ஓடிடி திரைப் பார்வை: Mimi - கனவுக்கும் உணர்வுக்கும் இடையிலான மிமியின் போராட்டம்!

ஓடிடி திரைப் பார்வை: Mimi - கனவுக்கும் உணர்வுக்கும் இடையிலான மிமியின் போராட்டம்!
ஓடிடி திரைப் பார்வை: Mimi - கனவுக்கும் உணர்வுக்கும் இடையிலான மிமியின் போராட்டம்!

'மிமி' படத்தின் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 2 கோடியே 40 லட்சம் பார்வைகளைப் பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியது. அந்த எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு நிறைவேறியது என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

வாடகைத்தாயை தேடி இந்தியா வரும் அமெரிக்க தம்பதியினர் கண்ணில் சிக்குகிறார் மிமி. டான்சராக வலம் வரும் அவருக்கு, தனது கதாநாயகி கனவை அடைய பணம் தேவைப்படுகிறது. ஆகவே, வேறு வழியில்லாமல் தனது லட்சியத்தை அடைய, வாடகைத்தாய் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். காலம் மிமிக்கு வேறொரு முடிவைத் தர, அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான இந்தப் படம், கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'மாலா ஆய் வஹாய்சி' (mala aai vahhaychhy) என்ற மராத்தி படத்தின் ரீமேக். தேசிய விருது பெற்ற இந்த மராத்தி படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் ஆயிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தைத் தந்திருக்கிறது. படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மண் உடேகர், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' 'டீயர் ஜின்தகி' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இயக்குநராக அவருக்கு இது 4-வது திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் முக்கியமான உரையாடலை முன்னெடுத்து சென்றுள்ள இயக்குநர் லக்‌ஷ்மண் உடேகருக்கு பாராட்டுகள்.

'மிமி'யாக க்ரித்தி சனோன். தன்னைச் சுற்றி எந்த வட்டத்தையும் போட்டுக்கொள்ள விரும்பாத ஜாலியான கதாபாத்திரம். சீரியஸ் காட்சிகளில் கூட பாவனைகளால் சிரிக்க வைக்கிறார். தாயாக உருகும் காட்சிகள், கோபம், ஏமாற்றம், இயலாமையை வெளிப்படுத்தும் காட்சிகள் என படத்துக்கு தூணாக நிற்கிறார்.

க்ரித்தி சனோனுக்கு அடுத்து படத்தில் அதிகம் ரசிக்கும் கதாபாத்திரம் என்றால் அது, பானு பிரதாப் கதாபாத்திரத்தில் நடித்த பங்கஜ் திரிபாதிதான். மனுஷன் நடிப்பில் அசத்தியிருக்கிறார். நெருக்கடியான சமயங்களில் சின்ன சின்ன முகபாவனைகள், டயலாக்குகள் மூலம் நகைக்க வைக்கிறார். அம்மா, மனைவியிடம் சிக்கிகொண்டு அல்லல்படும் காட்சிகள், பொய்யை சொல்லிவிட்டு அதை சமாளிப்பது என படத்துக்கு பக்கபலமாக இருக்கிறார். அதேபோல, 'நீ நெனச்சிருந்தா என்ன விட்டு ஓடிபோயிருக்கலாம். ஏன் அத பண்ணல?' என மிமி கேட்கும் காட்சியில், 'நான் ஒரு கார் டிரைவர். எவ்ளோ சிக்கல், தடங்கல் வந்தாலும், பயணிகள் அவங்க போய் சேர்ற இடம் வரைக்கும் கொண்டு போய் சேர்க்குறதுதான் என் வேலை; நடுவுல விட்டு போகமாட்டேன்'' என்ற வசனம் அப்லாஸ் அள்ளத்தக்கவை.

அதேபோல மிமி தடுமாறும் இடங்களில் எல்லாம், தோள் தட்டி, கைதூக்கியும் சுமையை ஏற்றுக்கொள்ள தயாராகவும் இருக்கிறார் அவரது தோழி சமா. அமெரிக்க தம்பதியாக வரும் ஜான் - சம்மர் கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்தப் படம் முழுவதுமே காமெடி லேயர் ஒன்று இழையோடிக் கொண்டிருப்பது நம்மை நிச்சயம் ரசிக்கவைக்கும்.

வாடகைத்தாய் சந்திக்கும் சிக்கல்களை மையக்கருவாக எடுத்துக் கொண்டு பேசியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், அது தாய்மை என்ற போர்வையில் பெண்களை புனிதப்படுத்தியே அழுத்திவைக்கும் சமூக சிந்தனையை இன்னும் இறுகச் செய்கிறது. ஒரு கட்டத்தில் கருவுக்காக, தனது கனவை சிதைக்கும் நிலைக்கு தள்ளி, லட்சியத்தை தாண்டி, தாய் என்ற அந்தஸ்துதான் முக்கியம் என்பதை படம் வலியுறுத்துவது பொதுப்புத்திக்கு இன்னும் வலுசேர்க்கும் வகையில் அமைகிறது.

'கருவை கலைப்பது தவறு' என்றும், 'குறையிருக்கிறது என்பதற்காக ஒரு குழந்தையை கொல்வதும் கொலைதானே' என்பது போன்ற வசனங்கள், வாடகைத்தாய்கள் சந்திக்கும் பிரச்னைகளுடன் அணுக வேண்டியிருக்கிறது. சில இடங்களில் நாடகத்தன்மை மேலொங்கியிருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'பரம் சுந்தரி' பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட். ஆகாஷ் அகர்வால் ஒளிப்பதிவும், மனிஷ் பிரதன் எடிட்டிங்கும் படத்துக்கு பக்கபலம்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், பெண்ணுரிமை குறித்தும் படம் இயக்கும் ஆண் இயக்குநர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பதையே 'மிமி'யும் உணர்த்துகிறது.

கலீலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com