சுத்திகரிப்பான்கள் காற்றில் பரவும் ஏரோசெல்களை 99% அழிக்கும் - மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள்

சுத்திகரிப்பான்கள் காற்றில் பரவும் ஏரோசெல்களை 99% அழிக்கும் - மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள்
சுத்திகரிப்பான்கள் காற்றில் பரவும் ஏரோசெல்களை 99% அழிக்கும் - மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள்

காற்றின்மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை விளக்குகின்றனர் மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள். 

மெல்போர்னில் கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் 100 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல வழிகளை கற்றுக்கொடுத்திருக்கிறது. மெல்போர்னில் கொரோனா இரண்டாம் அலை பரவியபோது சுகாதார ஊழியர்கள், மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள், முதியோர் இல்லங்களில் இருந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆராய்ச்சியாளர்கள் பலர் ஒன்றுசேர்ந்து சுகாதார நிலையங்களில் கொரோனா அதிகம் பரவுவதற்கான காரணத்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதிலிருந்து காற்றின்மூலம் கொரோனா பரவலைக் கண்டறிந்த அவர்கள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்திருக்கின்றனர்.

அதில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல், பிபிஇ கிட் அணிதல், தரமான மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தாலும் காற்றின் மூலம் பரவுதலைத் தடுப்பது என்பது மிகவும் சிரமமான பிரச்னையாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

உட்புற காற்றோட்ட வசதியை அதிகரிப்பதன்மூலம் கொரோனா பரவலை கையாள்வது எப்படி என்று நிபுணர்கள் கூறுவதைக் கேட்கிறோம். ஆனால் அவை புதிதாக கட்டும் மருத்துவமனைகளில் என்னென்ன செய்யலாம் என்பதை கூறுகிறதே தவிர அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தாது என்கின்றனர் மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள். எனவே ஏற்கெனவே உள்ள கட்டிடங்களில் காற்றோட்ட வசதிக்காக சில மாற்றங்களை உருவாக்கலாம் என்கின்றனர் அவர்கள்.

நெகட்டிவ் அழுத்த அறைகள்

நெகட்டிவ் அழுத்த அறைகள்(negative pressure rooms) உள்ள மருத்துவமனைகள் தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அந்த அறைகளைப் பயன்படுத்தலாம். நெகட்டிவ் அழுத்த அறைகள் என்பவை தொற்றுநோய்களான காசநோய், அம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோயாளிகளுக்கு அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் அறைகள்.

இந்த அறைகளில் நோயாளி தங்கியிருக்கும் அறைக்கு முன்பு கதவுடன் கூடிய ஓர் அறை (anteroom) இருக்கும். இந்த அறைகளில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதனால் நோயாளியின் அறை திறந்திருந்தாலும் நோய்த்தொற்றானது காற்றின்மூலம் அவ்வளவு எளிதில் பரவாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால் இந்த அறைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை என்பது சற்று கவலைக்குரியது என்கின்றனர். இந்த அறைகள் இல்லாத மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தனி அறை ஒதுக்கி அந்த அறை கதவுகளை முடிந்தவரை திறக்காமல் இருப்பது தொற்றுப் பரவலை தடுக்கும் என்கின்றனர். மேலும் அந்த அறைகளில் காற்றோட்ட வசதி இருப்பதும் மிகமிக அவசியம் என்கின்றனர்.

காற்று சுத்திகரிப்பான்கள்

நெகட்டிவ் அறைகள் இல்லாத மருத்துவமனைகள் HEPA ஃபில்டர்களுடன் கூடிய காற்று சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர். சிறந்த சுத்திகரிப்பான்கள் காற்றின்மூலம் பரவும் ஏரோசல்களை அழிக்கும் திறன்கொண்டவையாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

குறிப்பாக 2 சிறிய காற்று சுத்திகரிப்பான்கள் ஒரு நோயாளி அறையில் வைக்கும்போது அவை காற்றில் பரவியிருக்கும் 99% ஏரோசெல்களை 5.5 நிமிடங்களில் அழித்துவிடும் என்கின்றனர். இவை எளிதாக கிடைக்கக்கூடியது மேலும் விலை மலிவானதும்கூட என்கின்றனர். இதனை மருத்துவமனைகள் திறம்பட பயன்படுத்தும்போது தீவிர பாதிப்படைந்த நோயாளியிடமிருந்து குறைந்த பாதிப்புள்ள நோயாளிக்கு நோய்க்கிருமி எளிதில் பரவுவது தடுக்கப்படும் என்கின்றனர். மேலும் ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளியின் இடைவெளியை அதிகரிப்பது காற்றில் ஏரோசல்களின் அடர்த்தியை குறைக்கும் என்கின்றனர். முடிந்தவரை நோயாளிகளின் படுக்கைகளுக்கான இடைவெளியை அதிகரிப்பது அவசியம் என்கின்றனர்.

புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளில் மேற்சொன்ன வசதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வது எதிர்காலத்தில் வேறு நோய்த்தொற்றுகளின் தாக்கத்தை குறைப்பதில் உதவியாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com