காந்தியின் அடையாளத்தை மாற்றிய மதுரை.. வரலாற்று சிறப்பை தாங்கி நிற்கும் தூங்காநகரம்
எல்லா ஊருக்கும் ஊர்ப்பெருமைனு ஒன்னு இருக்கும் ஆனால் மதுரைக்கு மட்டும் அது கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். மதுரை மக்களின் பெருமையானது மொழி, அன்பு, உணவு, கட்டடக்கலை, வரலாறு என நீள்கிறது.
ஜனவரி 30 1948., அன்றைய தினம் காந்தி கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு காந்தியின் நினைவைப் போற்ற இந்தியா முழுவதும் ஏழு நினைவு காந்தி அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. அதில் தென் இந்தியா முழுமைக்குமாக மதுரையில் தான் காந்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. காந்தியடிகள் பயன்படுத்திய பொருள்கள் இந்த ஏழு அருங்காட்சியகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி பயன்படுத்திய பதினான்கு அசல் பொருள்களும் 32 மாதிரி பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தை அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்தார். 1959’ல் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ளனர். கறுப்பின மக்களின் விடுதலையே தன் வாழ்நாள் மூச்சாகக் கொண்டிருந்த மார்ட்டின் லூதர்கிங், திபெத்திய தலைவர் தலாய்லாமா உள்ளிட்ட தலைவர்கள் வருகை புரிந்த பெருமை மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு உண்டு.
1860’களில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் கோடைகாலத்தில் ஓய்வு எடுக்கவும் அங்கிருந்த படியே நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தி வந்த தற்போதைய அருங்காட்சியகமானது பின்னாளில் பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் ஆங்கிலேய கலக்டர்களும் நீதிபதிகளும் தங்கும் இடமாக இருந்தது. தற்போது காந்தி அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுமைக்கும் ஏழு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன அதில் மதுரையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு தனியொரு சிறப்பு உண்டு தெரியுமா...?
ஆம்., காந்தியை கோட்சே சுட்ட போது காந்தி தன் உடலில் உடுத்தியிருந்த ஆடையானது காந்தி அருங்காட்சியகத்திற்கு தான் கொண்டு வரப்பட்டது. இரத்தம் தோய்ந்த காந்தியின் இறுதி உடை ஏன் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான காரணம் தெரியுமா...? 1921’ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார் காந்தி. அப்போது மதுரையில் கூடிய எளிய மக்களும் விவசாயிகளும் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டார் அவர். தன் நாட்டு மக்களின் அன்றைய நிலையக் கண்டு வருந்திய காந்தி., நாடுமுழுமைக்கும் என்றைக்கு தம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ அன்று வரை தானும் மேலாடை அணிவதில்லை என முடிவெடுத்தார். பிறகு வாழ்நாள் முழுக்க எளிய கதர் ஆடை தான் அவரது அடையாளமாகவே இருந்தது.
இப்படியாக மகாத்மா காந்தியின் அடையாளத்தையே மாற்றிய ஊர் மதுரை. அவர்தன் மேலாடை துறந்தது இதே மதுரையில் தான். அந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் விதமாகவே காந்தி சுடப்பட்ட அன்று உடுத்தியிருந்த இரத்தம் படிந்த அவரது உடை மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டது. மதுரையில் இருப்பவர்கள் பலருக்கே இந்த செய்தி தெரியாது. அடுத்த முறை உங்கள் குழந்தைகளை காந்தி அருங்காட்சியகம் அழைத்துப் போகும் போது இந்த செய்தியை அவர்களுக்கு அவசியம் சொல்லுங்கள்.