கொரோனாவிற்குப் பிறகான மருத்துவத்துறை மாற்றங்கள்!

கொரோனாவிற்குப் பிறகான மருத்துவத்துறை மாற்றங்கள்!
கொரோனாவிற்குப் பிறகான மருத்துவத்துறை மாற்றங்கள்!

மருத்துவ சிகிச்சைகளின் கட்டணத்தை கொரோனா அதிகரிக்கவே செய்யும். ஏற்கெனவே பலமிழந்து உள்ள மருத்துவர் - நோயாளி உறவை இது மேலும் பலமிழக்கச் செய்யும்.

கொரோனா வைரஸ் பரவல் விமான நிறுவனங்கள் முதல் நடைபாதை வியாபாரம் வரை அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை நேரடியாக எதிர்கொள்ளும் மருத்துவத் துறையில் மற்ற துறைகளை விட இதன் தாக்கம் மிகவும் அதிகம். இந்த பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு மருத்துவத்துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழலாம்? மருத்துவர் சென்பாலனிடன் கேட்டோம்.  

‘’தற்போது மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிப் பிரிவுகளை அதிக காற்றோட்ட வசதி உடையதாக மாற்றி அமைக்க வேண்டி வரும். பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் குளிரூட்டப்பட்ட சிறு சிறு அறைகளில் கன்சல்டண்ட் சிறப்பு மருத்துவர்கள் தற்போது நோயாளிகளைப் பார்த்து வருகின்றனர். இனி இதுபோன்ற அறைகளில் புறநோயாளிகளைப் பார்ப்பதில் தயக்கம் காட்டுவர்.

அதேபோல அரசு மருத்துவமனைகளில் ஒரே அறையில் பெரும் எண்ணிக்கையில் புற நோயாளிகளைப் பார்க்கும் தற்போதைய முறையிலும் மாற்றம் வரும். சிறு சிறு கிளினிக்களிலும் மருத்துவ ஆலோசனை அறையை பெரிதாக, காற்றோட்டமுடையதாக அமைக்க வேண்டிய நிர்பந்தம் நேரும். எதிர்காலத்தில் மருத்துவ ஆலோசனை அறைகளின் அளவு, காற்றோட்ட வசதி குறித்த அரசு வழிகாட்டும் நெறிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்படலாம்.

நிலமதிப்பு அதிகமுள்ள, முக்கிய இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகள், கிளினிக்களுக்கு இதனால் செலவீனம் அதிகரிக்கும். மருத்துவமனை வடிவமைப்பிலேயே இனி மாற்றங்கள் வரலாம்.

ஏர் ப்யூரிபையர் எனப்படும் காற்று சுத்திகரிக்கும் கருவிகளின் பயன்பாடு மருத்துவத்துறையில் அதிகரிக்கும். இவை தற்போதே சில கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் வரவேற்பு பகுதி, காத்திருக்கும் அறை, ஆலோசனைப் பகுதி, அவசரசிகிச்சை பகுதி போன்ற இடங்களில் காற்று சுத்திகரிப்பான்களின் பயன்பாடு அதிகரிக்கும். 

அறுவை சிகிச்சைகளுக்கு முன், தற்போது இரத்தம் உறைதல் சோதனைகள், எச்.ஐ.வி, ஹெப்பாடைடிஸ் பி சோதனைகள் செய்யப்படுவது போல கொரொனா சோதனையும் கட்டாயமாகும். இதனால் அறுவை சிகிச்சைகளுக்கான செலவு அதிகரிக்கும். 

அதேபோல கொரோனா பாசிடிவ் நோயாளிகளுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு காரணமாக கட்டணம் அதிகரிக்கும்.

இப்பெருந்தொற்று முடிந்தாலும் கொரொனா தொற்று நோயாளிகளுக்கென தனி தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யு), தனி வார்டுகள், தனி அறைகள் போன்றவை மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கொரோனா நோயாளிகளுக்கு என தனி அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்படலாம்.

மருத்துவத்துறையில் பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்படும். மருத்துவப் பணியாளர்களின் அதிக இறப்பு விகிதம் காரணமாக அவர்களுக்கான ஆயுள் காப்பீட்டு பிரீமியம் அதிகரிக்கலாம்.

எதிர்காலங்களில் இரண்டு தினங்களுக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல் இருந்தாலே கொரோனா சோதனை செய்யப்படலாம். இதனால் சாதாரண சளி காய்ச்சலுக்குக் கூட மருத்துவ செலவு அதிகரிக்கும்.

அதிகரிக்கும் மருத்துவ செலவு காரணமாக மருத்துவக்காப்பீடு பிரீமியம் தொகை அதிகரிக்கும். இலவச மருத்துவ முகாம்கள் நடத்தும் போதும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதனால் இலவச முகாம்கள் நடத்த ஆகும் செலவும் அதிகரிக்கும். இவற்றின் எண்ணிக்கையும் குறையலாம்.

கொரோனா சோதனை செய்யாமல் சிகிச்சை அளித்து ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அல்லது மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரும் நிலையும் வரலாம்.

மருத்துவமனைகளின் மூலம் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை விதிகள் நடைமுறைப்படுத்தப்படும். இத்தனை நபர்களுக்கு மட்டுமே ஒரே சமயத்தில் அனுமதி, சானிடைசர் வசதி, மாஸ்க் அணிவது கட்டாயம், பார்வையாளர் அனுமதி நேரம் குறைப்பு இது போன்று விதிகள் வரலாம். திடீர் ஆய்வுகள் நடத்தப்படலாம். விதிகளை முறையாக பின்பற்றாத மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்படாலம். தடையில்லா சான்றுகள் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

ஒட்டு மொத்தமாக நோக்கும் போது மருத்துவ சிகிச்சைகளின் கட்டணத்தை கொரோனா அதிகரிக்கவே செய்யும். ஏற்கனவே பலமிழந்து உள்ள மருத்துவர்-நோயாளி உறவை இது மேலும் பலமிழக்கச் செய்யும்'' என்கிறார் அவர்.

புகைப்படங்கள்: ஜாக்சன் ஹெர்பி  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com