‘புற்றுநோயை உண்டாக்கும் கல் வைத்து பழுத்த மாம்பழங்கள்’ : எச்சரிக்கை..!

‘புற்றுநோயை உண்டாக்கும் கல் வைத்து பழுத்த மாம்பழங்கள்’ : எச்சரிக்கை..!
‘புற்றுநோயை உண்டாக்கும் கல் வைத்து பழுத்த மாம்பழங்கள்’ : எச்சரிக்கை..!

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களும் சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ராமநாதபுரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், இரண்டு டன் எடை கொண்ட செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்‌ செய்யப்பட்டன. மாம்பழ சீசனை முன்னிட்டு சந்தையில் அதிகளவு மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் மாழ்பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதாகவும், அவற்றை உண்பவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து உணவுப் பாதுகாப்பு துறை துணை அலுவலர் கணேஷ் தலைமையிலான அலுவலர்கள் இன்று ராமநாதபுரம் மொத்த விற்பனை பழக்கடைகளில் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் இரண்டு டன் எடை கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் இனி தொடர்ந்து கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரித்தனர். ராமநாதபுரத்தில் மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களிலும் இதுபோன்ற பழங்கள் விற்பனை செய்யப்படுவது பல காலமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கல் வைத்து பழுக்க வைப்பது எப்படி ?

இயற்கையில் மாம்பழங்கள் பழுப்பதற்கு மரத்தில் சுரக்கும் எத்திலின் தான் காரணம். இந்த எத்திலின் திரவம் ரசாயனக் கடைகளில் கிடைக்கும். அவற்றை மாங்காய்களின் மீது தெளித்து பழுக்க வைக்கலாம். இந்த முறை அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும். இந்த முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் இந்த முறையில் மாம்பழங்கள் பழுப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும்.

இதனால் விரைவாக மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு கார்பைடு கற்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். சில்லரை வியாபாரிகளை விட, மொத்தமாக பழங்களை கொள்முதல் செய்து குடோன்களில் வைத்திருக்கும் பெரும் முதலாளிகளே இதனை லாபத்திற்காக செய்கின்றனர். இந்த முறையில் கார்பைடு கற்களை சிறு துண்டுகளாக்கி மாங்காய்களின் இடையே வைத்துவிடுவார்கள். அந்த மாங்காய்கள் 6 மணி நேரங்களிலேயே தோல் மற்றும் மஞ்சள் நிறமாகி மாம்பழங்கள் போல் மாறிவிடும்.

கல் வைத்த பழங்களை கண்டுபிடிப்பது எப்படி ?

இவ்வாறு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை நாம் எளிதில் கண்டறியலாம். மாம்பழங்கள் பார்ப்பதற்கு எந்த காயங்களும் இன்றி அழகான வடிவத்தில் இருக்கும். பழம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், ஒரு சில இடங்களில் கறுப்பாக புள்ளிகள் அல்லது கருகியது போல் இருக்கும். பழம் பழுத்திருப்பது போல் இருந்தாலும், சாப்பிடும் போது ருசியாக இருக்காது. பழத்தை வாங்கிச் சென்ற இரண்டு நாட்களிலேயே அழுகிவிடும். கல்லு வைத்த பழங்கள் ஆங்காங்கே திட்டு திட்டாக பழுத்திருக்கும். 

இயற்கையாக பழுத்த பழுங்கள் சற்று காயப்பட்டு இருக்கும். அவை முழுவதுமாக மஞ்சள் நிறத்துடன் மற்றும் இல்லாமல் சற்று இளஞ்சிவப்பு நிறமும் கலந்திருக்கும். இயற்கை முறையில் பழுக்கும் பழங்களில் கடைசியாக தான் காம்புப் பகுதி பழுக்கும். ஆனால் செயற்கை முறையில் அனைத்தும் ஒரே நேரத்தில் மஞ்சள் நிறமாகி இருக்கும். கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழத்தை கையில் எடுத்துப் பார்த்தல் சூடாக இருக்கும். 

புற்று நோய் எச்சரிக்கை..!

இவ்வாறு கார்பைடு கல் வைத்து பழுத்த பழங்களை சாப்பிடும்போது வயிற்று வலி, உடல் உபாதைகள், தலைவலி, உடல் சூடு, மயக்கம், தலை சுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அத்துடன் கார்பைடு பழங்களுக்கு ஊடுருவிச் சென்றிருப்பதால் அதிக பழங்களை சாப்பிடும் போது, அவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எனவே பழங்கள் பார்ப்பதற்கு கண்ணுக்கு அழகாக இருக்கிறது என்பதால் அவற்றை வாங்கமால், அவற்றை நன்கு அறிந்து இயற்கை முறையில் பழுத்ததாக எனக்கண்டறிந்து வாங்குவது உடல்நிலைக்கு நன்மை பயக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மாம்பழங்களில் மட்டுமின்றி வாழைப்பழம் மற்றும் பாப்பாளி ஆகியவற்றிலும் இதுபோன்று கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பின்பற்றப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com