மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடையாது? - அமைச்சர் கீதா ஜீவன் விரிவான விளக்கம்

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடையாது? - அமைச்சர் கீதா ஜீவன் விரிவான விளக்கம்
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடையாது? - அமைச்சர் கீதா ஜீவன் விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 - 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர். மேலும், இந்த திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், இந்த திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அதில், 80 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் கீதா ஜீவன் உடன் நமது செய்தியாளர் ரமேஷ் நடத்திய கேள்வி - பதில் கலந்துரையாடல்;

  • திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த இந்த முக்கியமான திட்டத்தை எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்?

இனிமேல்தான் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, எப்படி செயல்படுத்தவேண்டும் என முதல்வரின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். தொடக்கநிலையாக ரூ.70000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஏழை, எளிய பெண்களுக்கு, அதாவது வருமான வரி கட்டுகிறவர்கள், தொழில் அதிபர்கள் என்றில்லாமல், அந்த 1000 ரூபாய்தான் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிடும், வாழ்க்கையில் ஏற்றம் காணும் என்று இருக்கிற, தேவைப்படும் பெண்களுக்கு நிச்சயம் இந்த பணம் வழங்கப்படும். அவர்களுக்கு ஏற்றார்போல் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உறுதியாக வழங்கப்படும்.

நிறையப்பெண்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இது. தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோதுகூட பெண்களே முதல்வரிடம் நேரடியாக கேட்டார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இன்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அரசு ஊழியர்கள் போக, ஏற்கனவே பல்வேறு திட்டங்களின்கீழ் பயனடையும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தவிர்த்து எவ்வளவு பேர் வர வாய்ப்பிருக்கிறது?

70லிருந்து 80 லட்சம் பேர் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய வாய்ப்பிருக்கிறது. என்னிடம் தரவுகள் எதுவும் இல்லாததால் துல்லியமாக கூற இயலவில்லை. ஆனால், நிச்சயம் இந்த பணம் தேவைப்படும், அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் என்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். இந்த மகளிர் உதவித்தொகையானது பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் முழுத்தொகையும் நேரடியாக பெண்களின் கணக்குகளில் சென்று சேரும்விதமாக முதல்வர் திட்டமிடுவார். இந்த பணமானது பெண்களின் கைச்செலவுக்கும், சேமிப்புக்கும் உதவக்கூடியதாகத்தான் இருக்கும்.பெண்களுக்கு சமத்துவம் கிடைக்கவே இதுபோன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

  • ’தகுதிவாய்ந்த’ என குறிப்பிட்டுள்ளது பற்றி எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

அரசு திட்டங்கள் என்று சொல்லும்போது, அது ஏழை, எளியோருக்கு, தேவைப்படுவோருக்கு வழங்குவதுதான் சிறப்பான திட்டமாக இருக்கும். அதனால்தான் தகுதியுள்ள என்று குறிப்பிடப்படுகிறது. எந்த திட்டமாக இருந்தாலும் தகுதிவாய்ந்த நபர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. நான் எனக்கும் உரிமைத்தொகை வேண்டும் என்று கேட்டால் நியாயமாகுமா? அதேபோல் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் கேட்டால் நியாயமாகுமா? மகளிர் உரிமைத்தொகை தொடர்பான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

பேட்டி: ரமேஷ், தொகுப்பு: சினேகதாரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com