நிமிஷா சஜயன்... மலையாள சினிமாவில் 'மோஸ்ட் வான்டட்' நாயகி ஆனது எப்படி?

நிமிஷா சஜயன்... மலையாள சினிமாவில் 'மோஸ்ட் வான்டட்' நாயகி ஆனது எப்படி?
நிமிஷா சஜயன்... மலையாள சினிமாவில் 'மோஸ்ட் வான்டட்' நாயகி ஆனது எப்படி?

மலையாள சினிமாவின் 'மோஸ்ட்' வான்டட்' நாயகியாக உருவெடுத்துள்ள நிமிஷா சஜயன் யார், பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாகக் குவியச் செய்ய அவரால் எப்படி முடிகிறது? - இதோ சற்றே விரிவாகப் பார்ப்போம்.

2018-இல் ஃபஹத் ஃபாசிலின் 'தொண்டிமுதலும் திரிக்‌ஷாக்‌ஷியும்' படத்தை ரசித்தவர்கள், நிச்சயமாக அதில் ஸ்ரீஜா கேரக்டரை புகழத் தவறமாட்டார்கள். தங்கச் சங்கிலியின் திருட்டை மையமாகக் கொண்ட இந்தக் கதையின் நாயகியான ஸ்ரீஜா கேரக்டர் நேர்த்தியான நடிப்பால் மிளிந்திருக்கும். இந்த நடிப்புக்கு சொந்தக்காரர் 23 வயது ஆகும் நிமிஷா சஜயன்.

இன்றைய தேதியில் மலையாள சினிமாவில் இருக்கும் இளம் பெண் நடிகர்களில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துவதில் நிமிஷாவுக்கு நிகர் நிமிஷா மட்டுமே.

திரைத்துறையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே, 'சோழா', 'ஈடா', 'ஒரு குப்சிதா பையன்', '41', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'நாயட்டு'... இதோ இப்போது 'மாலிக்' என குறிப்பிடத்தக்க படங்களில், அதுவும் மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துவிட்டார்.

இவருக்கு முதல் படம் 'தொண்டிமுதலும் திரிக்‌ஷாக்‌ஷியும்'. முதல் படமே, ஃபஹத் மற்றும் சூரஜ் வெஞ்சராமுடு என்ற மலையாள சினிமாவின் இரண்டு நடிப்பு அரக்கர்களுடன் இணைந்து நடித்தார். இரண்டு பேருக்கும் இணையான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தி தனது அறிமுகத்தை உரக்கச் சொல்லியிருப்பார். இதில் கிடைத்த புகழ் காரணமாக, அடுத்து தேசிய விருது வென்ற இயக்குநர் மதுபாலனின் 'ஒரு குப்சிதா பையன்' படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம். ஒரு கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட ஓர் இளைஞனை மீட்க நினைக்கும் அனுபவமற்ற வழக்கறிஞர் கதாபாத்திரம் அது. முதல் படத்தை போல் இதிலும் நடிப்பில் பின்னியிருப்பார் நிமிஷா.

அடுத்து 'சோழா'. சுயாதீன திரைப்பட கலைஞராக அறியப்பட்ட சனல் குமார் சசிதரனின் படம் இது. இதில் ஜானகி என்ற மலைப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவி கதாபாத்திரம். இந்தப் படத்தில் ஜானகியின் கதாபாத்திரத்தை சுற்றிதான் படமே நகரும். மலைவாழ் பெண்ணாக, தனது காதலனை நம்பி நகரத்துக்குச் செல்லும்போது ஓர் அந்நியரைப் பார்க்கும்போது ஏற்படும் தயக்கம், பெரிய நகரத்தைப் பார்க்கும்போது அவளுக்கு இருக்கும் உற்சாகம், தனக்கு நடக்கப்போகும் தவறான விஷயங்களால் ஏற்படும் பயம் என இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிமிஷா நடிப்பில் தடம் பதித்திருப்பார். இந்த இரண்டு படங்களில் இவர் வெளிப்படுத்திய நடிப்பை அங்கீகரித்து கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில், இயல்பான நடிப்பு, ஆடம்பரம் இல்லாத மேக்கப் என்று கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து மலையாள திரையுலகில் தனக்கென தனி வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.

கேரள இயக்குநர்களின் 'மோஸ்ட் வான்டட்' பெண் நடிகராக உருவாகி இருக்கும் நிமிஷா ஒரு மலையாளி என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பை அந்தேரியில்தான். இவரின் தாய், தந்தையின் பூர்விகம் கேரளா ஆகும். 19 வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட நிமிஷாவுக்கு நடிப்பு எப்போதுமே ஆர்வத்தை தூண்டும் விஷயமாக இருந்துள்ளது. ஆரம்ப பள்ளிகளில் படித்தபோதே நடிப்பதையும், ஆடிஷன்களில் கலந்துகொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆடிஷன்களுக்கு செல்வதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

அப்படித்தான் மலையாள திரைப்பட உலகில் நுழைந்துள்ளார். நிமிஷாவின் நடிப்பில் அடுத்து 'துறைமுகம்' மற்றும் இந்தி திரைப்படம் ஒன்று என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

ஹாலிவுட் படங்களோ அல்லது சர்வதேசப் படங்களோ பார்க்கும்போது, அவற்றில் வரக்கூடிய நாயகிகள் பார்க்கும்போது ஆரம்ப காட்சிகளில் பெரிதாக பார்வையாளர்களாகிய ஈர்ப்பு இருக்காது. ஆனால், கதை நகர நகர... அந்த நாயகிகள் தங்கள் ஆளுமையாலும் ஆற்றலாலும் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துவிடுவதுண்டு. படம் முடியும்போது, அவர்கள்தான் நம் கண்களுக்குப் பேரழகாகத் தெரிவார்கள். அப்படித்தான் ஒவ்வொரு படத்திலும் தனது இயல்பு மீறாத அட்டகாச நடிப்பாற்றலால் நம் கண்களுக்குப் பேரழகாக ஆட்கொண்டுவிடுகிறார் நிமிஷா.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com