உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலுக்காக உயிரை விட்ட வாலண்டைன் என்னும் பாதிரியார் நினைவாக இந்தக் காதலர் தினம் கொண்டாப்படுகிறது. ஒருவகையில் இன்று காதலுக்கு உகந்த மாதமாகவே பிப்ரவரி மாறிவிட்டது. பிப்ரவரி மாதம் தொடங்கியதுமே இளைஞர்களுக்கு உற்சாகம் பிறந்துவிடும். தன் மனதில் உள்ள பெண்ணிடம் தன்னுடைய விருப்பத்தை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று பலர் போராடிக் கொண்டிருப்பார்கள். கையில் காதல் வாழ்த்து ஆட்டைகள், பூங்கொத்துகளுடன் இளைஞர்கள் காதலை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். சிலர் காதலை சொல்வதற்காக கவிதை எழுத கடுமையாக முயற்சிப்பார்கள். இப்படியே அநேகமாக 14-ம் தேதி வரை இளைஞர்களின் மனது காதல் கலவர பூமியாக இருக்கும்.
காதலர் தினம் முதலில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் பிரபலமாகியிருந்தது. ஆனால் காலப்போக்கில் பிப்ரவரி 14-ம்தேதி காதலர் தினம் என்பது உலகம் முழுவதும் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. பிப்ரவரி மாதமே காதல் மாதம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் காதல் மாதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தமிழ் மொழியை, தமிழ் மண்ணை பொறுத்தவரை காதலுக்கு உகந்த மாதமாக நிச்சயம் மார்கழி தான் இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஒரு வகையில் பனிக்காலமான மார்கழி, துணையை தேட உகந்த மாதம் என்பது இயல்பான உண்மை. இருப்பினும் மார்கழி மாதத்தையும் காதலையும் இலக்கியத்தில் நேரடியாக இணைப்பது ஆண்டாளின் பாடல்கள். தமிழ் மொழியில் காதலை போற்றாத இலங்கியங்களே இல்லை. சங்க இலங்கியங்களில் தலைவன், தலைவியின் காதல் பாடல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அப்படி தமிழ் இலக்கியங்களில் ஒரு பெண் இலக்கியவாதியாக காதல் பொங்கும் பாடல்களை இயற்றியவர் ஆண்டாள்.
மார்கழி மாதம் என்றாலே பெருமாள் கோயில்களில் ஆண்டாள் எழுதிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். வைணவ மதத்தை பின்பற்றுவோர் பலரது வீடுகளிலும் மார்கழி மாதம் முழுவதும், ஆண்டாளின் பாடல்கள் தினந்தோறும் ஒலிக்கும். குறிப்பிட்ட சில சமுதாயத்தினருடன் தொடர்புடைய பக்திப் பாடல்காள இருந்தாலும், ஆண்டாளின் காதல் பாடல்களை ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் ஏற்றுக் கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
தோழியரோடு சேர்ந்து பாவை நோன்பு மேற்கொள்வதை திருப்பாவையின் 30 பாசுரங்களின் வழியாக ஆண்டாள் விளக்கி இருப்பார். மனதிற்கு ஏற்ற மணவாளன் கிடைக்க மேற்கொள்வதே பாவை நோன்பு என்பவர். முதல் பாசுரமான, “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” பாடலை சங்கமம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கேட்டிருப்போம். நாச்சியார் திருமொழியில் தன்னுள்ளம் கவர்ந்த நாயகன் கண்ணனைப் பற்றியும் அவன்மீது தனக்கிருந்த ஆராக்காதல் பற்றியும் உருகி உருகி பாடியிருப்பார் ஆண்டாள்.
ஆண்டாளின் இலக்கியத்தில் தமிழ் இலக்கிய நயம், இசை, பக்தி என எல்லாம் கலந்திருக்கும். ஆண்டாளின் இலக்கியத்தில் பக்தியை நீக்கிவிட்டு ஒரு காதல் காவியமாக பார்த்தால், நாச்சியார் திருமொழியில் உள்ள 143 பாசுரங்களில் அள்ள அள்ளக் குறையாத காதல் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆண்டாள் தன்னுடைய காதலனை எண்ணி உருகி உருகி பாடல்களை வடித்துள்ளார்.
காதல் மலர்ந்த பிறகு காதலனுக்கு காதலியின் ஞாபகமும், காதலிக்கு காதலனின் ஞாபகமுமாகவே இருக்கும் என்பதை 560-வது பாசுரத்தில் பாடியிருப்பார். குயில்கள், மலர்களின் நிறத்தைப் பார்த்தவுடன் இவளுக்கு தன் காதலன் ஞாபகம் வருகிறது. ஞாபகம் வந்தவுடன், அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனை அவஸ்தைக்கும் காரணக் கர்த்தாக்களாக அந்த மலர்களும், வண்ணப் பறவைகளும் அமைவதால் அவை பஞ்சமா பாதகர்களாகி விடுகின்றனர் என்பது போல் அந்தப் பாடல் இருக்கும்.
பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ?
கண்ணனுக்காக காத்திருந்து காத்திருந்து பயனில்லாத என் மார்பகத்தைப் பறித்து அவன் மீதே வீசியெறிகிறேன் என்று ஆவேசப்படும் அளவிற்கு ஆண்டாளின் காதல் பாடல் சென்றிருக்கும்.
“கொள்ளும் பயனொன்று இல்லாத
கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே”
வாரணமாயிரம், கனா கண்டேன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களின் பெயர்களும் ஆண்டாள் பாடல்களில் இருந்து எடுத்தவைதான். தன்னுடைய காதலனுடன் திருமணம் முடிப்பது போல் அவர் கனவுக் காணும் பாடல்தான் வாரணமாயிரம் பாடல்.
“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”
தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை ஆண்டாளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒரு பெண் தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்ல மறுக்கப்பட்ட காலத்தில் தன்னுடைய காதலை அவர் பேசுவதுதான் அது. ஒரு இலக்கியமாக ஆண்டாளின் திருவாய் மொழியை எடுத்துக் கொண்டால் அது நமக்கு காதல் வயப்படுத்தும் கவிதைகளை நிச்சயம் பரிசாக அளிக்கும். காதல் கவிதை எழுத நினைக்கும் பலருக்கும் ஆண்டாளின் திருவாய்மொழி பாடல்கள் ஒரு வரப்பிரசாதம்.