தேர்வு எழுத அனுமதிக்காத தலைமை ஆசிரியர்: +2 மாணவியின் பரிதாப நிலை

தேர்வு எழுத அனுமதிக்காத தலைமை ஆசிரியர்: +2 மாணவியின் பரிதாப நிலை
தேர்வு எழுத அனுமதிக்காத தலைமை ஆசிரியர்: +2 மாணவியின் பரிதாப நிலை

மதுரை மாவட்டம் கீழமாத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மகள் சத்யாதேவி கீழநாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு முதல் குரூப் ( பயோ மேக்ஸ் ) எடுத்து படித்து வந்துள்ளார். உடல்நலக்குறைபாடு காரணமாக கடந்த மாதம் நடந்த 2வது செய்முறை தேர்வு எழுத செல்லவில்லை, 3 வது செய்துமுறை தேர்வு எழுத மாணவி சத்யாதேவி மற்றும் அவரது தந்தை கணேசன் பள்ளியை அணுகியுள்ளனர். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகபாண்டி அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது. அத்துடன் மாணவின் மாற்று சான்றிதழையும் பள்ளியிலிருந்து பெற்று செல்லும்படி தரக்கூறைவாக பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி குற்றம்சாட்டுகின்றார். 

கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத ஹால்டிக்கட் கொடுக்காமல் அனுப்பியுள்ளார். மாணவியின் தரப்பில் பல முறை முயற்சித்தும் பொது தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு காரணமான மாணவி தற்கொலை செய்துகொள்ள போவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மாணவி சத்யாதேவியை மன தைரியம் கொடுத்து வைத்துள்ளதாக மாணவியின் தந்தை கணேசன் கூறுகின்றார். 

தானும் தனது மனைவியும் விவசாய கூலி வேலைக்கு சென்று தனது 3 பெண் மற்றும் 2 ஆண் பிள்ளைகளை படிக்க வைத்து வருவதாகவும், தனக்கென எந்த ஆசையும் இல்லாமல் நானும் எனது மனைவியையும் பிள்ளைகளின் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்தி வருவதாக கூறுகின்றார். நான் படிக்காத காரணத்தால் தான் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் நிலை உள்ளதாகவும், தனது பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயர வேண்டுமென்ற எண்ணத்தில் பிள்ளைகளை சிரமப்பட்டு படிக்க வைத்து வருவதாகவும் தந்தை கணேசன் தெரிவித்தார். மேலும், தனது மகள் சத்யாதேவியின் சிறு வயதிலிருந்த கனவை சிதைக்கும் வகையில் கீழநாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செயல்பட்டதால் தனது மகளின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் . 

பள்ளியின் தலைமை ஆசிரியரின் செயலால் செயல்முறை தேர்வும், பொது தேர்வில் தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் எழுத முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு தரும் நலத்திட்டங்களை வைத்தே தனது பிள்ளைகள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார் .

இது குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்களிடம் கூறுகையில், மாணவி சத்யாதேவி 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என தெரிவித்தார். மேலும் ஹால்டிக்கட் வழங்காதது, தமிழ் முதல் தாள் மற்றும் தமிழ் இரண்டாம் தாள் எழுத அனுமதிக்காதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்*

அதேபோல், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவும்,  மாணவி அரசு பொது தேர்வு எழுத முடியாத விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

கட்டுரையாளர்: நாகேந்திரன், 

மதுரை செய்தியாளர், புதிய தலைமுறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com