நெற்றியில் பொட்டு, காஞ்சிபுரம் பட்டு, அக்ரஹார வீடு, சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், 4 கோயில் ஷாட்ஸ், இட்லி, தோசை, க்ளின் ஷேவ் செய்த பையன்... தேவைக்கு ஏற்ப சில 'தலைவர்' வசனங்கள். 'இதோ நீங்கள் எதிர்பார்த்த தமிழ்நாட்டு சினிமா ரெடி' என தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன் என்ற பெயரில் பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறார்கள் சில பாலிவுட் இயக்குநர்கள். தமிழ்நாட்டில் இதைக் கடந்து நிறையவே இருக்கின்றது என்பதை அவர்களுக்கு யார் புரியவைப்பது?
அவர்களுக்கு பெரிய பொருட்செலவெல்லாம் இருப்பதில்லை. ஒருமுறை தமிழ்நாட்டிற்கு டிக்கெட் போட்டுவிட்டு 3 மணி நேர விஷூவல்ஸை எடுத்து தமிழ்ப் படத்தை எடுக்க விரும்பும் பாலிவுட் இயக்குநர்களுக்கு பகிர்ந்துவிடுகிறார்கள். முன்னும் பின்னும் காட்சிகளை மாற்றி மாற்றி வைத்து இடையில் 'தலைவர் ரஜினி' போன்ற வசனங்களை சேர்த்துவிட்டு, 'தமிழ்நாட்டில் படம் ஹிட்' என்றும் எதிர்பார்க்கிறார்கள். இதனாலேயே பாலிவுட் இயக்குநர்கள் தொடும் தமிழ்நாட்டு ஃபர்னிச்சர்களை தமிழ் மக்கள் பார்ப்பதேயில்லை.
அப்படியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படம்தான் 'மீனாட்சி சுந்தரேஸ்வர்'. திருமணத்திற்கு பிறகு வேலை நிமித்தமாக பிரிந்துவாழும் தம்பதிகள் குறித்து இந்தப் படத்தை இயக்குநர் விவேக் சோனி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கான டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் அக்ரஹாரத்து வீடு, மதுரை, மல்லிப்பூ ரெஃபர்னஸ்களை கடந்து சென்றால் அங்கே ரஜினி நிற்கிறார். கொஞ்சம் ஃபார்வேடு செய்யலாம் என்றால், மீண்டும் 'நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது' என்று வசனம் பேசுகிறார் கதாநாயகி. 'ரஜினியை குத்தைகைக்கு எடுத்து பாலிவுட் இயக்குநர்கள் செய்யும் செயல்களைப் பார்த்தால், 'அவர விட்டுருங்கயா' என கெஞ்ச தோன்றுகிறது.
மாங்கல்யம், அக்ரஹார வீடு, வேஷ்டி சட்டை, காஞ்சிபுரம் சேலை, கோயில்களுக்கு ஒரு பேனிங் ஷாட் வைத்துவிட்டு இறுதியில் டிரெய்லருக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநரை பாராட்டலாம். டிரெய்லரின் இறுதியில், 'காப்பாத்துங்க' என ஹீரோ கதறுகிறார். அது அவரின் கதறல் அல்ல... டிரெய்லர் பார்க்கும் ஒவ்வொரு தமிழர்களின் கதறல். இயக்குநரின் இந்தக் குறியீடு கவனம் பெறுகிறது.
'பாலிவுட் எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது. தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்' என டிரெய்லர் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் ஒருவர், ''தமிழர்கள் அனைவரும் பிராமணர்கள் அல்ல என்பதை பாலிவுட் எப்போது புரிந்துகொள்ளும் என்று தெரியவில்லை. தமிழர்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல. இப்போதெல்லாம் பிராமணர்கள் கூட இப்படி ஆடை அணிந்து பேச மாட்டார்கள். எங்கள் சூப்பர் ஸ்டார் மீதான உங்கள் அப்செஷனை நிறுத்துங்கள்!'' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் குறித்தும், அவர்களின் வாழ்வியல் குறித்தும் எந்த வித குறைந்த பட்ச ஆய்வும் செய்யாமல், அது குறித்து படிக்காமல் படம் இயக்குவது ஆபத்தானது. ஸ்டிரியோ டைப்புகள் மூலம் குறிப்பிட்ட ஒரு விஷயம் தொடர்ந்து திணிக்கப்படுகிறது அல்லது அது ஒரு கட்டத்தில் வெறுப்பை உழிந்துவிடுகிறது. போதும் பாலிவுட் எங்களை தனியாக விட்டுவிடுங்கள்!