மம்தா கட்சி Vs பாஜக... மேற்கு வங்க மக்களை வாக்குறுதிகளில் வசீகரிப்பது யார்?

மம்தா கட்சி Vs பாஜக... மேற்கு வங்க மக்களை வாக்குறுதிகளில் வசீகரிப்பது யார்?
மம்தா கட்சி Vs பாஜக... மேற்கு வங்க மக்களை வாக்குறுதிகளில் வசீகரிப்பது யார்?

மேற்கு வங்கத்தை ஆளப்போவது யார் என்ற கேள்வி அம்மாநில மக்களிடையே மட்டுமில்லை, இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. திரிணாமூல் காங்கிரஸை ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. பாஜகவின் பலவீனத்தை கண்டறிந்து, அதை உடைத்து சுக்கு நூறாக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. இந்த இரண்டு கட்சிகளும் அண்மையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். திரிணாமூல் காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி அடித்தட்டு மக்களை முன்னிறுத்தியே தங்கள் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

முன்னதாக மார்ச் 17-ம் தேதி மம்தா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஏழைகள், பிற்படுத்தபட்ட சாதிகள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சில குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும், திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் மம்தா தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார். மம்தா தேர்தல் அறிக்கையை வெளியிட்ட 4 நாள்கள் கழித்து `சோனார் பங்களா சங்கல் பத்ரா 2021’ என்ற பெயரில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கிட்டத்தட்ட பாஜகவும், அடித்தட்டு மக்களை மையப்படுத்தியே தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் நிதி உதவி என்ற மம்தாவின் தேர்தல் அறிக்கையை மட்டுபடுத்த, பெண்களுக்கு அரசுப் பணியில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும், கைப்பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும் என போட்டியை கூர்மையாக்கியிருக்கிறது பாஜக.

கடந்த 15 ஆண்டுகளாக பெண்கள் வாக்குகளை அறுவடை செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார் மம்தா. அதிகாரத்தை கைப்பற்ற பெண்கள் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும். இந்த முயற்சியின் ஒருபகுதியாக, லாக்கெட் சாட்டர்ஜி மற்றும் அக்னிமித்ரா பால் போன்ற பல முக்கிய பெண் தலைவர்களுக்கும் தேர்தலில் சீட்டு கொடுத்திருக்கிறது பாஜக. பெண்கள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதன் மூலம், போதுமான வேலை வாய்ப்புகளுடன் பெண்களை முன்னேற்றும் யுக்தியை கையாள்கிறது.

முஸ்லிம்களுக்கான ஓபிசி இடஒதுக்கீடு போன்ற விஷயங்களையும் மம்தா குறைத்துள்ளார். காரணம், இது மத அடிப்படையில் மேலும் துருவமுனைப்புக்கு வழிவகுக்கும். அப்படி வழிவகுக்கும்போது அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். 2019 மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களை வென்றது. அதனால், இந்த முறை பாஜகவுக்கு சாதகமாக மாறும் வகையில் சர்ச்சைக்குரிய எதையும் சேர்க்கக்கூடாது என்பதற்காக தேர்தல் அறிக்கையில் மம்தா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

அதற்கு பதிலாக, திரிணாமுல் மஹிஷ்யர்களையும் மற்ற மூன்று சமூகங்களையும் ஓபிசி பட்டியலில் சேர்ப்பதாக உறுதியளித்திருக்கிறது. பாஜகவும் அதையே உறுதியளித்துள்ளது. வங்களா தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையில் கணிசமான அளவில் மஹிஷ்யர்கள் உள்ளனர். இரண்டு முக்கிய கட்சியினரும், இந்த வாக்குகளை கவர்ந்திழுக்க போராடி வருகின்றனர். மாதுவா தலைவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் தென் வங்காளத்தின் மற்றொரு செல்வாக்குமிக்க சமூகமான மாதுவாஸின் வாக்குளை பெற முயற்சிக்கிறது பாஜக.

திரிணாமுல் மற்றும் பாஜக ஆகிய இரண்டும் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளன; ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளன. மேலும் தொழில்மயமாக்கல் மற்றும் படித்த இளைஞர்களை ஈர்க்க அதிக வேலை வாய்ப்புகளை இரண்டு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளன. திரிணாமுல் ஒரு "வெளியாட்களின் கட்சி" என்பதை நிறுவும் விதமாக, 10-ஆம் வகுப்பு வரை வங்க மொதியை கட்டாயமாக்குவதாகவும், வங்காளத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை அறிமுகப்படுத்துவதாகவும், வங்காள மொழிக்கு அதிகாரபூர்வ மொழி அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜக அறிவித்திருக்கிறது.

உண்மையில், திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் நீண்ட ஆவணமாக வெளியிடப்படும். ஆனால் இம்முறை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த முறை மிகவும் துல்லியமாகவும், சுருக்கமாகவும் இருப்பதால் பலரும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பாராட்டியிருக்கின்றனர். இந்த பாராட்டுகள் யாவும் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மறுபுறம், பாஜக எப்போதும் போலவே தேர்தல் அறிக்கையை ஒரு மெகா நிகழ்வாக மாற்றியுள்ளது.

ஆனால், இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், இந்த தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்ப்பதுதான். திரிணாமுல் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளுடன் மாவட்டங்களில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. பாங்குரா மாவட்டத்தில் கோட்டுல்பூரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய மம்தா, தனது அறிக்கையை பலப்படுத்த அவர் எடுக்கும் நடவடிக்கைகளை விரிவாகக் கூறினார். பாஜக தனது அறிக்கையில் "தவறான வாக்குறுதிகளை" அளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மேற்கு வங்கத் தேர்தல் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இந்த அனல் காற்று மே 3ம்தேதி வரை நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com