மம்தாவின் தேசிய அரசியல் பாய்ச்சல்: பாஜகவுக்கு சாதகமா? காங்கிரஸுக்கு பாதகமா? – ஓர் அலசல்

மம்தாவின் தேசிய அரசியல் பாய்ச்சல்: பாஜகவுக்கு சாதகமா? காங்கிரஸுக்கு பாதகமா? – ஓர் அலசல்
மம்தாவின் தேசிய அரசியல் பாய்ச்சல்: பாஜகவுக்கு சாதகமா? காங்கிரஸுக்கு பாதகமா? – ஓர் அலசல்

மேற்குவங்க அரசியலை தாண்டி முதல்முறையாக தேசிய அளவில் அழுத்தமாக கால்பதிக்கும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. இது பாஜகவுக்கு சாதமாக முடியுமா அல்லது காங்கிரஸுக்கு பாதகமாக அமையுமா என்று பார்ப்போம்.

பாஜகவுடன் சேர்த்து காங்கிரஸையும் எதிர்க்க தயாராகும் மம்தா:

கடந்த சில நாட்களாக மும்பையில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர்கள் ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த மும்பை பயணத்தில் பேசிய மம்தா, “தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இல்லை, மாநில கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை எளிதாக வீழ்த்தலாம்” என தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் பேசிய மம்தா, “ மோடியும் பாஜகவும் இவ்வளவு பெரிய பிம்பமாக வளர்ந்ததற்கு காரணம் காங்கிரஸ்தான்” என தெரிவித்திருந்தார்.

இதன் மூலமாக மம்தா பானர்ஜி காங்கிரஸ் துணையில்லாமல், மாநில கட்சிகளின் துணையுடனே பாஜகவுடன் மோத தயாராகிவிட்டார் என்பது உறுதியாகிறது. மாகாராஷ்டிராவில் ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸை சாடி பேசிய மம்தா, எதிர்க்கட்சிகளுக்கு ஆலோசனை கூற பொது சமூகத்தில் உள்ள சிலரைக் கொண்டு குழு ஒன்றை அமைக்க காங்கிரஸிடம் தான் யோசனை கூறியதாகவும், ஆனால் அது ஈடேறவில்லை என்றும் தெரிவித்தார். அரசியலில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக அப்பணியை கவனிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளில் இருப்பது சரியல்ல என்றும் மறைமுகமாக ராகுல் காந்தியை தாக்கும் விதமாக மம்தா பேசினார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாக தன்னை முன்னிறுத்தும் வேலைகளில் பிரசாந்த் கிஷோர் மூலமாக காய் நகர்த்தி வருகிறார் மம்தா பானர்ஜி. இதற்கு முதல்படியாக வரும் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் திரிபுரா, கோவா, உத்தரப் பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் மம்தா.

மம்தாவின் திடீர் பாய்ச்சலுக்கு காரணம்?

மேற்குவங்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடுமையான குடைச்சலை கொடுத்தது பாஜக. தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை வளைத்து பாஜகவில் சேர்த்தனர். மத்திய அரசின் கைவசம் உள்ள அனைத்து துறைகளையும் பயன்படுத்தி தங்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக மம்தாவே பல இடங்களில் கொந்தளித்தார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திரிணாமுல் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த முறையும் இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. கடுமையான மோதலுடன் முடிவுற்ற மேற்கு வங்க தேர்தலில் மூன்றாவது முறையாக இமாலய வெற்றி பெற்றார் மம்தா பானர்ஜி.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் உட்பட நாடு முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பை செய்தார் மம்தா பானர்ஜி. ஆனால், மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு அவரின் பார்வை முற்றிலும் மாறிப்போனது, தனக்கு இத்தனை குடைச்சலை கொடுத்த பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் மாற்றாக மாறவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. அத்துடன் மேற்கு வங்க தேர்தலில் தனக்கு கைகொடுக்காத காங்கிரஸையும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு உருவானது. கோவாவில் ஒரு கூட்டத்தில் பேசிய மம்தா, “ மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை எதிர்ப்பதற்கு பதிலாக என்னையே அதிகம் எதிர்த்தார்கள், அவர்களை நான் எப்படி ஆதரிக்க முடியும்” என பேசினார்.

