புரட்சிகரமான பாடல்களாலும், அற்புதமான கவிதைகளாலும் எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சுதந்திர போராட்ட காலங்களில், விடுதலை வேள்வியை தம் பாடல்களால் உருவாக்கி படரவிட்ட, தேசியக் கவியின் நினைவு தினம் இன்று.
எட்டையபுரத்தில் சராசரி பிராமணக் குடும்பத்தில் பாரதியார் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து வறுமையில் வளர்ந்தார். கல்வியின் மேல் தாகம் கொண்டு கற்பதிலேயே தனது இளமையைச் செலவிட்டார். கல்வி கை கூடியபோது, தனது அறிவு வளர்ச்சியை செல்வம் சேர்க்கப் பயன்படுத்தாமல், சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்குமே பயன்படுத்தினார். தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழி அதற்கு முந்தைய 800 ஆண்டுகளில் கண்டிருந்த மாபெரும் தேக்கத்தை பாரதியார் போக்கினார்.
எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராகவும் பாரதியார் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஜாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும் சாகாவரம் பெற்ற பல பாடல்களைப் இயற்றியுள்ளார் பாரதியார்.
ஆணுக்கு பெண் நிகரென்றும், குல தாழ்ச்சி, உயர்ச்சி சொலல் பாவம் என்றும் எடுத்துரைத்தவர் பாரதி. 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய பத்திரிகைகளிலும், 'இந்தியா' வார இதழிலும் பணியாற்றியவர் பாரதியார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட காவியங்களை படைத்த பாரதி, 1912 ஆம் ஆண்டு கீதையையும் மொழிபெயர்த்தார் பாரதி.
சதா சர்வகாலமும், நாட்டைப் பற்றியும், தாய்மொழியாம் தமிழைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்த மகாகவி பாரதி தனது 39 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணிக்கே அவரின் உயிர் பிரிந்தது. நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிட்டதால் அவரது நினைவு தினம் செப்டம்பர் 12 என்ற சரியான தேதியையே அவரது உறவினர்கள் பதிவு செய்துள்ளனர்.
பாரதியின் நினைவு நாளில் இன்னும் பலருக்கு குழப்பம் நீடித்து வரும் நிலையில் தமிழக அரசிதழில் பாரதியாரின் நினைவு தினத்தை செப்டம்பர் 12 என அறிவித்து முரண்பாடுகள் சரிசெய்யப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.