எம்ஜிஆர் பாணி அரசியல் ! ரஜினிக்கு சரிபடுமா..?
தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறார் ரஜினிகாந்த். தமிழகத்தில் இன்னும் சரியான ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனக் கூறி அரசியல் களத்தில் தூபம் தூவியிருக்கிறார். அதேபோல தொடர்ந்து நடிப்பீரகளா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர் அவர்கள் கூட தமிழக முதல்வராக பதவியேற்கும் வரை நடித்துக்கொண்டுதான் இருந்தார்" என்ற காரணத்தையும் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ஆம், ரஜினிகாந்த் சொல்லியிருப்பது உண்மைதான். முதல்வராகும் வரை எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டுதான் இருந்தார். இதில் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் எப்படிப்பட்டது, எம்.ஜி.ஆரை வைத்து ஒப்பிட்டு தன்னுடைய சினிமா அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் கூறுவது சரியானதா ? இந்தக் காலக்கட்டத்துக்கு சரிபட்டு வருமா ? என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வருகை !
சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? ஆனால் அவரின் அரசியல் வருகை அத்தனை எளிதானதாக இல்லை என்பதே நிதர்சனம். 1952-ஆம் ஆண்டு முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.
1952-இல் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சாரங்கள் கட்சிப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி என திமுகவுக்கு ஓயாமல் உழைத்தார்.
பின்பு திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். 1972 இல் அதிமுகவை ஆரம்பித்து 1974 இல் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அதிமுக ஆட்சியமைத்தது. பின்பு 1977 இல் தமிழகத்தில் முதல் முறையாக அதிமுக ஆட்சியமைத்து எம்ஜிஆர் முதல்வரானார். 1980 இல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு எம்ஜிஆர் முதல்வரானார். பின்பு 1984 இல் உடல் நலம் சரியில்லாத போதிலும் அதிமுக வெற்றிப் பெற்ற எம்ஜிஆர் முதல்வரானார். 1974 கட்சி ஆரம்பிக்கும்போதும் அவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவே இருந்தார். அப்போதும் அவர் படங்களில் நடித்தார் 1977 இல் அவர் முதல்வரான பின்பும் 1978 இல் தன்னுடைய கடைசி படமான மதுரை மீட்ட சுந்தர்பாண்டியில் நடித்தார். அதன், பின்பு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. முழுநேர அரசியலில்தான் இருந்தார்.

ரஜினிகாந்த் எம்.ஜி.ஆரை முன்னுதாரணமாக சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், எம்ஜிஆர் புதிதாக அதிமுக எனும் கட்சியை தொடங்கினாலும், அவர் ஏற்கெனவே திமுக எனும் அரசியல் கட்சியில் இருந்தார். அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து வரும்போது எம்ஜிஆர் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். கட்சி ஆரம்பித்தும் எம்ஜிஆர் தொடர்ந்து நடித்ததற்கு காரணம் தன் அரசியல் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். மேலும், இப்போது போல் சமூக வலைத்தளங்கள் இல்லாத காலக்கட்டம் அது. மக்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமா. எனவே, தன்னை மக்களிடம் தொடர்ந்து முன்னிறுத்த பயன்பட்ட ஒரே ஆயுதம் சினிமா அதை இறுதி வரை கச்சிதமாக பயன்படுத்தினார். ஆனால் இப்போது சினிமாவில் நடித்துதான் மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதையும் ரஜினி புரிந்து வைத்திருப்பார்.
இப்போது சமூக வலைத்தளங்களில் இளம் நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் அந்தளவுக்கு ரசிகர்கள் இல்லை என கூறப்படுகிறது. அண்மையில் "பிகில்" பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல், அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் விமர்சனமும் எழுந்தது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால்தான் நடிகர்கள் இப்போது அரசியல் பேசுகிறார்கள் என விமர்சனம் எழுந்தது. ஆனால், ரஜினியை பொறுத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் இருக்கும்போதே தனது அரசியல் கருத்துகளை பேசியுள்ளார். அது பெரும் மாற்றத்தையே தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இப்போதைய சமூக வலைத்தள இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1975-இல் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழக அரசியல் களங்களில் 1996-ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வருகிறார். முதன்முதலாக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் அரசியல் தலைவராக ஜெயலலிதாவாகத்தான் இருந்தார். 1995 ஆம் ஆண்டு பாட்ஷா பட விழாவில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி இருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் முதல் அரசியல் பேச்சு இதுதான். இதையடுத்து ரஜினிகாந்தை மையமாக வைத்து அரசியல் பேச்சுகள் கிளம்பின. அப்போதைய தேர்தலில் தமிழகத்தின் களநிலவரத்தை உணராமல் டெல்லி காங்கிரஸ் மேலிடம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. இதற்கு எதிராக தமிழக காங்கிரஸில் மூப்பனார் தலைமையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. திமுக - தமாக கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து ரஜினி சொன்ன ஒரு கருத்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது. ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என பகிரங்கமாக விமர்சித்தார்.

இதன்பின்னர் 1998-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றிப் பெற்றது. அதன் பின் அவ்வப்போது அரசியல் பேசும் ரஜினி, ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் வேலையை தொடங்கியுள்ளார். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட்டு 2021 சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். ரஜினி இப்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டார், இதன் பின்பு இயக்குநர் சிவா படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் 2020 மத்தியில் வெளியாகும். அதன் பின்பும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

2021 பொங்கலுக்கு வெளியாகும் படத்துக்கு முன்பே அவர் அரசியல் கட்சியை அறிவித்து விடுவார் என்றும் அதன் பின்பு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார் என்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள். ரஜினிகாந்த் சினிமாவில் நடித்துக்கொண்டே எம்.ஜி.ஆரை போல அரசியலில் ஜொலிப்பாரா என்பதை காலமும் அரசியல் சூழலும்தான் முடிவு செய்யும்.