சொந்த நாட்டு மக்களையே குடியுரிமையை நிரூபிக்க சொல்வது வேதனை: சிந்தன்

சொந்த நாட்டு மக்களையே குடியுரிமையை நிரூபிக்க சொல்வது வேதனை: சிந்தன்
சொந்த நாட்டு மக்களையே குடியுரிமையை நிரூபிக்க சொல்வது வேதனை: சிந்தன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் மட்டும் பொதுமக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தன் குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவை குறித்து பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு:- 

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது என்ன?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து வந்த அகதி மக்களில் இந்து, பெளத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக என கொண்டுவந்துள்ள திருத்தச் சட்டம்தான் CAA எனப்படுகின்ற குடியுரிமை திருத்தச் சட்டம்.

இந்தச் சட்டம் இப்போது என்ன நிலையில் உள்ளது?

நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி கையெழுத்தும் இடப்பட்டுவிட்டது. சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்கிறார்களே அது உண்மைதானா?

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சட்டத்தை இந்தியாவில் அமலாக்கக் கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் நமது அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 14 (சமத்துவம்), பிரிவு 21 (வாழ்வதற்கான உரிமை), பிரிவு 15 (ஒடுக்குமுறையல்லாத நிலை) என்பவைகளுக்கும், கூடுதலாக நமது நாட்டின் கொள்கையான சார்பின்மை (Secular) என்பதற்கும் விரோதமான ஒன்றாகும்.

நீதிமன்றம் இந்தச் சட்டத்தை நிராகரிக்க அதிகாரம் உண்டா?

நிச்சயமாக உண்டு. அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுப்பதால் இந்தச் சட்டத்தை நிராகரிக்க முடியும். குடிமக்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வசதியாக saynotocab.in என்ற இணையதளத்தை உருவாக்கி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பொதுமக்கள் அனைவரும் மின்னஞ்சல் அனுப்பும் வகையில் ஜனநாயக முறைகளில் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமலாக்க மாட்டோம் என சொல்ல முடியுமா?

அரசமைப்புச் சட்ட விரோதமான ஒரு சட்டத்தை மாநிலங்கள் அமலாக்க வேண்டிய அவசியமில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்கம், பஞ்சாப், புதுவை உட்பட பல மாநிலங்களும் இந்தப் பட்டியலின் இணைகின்றன. நீதிமன்றத்தில் இதுவும் கணக்கில் எடுத்துப்படக்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்கள் மட்டும் விடுபட்டுள்ளார்கள்?

நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த விளக்கத்தின் படி, இந்தச் சட்டத்தில் குறிப்பிடும் நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அகதிகளாக பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை, எனவே அவர்களை சட்டத்தில் உள்ளடக்கவில்லை என்கிறார்.

முஸ்லிம்களாக பிறந்தால் அந்த நாடுகளில் வன்முறைக்கு ஆளாக வாய்ப்பில்லை என்பது உண்மையா?

அமித்ஷா குறிப்பிட்ட பதில் உண்மையல்ல. நமது பிரதமர் நரேந்திர  மோடியே பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பிரச்சனை குறித்து பேசியிருக்கிறார். அஹமதியார்கள் பிரச்சனையும் பாகிஸ்தானில் உள்ளது. ஒருவர் பிறக்கும் மதம் காரணமாக அவர் பாதுகாப்பாக இருப்பார் எனச் சொல்வது உண்மை அல்ல. மலாலா, தஸ்லிமா நஸ்ரின் ஆகிய செயல்பாட்டாளர்கள் எதிர்க்கப்பட்ட அனுபவங்களும் நாம் அறிந்ததே.

அகதிகள் குறித்த இந்தச் சட்டத்தில் யாராவது தெரிந்தே விடப்பட்டுள்ளார்களா?

ஆம், இலங்கை அகதிகளைக் குறித்து இந்தச் சட்டம் பேசவில்லை. மியான்மர் நாடு குறித்தும் இந்தச் சட்டத்தில் இல்லை. ஒருவேளை எல்லாவற்றையும் உள்ளடக்கியிருந்தால் இந்தச் சட்டம் அகதிகளுக்கு உதவும் மனிதாபிமான சட்டமாக அமைந்திருக்கலாம். இப்போது அதுமத வேறுபாட்டை மைய விவாதமாக மாற்றும்  அரசியல் நோக்கம் கொண்டதாகவும், அரசமைப்புச் சட்டத்தை மீறுவதற்காகவே வடிக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

இந்தச் சட்டம் வெளிநாட்டில் இருந்து வந்த அகதிகளைப் பற்றித்தானே பேசுகிறது. அகதிகளுக்கு உதவுவதில் என்ன தவறு?