பாஜகவுக்கு குறிவைத்த மம்தா, பலியாகும் காங்கிரஸ் கட்சி:

மேற்குவங்கத்தின் அண்டை மாநிலங்களான திரிபுரா மற்றும் அசாம் மீதுதான் முதலில் குறிவைத்தார் மம்தா. திரிபுராவில் உள்ள பல முக்கிய காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களை தன்பக்கம் இணைத்தார், இதன் விளைவாக சில நாட்களுக்கு முன்பு நடந்த திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக – திரிணாமுல் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றாலும் கூட திரிணாமுல் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது, தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் 16 சதவீத வாக்கினை திரிணாமுல் பெற்றுள்ளது, கடந்த 2019 ஆம் ஆண்டு திரிணாமுல் பெற்ற வாக்கு வெறும் 0.4% தான். அசாம் மாநிலத்தின் முக்கிய தலைவராக இருந்த மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் திடீரென்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார், அவருக்கு உடனடியாக மாநிலங்களை எம்.பி பதவியும் வழங்கப்பட்டது, அதுபோல அசாமில் மாற்று கட்சிகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்களையும் இணைக்கும் பணியை மம்தா செய்து வருகிறார்.

அடுத்த கட்டமாக, வரும் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள கோவாவிலும் போட்டியிட முடிவு செய்த மம்தா, அங்கும் சுறுசுறுப்பான பணிகளை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கோவா முதல்வர் லூயிசின்ஹோ ஃபலேரோ உள்ளிட்ட பலரும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். மேலும், கோவாவில் நடிகர்கள் நபீசா அலி, மிருணாளினி தேஷ்பிரபு மற்றும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் முதலானோர் அக்கட்சியில் இணைந்தனர். அதுபோலவே மேகாலயாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மேகலாயா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் ஐக்கியமானார்கள். மேகாலயாவில் காங்கிரஸுக்கு இருந்த 17 எம்எல்ஏக்களில், மூன்றில் இரண்டு பங்கான 12 எம்எல்ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இப்போது அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் மீதும் மம்தாவின் பார்வை திரும்பியுள்ளது. சமீபத்தில் திடீரென உ.பி முன்னாள் முதல்வர் கம்லா பாட்டியின் பேரனான லலிதேஷ் திரிபாதி தனது காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமுலில் இணைந்துள்ளார்.  இதுபோல பல மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக போட்டியிட மம்தா முடிவு செய்துள்ள நிலையில், அவரின் கட்சியில் இணைபவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸை சேர்ந்தவர்களாக இருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மம்தாவின் முன்னெடுப்பினால் பாஜகவுக்கு சாதகமா?

திரிணாமூலின் இந்த போக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். “பாஜகவை எதிர்க்க, காங்கிரஸை வலுப்படுத்துவதற்குப் பதிலாக திரிணாமூல் எங்கள் தலைவர்களை இழுக்கிறது. இதை பார்க்கும்போது பாஜகவுடன் கைகோத்துக்கொண்டு திரிணாமூல் எங்கள் கட்சியை அழிப்பதாக தோன்றுகிறது" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை தோற்கடிக்க முடியும் என நினைப்பது வெறும் கனவு, இந்திய அரசியல் யதார்த்தம் அனைவருக்கும் தெரியும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் பல மாநிலங்களில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது, தற்போது பல காங்கிரஸ் தலைவர்களும் திரிணாமுலில் இணைவதால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கட்சிகள் தனித்தனி அணிகளில் போட்டியிட்டால், அதன் பலன் என்னவோ பாஜகவையே சென்று சேரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com