது. வண்டியை சரியான நேரத்தில் சர்வீஸுக்கு விடும் நாம், ஓய்வு காலம் என்பது குறித்த சிந்தனையில்லாமல் இருப்பது கவலைக்குரியது.

இதையும் படிக்கலாம்: பணம் பண்ண ப்ளான் B -23: NFO முதலீடு என்றால் என்ன? யார் முதலீடு செய்யலாம்? யார் கூடாது?

சிபில் ஸ்கோர்

சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் கிடைப்பது என்பது சவாலான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது எளிதாக கடன் கிடைக்கிறது. அதனால் கடனை அடைப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. வேலைக்கு செல்ல தொடங்கும்போது வாங்கிய சிறு சிறு கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் மட்டுமே, நடுத்தர வயதில் வீட்டுக்கடன், கார் கடன் உள்ளிட்டவை கிடைக்கும். 5,000 ரூபாயை செலுத்தாவிட்டால் என்னவாகும் என நினைக்கலாம். ஆனால் பின்னாட்களில் 50 லட்சம் வீட்டுக் கடனை வாங்கவே முடியாது. ஆனால் தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது. ஒருவேளை வாங்கினாலும் சிபில் ஸ்கோரை மனதில் வைத்து செயல்படவும்.

அதேபோல நான் கடனே வாங்க மாட்டேன் என்று சொல்வதும் தவறு. வீடு வாங்குகிறீர்கள் என்றால் கடன் அவசியம். அதேபோல கல்விக் கடனும் தவிர்க்க முடியாதது. அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவதும் தவறு.

அதிக வட்டி

சிலர் பிக்ஸட் டெபாசிட் மட்டுமே ஒரே வழி என நினைப்பார்கள். ஆனால் சிலர் ஒழுங்கு முறையற்ற முதலீட்டு திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அதிக வட்டி கிடைக்கும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கும். ஆனால் இந்த ஆசை காரணமாகவே மொத்த முதலீட்டையும் அவர்கள் இழக்கிறார்கள். சிலர் இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். அதிக வட்டி தேவை. ஆனால் முதலீடுக்கு மோசம் இல்லாததாக இருக்க வேண்டும்.

அவசர நிதி

சில குடும்பங்கள் சம்பளம் வந்தால்தான் வாழ முடியும் என்னும் சூழலிலே பல ஆண்டுகள் இருப்பார்கள். இதுபோன்ற சூழல் மிக ஆபத்தானது. சேமிப்பு இல்லாமல் இருக்கக் கூடாது, குறிப்பாக அவசரகால சேமிப்பு என்பது மிக அவசியம்.

இதையும் படிக்கலாம்: பணம் பண்ண ப்ளான் B -24: பங்குச்சந்தையில் அடி வாங்கும் ஸ்டார்ட்அப்- அடுத்து என்ன நடக்கும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com