எடப்பாடி அரசு தப்புமா? தப்பாதா?: நாளை தீர்ப்பு வரை தொடரும் திக்திக்..
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதனால், 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாளை பிற்பகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
என்ன தீர்ப்பு வழங்கப்படலாம்:-
- 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் - சபாநாயகர் முடிவு சரி
- தகுதி நீக்கம் செல்லாது - சபாநாயகர் முடிவு தள்ளுபடி
- நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கலாம். மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு
அடுத்து என்ன நடக்கலாம்:-
- தகுதி நீக்கம் செல்லும் - மறு தேர்தல் - தேர்தல் முடிவு அடிப்படையில் ஆட்சி முடிவாகும்
- தகுதி நீக்கம் செல்லாது - அரசு பெரும்பான்மையை இழக்க வாய்ப்பு - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முயலாம்
- மாறுபட்ட தீர்ப்பு - ஆட்சி தப்பும் - மறு அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை கவலையில்லை
சட்டசபையில் என்ன நிலவரம்:-(தகுதி நீக்கம் செல்லாது என்றால்)
- மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை - 234
- திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - 98
- தினகரன் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் - 22 (எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆதரவு)
- அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்கள் - 3 (கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி)
- சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை - 118 எம்.எல்.ஏக்கள்
- அதிமுக வசம் உள்ள எம்.எல்.ஏக்கள் - 110
- சபாநாயகர் - 1
ஆட்சியமைக்க தேவையான இடங்கள் அதிமுகவிடம் இல்லை. அதிமுகவுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும்.
தகுதி நீக்கம் செல்லும் என்றால் சட்டசபை நிலவரம்:-
- பேரவையின் மொத்தம் பலம் - 216
- ஆட்சி அமைக்க - 109
- அதிமுக - 110
- சபாநாயகர் - 1
- திமுக - 98
- டிடிவி - 1 + 3 (எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆதரவு)
- அதிமுக தோழமை கட்சிகள் - 3
ஆட்சியமைக்க தேவையான இடங்கள் அதிமுகவிடம் உள்ளதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, மறு தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகே அடுத்தக்கட்ட முடிவு தெரியும்.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு கடந்து வந்த பாதை :-
- அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.
- ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டு வந்தார்
- தினகரன் பக்கம் தங்கதமிழ்செல்வன் உட்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு
- தன்னிச்சையாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம்
- கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு
- சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
- 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கூடாது - இடைக்கால உத்தரவில் தனி நீதிபதி
- வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்
- வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 24 ஆம் தேதியன்று ஒத்தி வைப்பு