இந்தியா முதலில் அகதிகள் குறித்த கொள்கையை தெளிவாக வகுக்க வேண்டும். இந்திய உச்ச நீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின்படி அகதியாக இந்தியா வந்த யாரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது. இப்போது நாம் 1946 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர் சட்ட அடிப்படையில் ஒரு கொள்கையை கொண்டிருக்கிறோம். அந்த சட்டத்தில் ‘அகதி’ என்ற சொல்லே இல்லை. ஒரு தெளிவான கொள்கையை வகுக்காதபோது அண்டை நாடுகளோடு நமக்கு உள்ள உறவுக்கு ஏற்ப அகதிகளை கையாளும் போக்கு உருவாகிறது.

அகதிகளுக்கு உதவுவதாக இருந்தால் இந்த கொள்கையில்தான் மாற்றம் வர வேண்டும். அகதிகள் அல்லாது வேறு நாட்டில் இருந்து பொருளாதார தேவைக்காக இங்கே உரிய ஆவணங்களோடு வசிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆவணம் இல்லாமல் சட்ட விரோத குடியேறிகள் உள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர் பிரச்சனையும் ஒரு உலக பிரச்சனை ஆகும். சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் இந்தியர்களும் அப்படி வாழ்கிறார்கள். சிலசமயம் இங்கிலாந்துக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பகுதி நேரப் பணியில் ஈடுபட்டு சிக்கலுக்கு ஆளாவது உண்டு. இதுபோன்ற சிக்கல்களை கணக்கில் எடுத்து மேற்சொன்ன சட்டம் கொண்டுவரப்படவில்லை. இதையெல்லாம் விவாதிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு சட்டத்தை அனுப்பினார்கள். ஆனால் அந்த குழு பெயரளவுக்கு மட்டுமே விவாதம் செய்தது. பாதிப்புகளை முழுமையாக உள்ளடக்கி சட்ட வரைவை திருத்தவில்லை.

இதனால் இந்தியாவில் வாழும் மக்களுக்கு என்ன பாதிப்பு? அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் இப்போதுள்ளது போலவே வாழ்வது சாத்தியம்தானே?

அகதிகள் பற்றி தெளிவில்லாத இந்தச் சட்டத்தால் இலங்கை அகதிகள் உட்பட உண்மையாகவே உதவி தேவைப்படுவோருக்கு உதவி கிடைக்காது.

அதே சமயம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம் எரிகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன.அசாமின் போராட்டம் சட்டவிரோதக் குடியேறிகள் குறித்த பிரச்சனை மற்றும் அசாம் மாநிலத்தின் தன்மை காரணமாக எழுகிறது. இந்தியா முழுவதும் நடக்கும் போராட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தின் சார்பற்ற தன்மையை பாதுகாப்பதற்காக எழுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் சார்பற்ற தன்மை பாதிக்கப்பட்டால் அது இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்குமே பாதிப்பு ஆகும். மேலும் அடுத்தடுத்து பாஜக வைத்திருக்கும் திட்டங்களே இந்த சூழலுக்கு காரணமாகின்றன. பாஜகவும் அது தெரிந்தேதான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதனால்தான் பேச்சுவார்த்தைக்கு பதிலாக அடக்குமுறையை கையில் எடுக்கிறது. துப்பாக்கிகள் வெடிக்கின்றன.

இந்தியாவை இந்த நடவடிக்கை பாதிக்கும் என்ற முடிவிற்கு எதிர்க்கட்சிகள் எப்படி வருகிறார்கள்? எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே திரித்து சொல்லப்படுகிறதா?

பாஜகவின் திட்டம் என்ன என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை கூறிவிட்டார். ஏற்கனவே அசாமில் அதன் தனிப்பட்ட சூழலை கணக்கில் கொண்டு அமலாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற திட்டம் இந்தியா முழுவதும் அமலாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு என ஏற்படுத்தப்பட முயற்சிக்கின்றனர். அசாமில் இத்திட்டம் அமலானபோது 19 லட்சம் பேர் குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் வெளியே நிறுத்தப்பட்டனர். நாடு முழுவதும் இப்படி ஒரு திட்டம் அமலானால் அதுஇந்திய குடியுரிமையை இழந்தவர்கள் என ஒரு பகுதி உருவாக வழிவகுக்கும்.

