திரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'!

திரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'!
திரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'!

மழைத்துளி ஒட்டிக்கொண்டிருக்கும் கண்ணாடிக்கு உட்புறமாக நின்றுகொண்டு, ஒவ்வொன்றாக உதிர்ந்துவிழும் நம்பிக்கைகளைப் பற்ற போராடிக்கொண்டிருக்கிறான் அவன். காத தூரத்தில் தெரியும் கடலின் அலைகளை எதிர்த்து படகோட்டி ஒருவர் துடுப்பை செலுத்திக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து செலுத்தப்படும் துடுப்பு படகோட்டிக்கு மட்டுமல்ல கண்ணாடிக்கு அப்பால் நின்றிருக்கும் அவனுக்கும் நம்பிக்கையளிக்கிறது.

படகோட்டி கரையை அடைய தேவைப்படும் துடுப்பு போல, மனித வாழ்வை உந்தி செல்ல ஏதோ ஒன்று தேவைப்படத்தானே செய்கிறது. அந்த வகையில், கவலைதோய்ந்த இந்த வாழ்வின் நம்பிக்கையினூடே பயணிக்க சொல்கிறது 'சன்னி'.

ஜெயசூர்யா நடிப்பில் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது 'சன்னி' திரைப்படம். குழந்தை இழப்பு, கடன், தொழிலில் ஏமாற்றம், விவாகரத்து ப்ராசஸ், பிறக்கப்போகும் குழந்தையைப் பார்க்க இயலாத சூழல் என வளர்ந்துவரும் ஜெயசூர்யாவின் தாடியைப்போல கவலைகளும் கூடிக்கொண்டே போகிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட, போதையின் மூலம் அமைதியை தேடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு இறுதியில் என்ன நடக்கிறது என்பதை ஒன்றரை மணி நேர படமாக சொல்லியிருக்கிறார் ரஞ்சித் சங்கர்.

குவாரன்டைன் நாட்களை கண்முன் நிறுத்துகிறது படம். 'ஒரே ஆள். ஒட்டுமொத்த படமும் ஓவர்' என்ற அளவில் ஜெயசூர்யா 'சன்னி' படத்தில் நடிக்கவில்லை. ஜெயசூர்யா நடித்தது 'சன்னி' படமாகியிருக்கிறது என கேமரா ஃப்ரேம் மொத்தத்தையும் திருடியிருக்கிறார் மனிதர். ஒரே ஆள் என்றபோதும் சலிப்பு தட்டவில்லை. ரோலர் கேஸ்ட் போல அழுகை, சிரிப்பு, அமைதி, கோபம், காதல், அன்பு என எல்லாமுமே சுற்றி சுற்றி வந்து போகிறது.

முகமறியாத நபர்களின் அன்பும், அடையாளமும், நினைவுகளும் படத்துக்கு உயிரூட்டுகின்றன. பரிச்சயமே இல்லாத, முன்பின் அறியாத வெறும் குரலில் மட்டுமே பேசிய ஒருவரின் இழப்பு உங்களை உலுக்கச்செய்ய முடியும் என்றால் அது மலையாள படங்களால் மட்டுமே சாத்தியம். ஆடம்பரமான ஹோட்டலில் வசித்தபோதும் கூட ஜெயசூர்யா முகத்தில் மகிழ்ச்சி தவழவில்லை. மகிழ்ச்சி என்பது அகம் சார்ந்தது; புறம் சார்ந்தல்ல என்பதை புரியவைக்கிறது சன்னி.

மருந்து தடவிட மயிலிறகை காயத்தின் மீது வைத்து வருடுவதைப்போல ஷங்கர் ஷர்மாவின் இசை மனதை வருடுகிறது. இசையுடன் கூடிய மெல்லிய அமைதி படருவது காட்சிகளின் அழகை மேலும் கூட்டுகிறது. மாலைப்பொழுது, இரவு காட்சிகளையும் அறையின் சூட்டையும் மது நீலகண்டனின் கேமிரா அப்படியே கடத்துகிறது. வித்தியாசமான கேமிரா ஆங்கிங்கள் ஈர்க்கின்றன.

குறைந்த பட்ஜட்;ஒரு முக்கிய கதாபாத்திரம்; ஒரே ஹோட்டல் என நல்ல கதைக்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டும், அதிக கதாபாத்திரங்களும், சண்டைக்காட்சிகளும், ரொமான்ஸ் பாடல்களும் தேவையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது மல்லு சினிமா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com