மாநகர காவல் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் எப்படி இறந்தார்...? அவர் அநாதையா...?

மாநகர காவல் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் எப்படி இறந்தார்...? அவர் அநாதையா...?
மாநகர காவல் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் எப்படி இறந்தார்...? அவர் அநாதையா...?

80’கள் காலகட்டமானது திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரும் புதிய படைப்பாளிகளாக உருவாகினர். மாநகரக் காவல் திரைப்பட இயக்குநர் தியாகராஜனும் திரைப்படக் கல்லூரி மாணவர்தான். அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கடந்த 8ஆம் தேதி ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் அநாதையாக இறந்து கிடந்தார் என்ற செய்தி பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 150வது சினிமா மாநகரக்காவல். அதில் விஜயகாந்த் காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றியை இப்படம் எட்டியது. இப்படத்தை இயக்கிய பிறகு வெற்றி மேல் வெற்றி என்ற சினிமாவை இயக்கினார் தியாகராஜன். அதன் பிறகு நடந்த விபத்தில் உடல் நலிவுற்ற தியாகராஜன் மீண்டும் எழுந்துவர சில வருடங்கள் ஆகியிருக்கிறது. தனது முதல் படமே பெரிய ஹீரோ பெரிய தயாரிப்பு நிறுவத்துடன் பணியாற்றும் வாய்ப்பு என எல்லாம் கிடைத்ததால் தியாகராஜன் தனது அடுத்தடுத்த படங்கள் இன்னுமே பெரிய படமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் எனத் தெரிகிறது. சினிமாவானது காலஓட்டத்தில் பலரையும் காணாமல் ஆக்கிவிடும். அப்படித்தான் தியாகராஜனும் காணாமல் போயிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில காலமாக தியாகராஜன் வறுமையில் வாடியதாகவும் பிறகு கடந்த 8ஆம் தேதி அநாதையாக ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் இறந்து கிடந்தார் என்ற செய்தியும் பரவியது. ஏவிஎம் வாசலில் தியாகராஜன் இறந்து கிடந்தார் என்பது உண்மைதான் ஆனால் அவர் அநாதை அல்ல என தெரிவித்தனர் அவரோடு பணி செய்தவர்கள் மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள். அதன்படி தியாகராஜனுக்கு அருப்புக் கோட்டையில் மிகப்பெரிய குடும்பம் உள்ளது. மகள் ஆஸ்திரேலியாவிலும் மகன் பெங்களூரிலும் வசிக்கின்றனர். செய்தி அறிந்ததும் தியாகராஜனின் அண்ணன் சென்னை வந்து உடலை முறைப்படி பெற்றுக் கொண்டு தம்பியின் உடலை சிறப்பு ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். பிறகு தியாகராஜன் இறந்த மறுநாள் அவரது உடல் முறைப்படி அவரது ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இறுதிச் சடங்குகளை தியாகராஜனின் மகன் செய்திருக்கிறார். இந்த தகவலையும் தியாகராஜனின் நண்பர்களே தெரிவித்தனர்.

இறந்து போன நாளில் இயக்குநர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சித்திரைச் செவ்வானம் திரைப்படத்தை பார்த்துவிட்டு உணவு அருந்திவிட்டு நடந்து வரும் போது ஏவிஎம் வாசலில் அவர் விழுந்து இறந்தார் என்பதே உண்மை மற்றபடி அவர் அநாதையல்ல என்பதே அவரோடு பயணித்தவர்கள் பகிர்ந்து கொண்ட செய்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com