அமித்ஷா கூறிவரும் திட்டத்தின்படி இந்திய குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது முகாம்களின் வாழ வேண்டிய நிலை ஏற்படும். குடியுரிமைச் சட்டத்திருத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து அவர்கள் செய்யவிருக்கும் வேலைகள் குறித்து அவர்களே சொல்லிவருவதன் ஆபத்தான மறுபக்கத்தைத்தான் எதிர்க் கட்சிகள் பேசுகின்றன. (மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முகாம்கள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இதை உட்பட எதிர்க் கட்சிகள் எதிர்த்து வருகின்றன)

இந்தியாவின் குடிமக்கள் யார் என்பதை பதிவு செய்வது தவறா?

இந்திய நாடும் அதன் பரப்பளவும் மிகப்பெரியது. குடிமக்கள் பதிவேடு என்ற ஒரு திட்டத்தை செயலாக்க பல கோடி ரூபாய்கள் செலவு பிடிக்கும். அசாமில் மட்டும் 1500 கோடி செலவானது. மேலும், தான் ஒரு இந்தியன் என்பதை ஒவ்வொரு குடிமகனையும் ஆவணங்களைக் கொண்டு நிரூபிக்கச் செய்வது பெரும் வேதனையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் டிமானிட்டைசேசன் ஏற்படுத்திய அதே விளைவைத்தான் சமூகத்தில் இது ஏற்படுத்தும்.

அசாம் என்.ஆர்.சி அனுபவங்கள் நமக்கு அதையே காட்டுகின்றன. ஏழ்மையிலும் ஏழ்மையாக வாழ்கிற மக்கள் ஏராளமானோர் இப்போது குடியுரிமையை இழந்துள்ளனர். அசாமின் சூழல் வேறு, இந்தியா முழுவதும் இத்திட்டம் அமலானால் விளைவுகள் படு மோசமாக இருக்கும்.

குடிமக்கள் யார் அவர்களுக்கு என்ன வசதி தரவேண்டும் என்பது ஏற்கனவே உள்ள  அரசின் நடைமுறைகளிலேயே தெரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். ஒரு குடிமகன் தன் தேவைகளுக்காக அரசை அணுகும்போது அரசுத்துறை அதிகாரிகள் அதை உறுதி செய்வார்கள். வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, சொத்து ஆவணங்கள் என பல்வேறு நிலைகளில் இது நடக்கும். இப்படி ஆவணம் எதுவும் இல்லாத அதே சமயம் இந்தியாவிலேயே வசித்துவரும் பெரும் மக்கள் திரள் உள்ளனர். ஒரே நேரத்தில் பல கோடிப்பேர் தங்களை நிரூபிக்கப்பட வேண்டி வந்தால், அது பெருங்கொடுமையாகும். மேலும் இந்த திட்டம் திணிக்கப்பட்டால் நாடு முழுவதும் ‘இரண்டாம்நிலைகுடிமக்கள்’ என ஒரு பகுதி உருவாகும். மேலும் இத்திட்டத்தில் அரசியல் தலையீடும் இணையுமானால் அது மத, இன, சாதி பாகுபாடுகளை அதிகப்படுத்தி நாட்டை நரகமாக்கும்.

(தான் படித்த படிப்புக்கு ஆவணத்தை கொடுக்க வக்கற்ற நிலையில் ஆட்சியாளர்களையே கொண்டுள்ள நாடு இந்தியா என்பதை இங்கே நினைவில் கொள்வது நல்லது)

சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்ற வேண்டாமா?

சட்டவிரோத குடியேற்றத்தை கண்காணிக்க நம்மிடம் ஏற்கனவே ஏற்பாடுகள் உள்ளன. அதை வலுப்படுத்துவதோ, குறை களைவதோ புதிய சட்டத்தின் நோக்கமாக இல்லை. அதனால்தான் சட்டவிரோதக் குடியேற்றத்தையும், அகதி நிலைமையையும் குறித்த தெளிவான விளக்கம் எதுவும் சட்டத்தில் வழங்கவில்லை. மதத்தை ஒரு அளவுகோலாக குறிப்பிடுவதால், முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து வெளியேற்றும் விதமாக மாறிவிடுகிறது. இந்த சட்டத்தை அமலாக்கினால் இந்தியரான ஒருவரும் கூட அவர் மதம் காரணமாக குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட நேரிடலாம். சட்டவிரோதக் குடியேறி, முஸ்லிம் அல்லாதவராக இருக்கும் நிலையில், அவர் இந்தியக் குடியுரிமை பெற வாய்ப்பும் உருவாகிறது.

சட்டவிரோதக் குடியேற்றம் என்பது என்ன?

