மெரினாவும் தமிழக அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று. ஆம், எப்போதெல்லாம் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் மெரினாவில் புதைக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் தமிழக அரசியல் வரலாறு திருப்பங்களை கண்டு வருகிறது. அதுவும் திராவிட அரசியல் வரலாற்றில் பலருக்கு மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்துள்ளது. இப்போதும் கூட மெரினா அத்தகைய அரசியல் மாற்றத்தை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. அதை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனையடுத்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக அன்று இரவே உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கை காலை விசாரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டனர்.
அதன்பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கருணாநிதி நினைவிடம் அருகே நாள்தோறும் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் இன்று காலை 11 மணி அளவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு பின்பு மு.க.அழகிரி கொடுத்த பேட்டி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் "கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாக தெரிவித்தார். காலம்தான் இதற்கு பதில் சொல்லும் எனக் கூறிய அழகிரி, தன் தந்தையிடம் கட்சி தொடர்பான தன் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “நான் திமுகவில் தற்போது இல்லை. எனவே திமுக செயற்குழு கூட்டம் பற்றி கூற முடியாது” என்றார். இந்தப் பேட்டி இப்போது தமிழக அரசியலில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
இப்போது ட்விட்டரில் Marina என்றும் MK Alagiri என்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட அடிக்க தொடங்கியுள்ளது. மெரினாவில் அரசியல் தலைவர்கள் புதைக்கப்பட்டால், அவர்கள் தலைமையேற்றிருந்த கட்சிகள் பிளவுப்படும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே உலா வரத்தொடங்கின. இதற்கு சில உதாரணங்களும் இருக்கின்றன. திமுகவின் நிறுவனரான அண்ணாதுரை முதல்வராக இருந்து இறந்தப் பின்பு மெரினாவில்தான் புதைக்கப்பட்டார். அதன்பின்பு, கட்சிக்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர் கருணாநிதி. அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக-வை தொடங்கி 13 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அண்ணா மறைவுக்கும் எம்.ஜி.ஆர் வெளியேறியதற்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் , அண்ணாவின் இறப்புக்கு பின்னே இது நடந்தது.
பின்பு, முதல்வராக இருந்த எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டு மறைந்தார். பின்பு அவரும் மெரினாவில் புதைக்கப்பட்டார். அப்போது எம்ஜிஆரின் மனைவி ஜானகி ஒரு அணியாகவும், ஜெயலலிதா ஓர் அணியாக அதிமுக பிளவுப்பட்டது. தேர்தலில் கூட அதிமுகவின் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. பின்பு, ஜானகி தனது அணியை ஜெயலலிதாவுடன் இணைத்து அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். பின்பு, ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பின்பு, உடல்நலக் குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதாவும் மெரினாவில் புதைக்கப்பட்டார்.
அப்போது முதல்வராக அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பின்பு, கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா அக்கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஒ.பன்னீர்செல்வம் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை கடுமையாக விமர்சித்தார். சசிகலாவுக்கு எதிரான தர்மயுத்தம் தொடங்கியதாகவும் அறிவித்தார். இதனையடுத்து அதிமுகவில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்றானது. பின்பு, தமிழகத்தின் முதல்வராக நினைத்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா அறிவுறுத்தலின் படி எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வரானார்.
அதன்பின் ஏற்பட்ட சில காரணங்களால் ஓபிஸ்-இபிஎஸ் இணைய, தினகரன் தனியாய் கட்சி தொடங்கி அதிமுக-வில் இன்னொரு பிளவை உருவாக்கினார். மெரினாவில் ஜெயலலிதா புதைக்கப்பட்ட பின், தமிழக அரசியல் கண்ட பரபரப்பு நிமிடங்களாக இவை பார்க்கப்பட்டது. மெரினா என்றாலே கட்சிக்குள் பிளவு என்ற சூழ்நிலை உருவாகியிருப்பதை வரலாறுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இப்போதும் கூட கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் மு.க.அழகிரி பேசிய பேச்சையும் கடந்த காலத்தையும் ஒப்பிட்டு பொது மக்கள் பேச தொடங்கியுள்ளனர்.
இதை ஏதோ இணையத்தில் மட்டும் பேசிக்கோள்வதாய் ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது என்கிறார்கள் சில பத்திரிக்கையாளர்கள். அழகிரி சொன்னது போல "இன்னும் இரண்டு மூன்று நாள்களில் என்னுடைய ஆதங்கம் என்னவென்பதை சொல்கிறேன்" என கூறியிருக்கிறார். அது கட்சியை பிளவுப்படுத்தக் கூடிய விஷயமாக இருக்குமோ என்று திமுக தொண்டர்கள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.