தாமிரபரணியில் கலந்த 17 பேரின் மூச்சுகாற்று.. வடுவாய் மாஞ்சோலை படுகொலையின் ரத்த சரித்திரம்!

தாமிரபரணியில் கலந்த 17 பேரின் மூச்சுகாற்று.. வடுவாய் மாஞ்சோலை படுகொலையின் ரத்த சரித்திரம்!
தாமிரபரணியில் கலந்த 17 பேரின் மூச்சுகாற்று.. வடுவாய் மாஞ்சோலை படுகொலையின் ரத்த சரித்திரம்!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாஞ்சோலை எஸ்டேட். அதற்கடுத்து காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என மொத்தம் உள்ள ஐந்து எஸ்டேட்களில், ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பின்னுள்ள அந்த ரத்த சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது.

அந்த நாள் ஜூலை 23, 1999. எல்லோரையும் போல மாஞ்சோலை தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வந்த தினக்கூலியான 53 ரூபாயை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எஸ்டேட் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தது காவல்துறை. அதற்கு மறுநாள், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தங்களது கணவன்மார்களை விடுவிக்கக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, தடை உத்தரவைக் காரணம் காட்டி, அவர்களையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தது.

சிறையில் அடைக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை விடுவிக்கக் கோரியும்,தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 23, 1999 அன்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாஞ்சோலை தொழிலாளர்கள் பேரணியாய் சென்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி, கலெக்டர் அலுவலகத்துக்கு சற்று முன்னால் அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுப்பதற்கு பேரணியின் தலைவர்கள், காவலர்களிடம் தங்களை உள்ளே விடுமாறு அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. திடீரென்று கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட, கலவர பூமியாக மாறுகிறது அந்த இடம். கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தும், கண்ணீர்ப் புகை வீசியும் சகட்டுமேனிக்கு தாக்கத் தொடங்கினர். கற்கள், ரப்பர் குண்டுகள், தோட்டாக்களும் பயன்படுத்தப்பட்டன.

மூன்றுபுறமும் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலால் மிரண்டு போன தொழிலாளர்கள், தடியடியிலிருந்து தப்பித்துப் போக இருந்த ஒரே வழி, தாமிரபரணி ஆற்றில் குதிப்பதுதான். நீந்தி மறுபக்கம் சென்ற போது, கரையேற விடாமல் அங்கும் போலீஸாரின் லத்திகள் ஒவ்வொருவர் மண்டையாகப் பதம் பார்த்தன. தான் செத்தாலும் பரவாயில்லை, தன் ஒன்றரை வயது மகனாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று ஆற்றிலிருந்து கரைக்கு தூக்கி வீசுகிறார் ஒரு பெண். அந்தக் குழந்தையைப் திரும்ப ஆற்றில் வீசி கொல்லும் அளவிற்கு வன்முறை வரைமுறையின்றி தொடர்ந்தது. ஒரு மணிநேரம் கழித்தே களேபரம் முடிவுக்கு வந்தது.
 
வரிசையாக பிணங்கள் மிதக்க துவங்குகிறது. காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலில் அன்று, தங்கள் உயிரை இழந்தவர்கள் மொத்தம் 17 தொழிலாளர்கள். அதில் இரண்டு பெண்கள், ஒன்றரை வயது குழந்தையும் அடங்குவர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

தாமிரபரணி படுகொலையை விசாரிக்க அன்றைய தி.மு.க அரசு நியமித்த மோகன் கமிஷன், ‘17 பேரும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்கள்’ என பழியை தாமிரபரணி ஆற்றின் மீது போட்டு வழக்கை முடித்தது.

இச்சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே, சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எஸ்டேட் நிர்வாகமும், தொழிலாளர்களின் தினக்கூலியை 180 ரூபாயாக உயர்த்தியது. எனினும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மாஞ்சோலைக்கு திரும்பிச் செல்ல விரும்பாத தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பி, மாற்று வேலைக்குச் சென்று விட்டனர்.

மாஞ்சோலை எஸ்டேட்டில் முன்பு 5,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அது தற்போது 2 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததாலும், வறுமையை தாக்குபிடிக்க முடியாமலும் எஸ்டேட்டை விட்டு வெளியேறி சமவெளி பகுதிக்கு வந்துவிட்டனர். அதனால் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அசாம், ஒடிசா, பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

குழந்தைகளின் படிப்புச் செலவு, குடும்பச் செலவு போக ஐநூறோ, ஆயிரமோ கையில் நிற்கும் அளவில்தான் ஊதியம் இருக்கிறது. இதில் எதிர்பாராத செலவுகள் வந்துவிட்டால் இவர்களின் பாடு திண்டாட்டம் தான். கேரளாவில் தோட்டத் தொழிலாளிக்கு ரூ.310 கூலி வழங்கப்படுகிறது. அதையாவது இங்கு அமல்படுத்தக் கோரி தொடர்ந்து குரல் கொடுத்தாலும், மலை முகடுகளுக்குள்ளாகவே எதிரொலித்து அடங்கி விடுகிறது.

இதையும் படிக்கலாமே: எத்திரியம் என்றால் என்ன? இதற்கும் பிட்காயினுக்குமான வித்தியாசம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com