ஏற்கனவே உள்ள 1955 சட்டத்தின்படி கடவுச் சீட்டு இல்லாமல் இந்தியாவுக்குள் வந்து வசிக்கும் வேற்று நாட்டவர் சட்டவிரோதக் குடியேறி ஆவார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இதனை மாற்றுகிறதா?

ஆம். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் கடவுச் சீட்டு இல்லாமல் வந்தாலும் அவர் சட்டவிரோதக் குடியேறியாக கருதப்பட மாட்டார். எனவேதான் நாம் இந்தச் சட்டம் தன் நோக்கமாக சொல்கிற அகதிகளுக்கு உதவி என்பதை உண்மையில் செய்யவில்லை என்கிறோம். மேலும் இந்த சட்டத்தில் 2014 டிசம்பர் 31 என நிர்ணயித்திருக்கும் தேதி, இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டிய கால அளவு மற்றும் மத அடிப்படையிலான துன்புறுத்தல் என்பதற்கு தரப்பட்ட விளக்கம் என எதுவுமே தெளிவாக இல்லை.

இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு திடீரென வந்த ஒன்றா?

இல்லை. பாஜக இப்படி ஒரு சட்டத்தை முன்வைத்தபோது இருந்தே எதிர்ப்பும் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களை கவனித்தாலே இது புரியும். மேலும் மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் வைத்து வருகிறது. விமர்சனங்களை கணக்கில் கொள்ளாதது மட்டுமல்ல, நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையையும் உரிய முறையில் நடத்தாமல், விதிகளை காற்றில் பறக்கவிட்டது பாஜக. முழுக்க முழுக்க தன் அரசியலை மட்டுமே மனதில் வைத்து அவர்கள் செயல்படுகிற காரணத்தால்தான் பிரச்சனை வெடித்திருக்கிறது.

அகதிகளின் நிலைமை குறித்து கம்யூனிஸ்டுகள் தீர்மானம் போட்டுள்ளனர். ஆனால் இப்போது தங்களின் கருத்தை மாற்றிக்கொண்டு எதிர்க்கிறார்கள் என பாஜக தரப்பு குற்றம்சாட்டுகிறதே?

அகதியாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய அரசு உதவி செய்யவேண்டும். குடியுரிமைக்காக அவர்கள் விண்ணப்பித்தால் மனித நேய அடிப்படையில் குடியுரிமை வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்பதுதான் எந்தவொரு ஜனநாயக மனநிலை கொண்டவருடைய நிலைப்பாடாகவும் இருக்க முடியும். அகதிகள் பல்வேறு சூழல்களில் இந்தியாவை நோக்கி வருகின்றனர். குறிப்பாக இலங்கை அகதிகள் பற்றி தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பது அகதிகளுக்கு உதவக் கூடாது என்பதால் அல்ல. குடியுரிமைச் திருத்த மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி 2 முக்கியமான திருத்தங்களைக் கொடுத்தது. அது இந்த சட்டத்தில் மத வேறுபாடு கூடாது என்பது, இரண்டாவது நாடுகள் சிலவற்றை மட்டும் குறிப்பிடக் கூடாது என்பது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் மார்க்சிஸ்ட் கட்சி சமர்ப்பித்த ஆவணத்தில் தங்களை நிலைப்பாட்டை மேலும் தெளிவாக்கியுள்ளனர். அதன்படி அகதிகள் குறித்த கொள்கை உருவாக்கிட வேண்டும் என்பதும் குடியுரிமை கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்பதுமே கட்சியின் நிலைப்பாடாகும். பரந்துபட்ட இந்தியாவில் மாநிலங்களின் நிலைமைகளை கணக்கில் கொண்டு அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை சிதைக்காமல் அதை மேற்கொள்ள வேண்டும். பாஜகவின் திட்டமோ, நோக்கமோ அது இல்லை. சட்டத்தின் உள்ளடக்கமும், இப்போது விமர்சனங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளும் அதை தெளிவாக்குகின்றன.

இலங்கைத் தமிழர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எஸ்.ஓ.பி என்ற வழிமுறை உள்ளது. அதற்கு தடையாக இருப்பது ஒரு சுற்றறிக்கைதான் என்கிறார்களே?

மேற்சொன்ன சட்டம் இலங்கைத் தமிழர் பற்றி பேசவில்லை. மேலும் நாட்டில் அகதிகள் குறித்த ஒரு கொள்கை இல்லை. மற்றபடி இலங்கையில் இருந்து ‘இந்தியத்தமிழர்’ மற்றும் இலங்கைத் தமிழர் என இரண்டு அடையாளங்களைக் கொண்ட மக்கள் இப்போதும் அகதிகளாக இங்கே உள்ளனர். அவர்களில் இங்கேயே குடியுரிமை பெற விரும்புவோருக்கு நாம் குடியுரிமை கேட்கலாம். நாடற்றவர்களாக இருந்த மலையகத் தமிழர் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றது போல சில முயற்சிகள் எடுப்பது அவசியம். அதில் சிலருக்கு எஸ்.ஓ.பி முறை உதவும். வாக்குரிமை இல்லாது இதர உரிமைகள் பெறுதல், அல்லது மறுவாழ்வுக்கு உதவுதல் என எல்லாமும் பேசலாம்தான், ஆனால்  அகதி நிலைமை குறித்து எந்த ஆய்வையும் அடிப்படையாகக் கொள்ளாத குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அரசியல் நோக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் இது எதையுமே விவாதிக்க வழியில்லாத நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். அவசர அவசரமாக குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழ் அறிவிக்கையும் வந்துவிட்டது. அந்த அரசியலும், மூர்க்கத்தனமான போக்கும்தான் தடுக்க வேண்டிய அபாயங்கள்.

நம் நாட்டு பொருளாதாரமே சிக்கலில் உள்ள நிலையில் அகதிகளை ஏன் வரவேற்க வேண்டும்?

அகதிகள் என்பவர்கள் ஒரு நாட்டில் வாழ முடியாமல் இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுகிறவர்கள். அதில் படித்த, பணித் திறன் கொண்ட பல்வேறு பகுதியும் இருப்பார்கள். ஒருவர் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குள் புகுந்த அடுத்த நொடியே அவருக்கு குடியுரிமை கிடைக்காது. தஞ்சம் புகுந்த நாட்டில் நிவாரணம் பெற்று திரும்பச் செல்ல முடிந்த சிலர் திரும்புவார்கள். திரும்பவே முடியாத நிலைமையில் இருப்பவர் சில ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து, உழைத்து பிழைக்க முயற்சிப்பார். அப்படி உழைத்து நம் நாட்டிற்கு பயன்படும் ஒருவர் சில ஆண்டுகள் அப்படி பங்குசெலுத்திய பிறகு அதனை கணக்கில் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்குவதை பரிசீலிக்கலாம். அப்படி செய்வதால் பொருளாதாரம் கெடாது. ஆனால் குடியுரிமையை ஒரு அரசியல் சிக்கலாக மாற்றி குடிமக்களுக்குள்ளேயே மோதச் செய்தால் நிச்சயம் பொருளாதாரத்திற்கு பாதிப்பு எழும். இப்போது நடப்பது மோதல்களை உருவாக்கும் தயாரிப்புத்தான்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை சில முஸ்லிம்களே ஆதரிக்கிறார்கள் தெரியுமா?

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை முன்வைத்த சாவர்க்கரும், இந்தியாவிற்கு சேவையாற்றி மறைந்த அபுல் கலாம் ஆசாத்தும் அவரவர் மதங்களால் மட்டும் அடையாளம் காணப்படலாமா?. ஒருவரின் கருத்து என்ன என்று பார்க்க வேண்டுமே தவிர அவர் என்ன மதம் என பார்க்கக் கூடாது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவுக்கு எதிரானது. அதை உணர்ந்தவர் யாராக இருந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற அதை தடுத்துத்தான் ஆக வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகிய திட்டங்களை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பார்ப்பது அவசியமா?

நிச்சயம் தொடர்புபடுத்தித்தான் பார்க்க வேண்டும். அவர்கள் அமலாக்கும் விதமும், விளைவுகளும் அந்த அபாயத்தை நமக்கு உணர்த்துகின்றன.

இந்த சட்டத்தை கொண்டுவந்ததால் முஸ்லிம் நாடுகள் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு உண்டா?

பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர். உண்மையில் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிக்கலாமோ என அச்சப்பட வாய்ப்புள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்தச் சட்டத்தின் ஒடுக்குமுறை அம்சங்களை விமர்சித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் வகுப்புவாத அரசியலுக்கு இது உதவி செய்யும் என்பதால் இதுபோன்ற சட்டங்களை அவர்கள் தடுக்க முயல மாட்டார்கள். ஜனநாயக உள்ளங்களே இச்சட்டத்தை எதிர்ப்பார்கள்.

பல லட்சம் பேர் குடியுரிமையை இழந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?

நாம் இந்த நாட்டை அதன் மேன்மையை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். எனவே மேற்சொன்ன கொடூரத்தை கற்பனையில் நினைப்பதும் கூட தவறாகும். அப்படி எதுவும் நடக்காமல் தடுப்பதே நமது வேலை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com