வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்புக்கு மக்களவை ஒப்புதல் ஏன்?

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்புக்கு மக்களவை ஒப்புதல் ஏன்?
வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்புக்கு மக்களவை ஒப்புதல் ஏன்?
கடும் எதிர்ப்பு மற்றும் தொடர் அமளிகளுக்கிடையே, வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்காளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. சர்ச்சைக்குரிய இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் செய்யும்போதே கடும் எதிர்ப்பு எழுந்த போதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை இந்த மசோதாவுக்கு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவால் பல வாக்காளர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டு அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள், என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. காங்கிரஸ், திமுக, இடதுசாரிக் கட்சிகள், மஜ்லிஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், சிவா சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதற்காக இந்த மசோதா அவசரமாக நிறைவேற்றப்படுகிறது? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதும், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டபோதும், அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தபோதும், மக்களவையில் கடும் அமளி நிலவியது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது; 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் மற்றும் அஜய் மிஸ்ரா கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இந்த அமளிக்கிடையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்காளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் இணைப்பை வாக்காளர்கள் தானாக முன்வந்து செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார். சென்ற வாரம் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேர்தல் ஆணையம் இந்த திருத்தத்துக்கு ஆலோசனை அளித்திருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
ஒரே நபர் பல தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வதை வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்காளரின் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தடுக்கலாம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் தேதியன்று, 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் வாக்காளராக தற்போதைய விதிகளின்படி பதிவுசெய்ய முடியம். மற்றவர்கள் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்களும் வாக்காளர்களாக பதிவு செய்யலாம் என மசோதா மூலம் மத்திய அரசு திருத்தம் செய்வதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த மசோதாவை ஏன் அரசு அவசரமாக நிறைவேற்றுகிறது என எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த மசோதாவை ஒரு நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஏற்கெனவே ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு இந்த திருத்தத்துக்கு பரிந்துரை அளித்திருப்பதாக கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஒரு வாக்காளர் வேறு ஒரு தொகுதியில் பணி நிமித்தமாக தங்க நேர்ந்தால், தபால் வாக்கு அளிக்க அவருக்கும், அவர் மனைவிக்கும் உரிமை அளிக்கப்படுகிறது. மனைவி வேறு தொகுதியில் பணியில் இருந்தால், கணவருக்கும் தபால் வாக்கு உரிமை அளிக்கும் வகையில் "மனைவி" என்கிற வார்த்தை வாழ்க்கைத்துணை என பொருள்படும் "ஸ்பொவ்ஸ்" என்று விதிகளில் திருத்தப்படும் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்த மசோதா அவசரக் கதியில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், அரசு -  எதிர்க்கட்சிகள் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றனர்.
லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கியுள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய உள்துறை இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அரசு தரப்பும், எதிர்க்கட்சிகளும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை அளித்துள்ளார். அதன்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் மாநிலங்களவை குழு தலைவர்களுக்கும் ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தைக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி டிசம்பர் 23-ஆம் தேதி முடிவடையும் எனவும், கூட்டத்தொடரை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவைக்கு திரும்பினாலும் மூன்று நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும்.
ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ள நிலையில், ஏன் இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்பதே பெரும்பாலான எதிர்க்கட்சிகளின கேள்வி. ஒரே நபர் பல இடங்களில் வாக்காளராக பதிவுசெய்து கொள்வதை தவிர்க்கவே இந்த திருத்தம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண்ணானது வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டால், ஒரு நபர் தன் இருப்பிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர்ந்தாலும் சுலபமாக புதிய விலாசத்தில் வாக்காளராக பதிவுசெய்து கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்"(Representation of the People Act) என்று அழைக்கப்படும் தேர்தல் விதிகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஆகியவற்றுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை அமல்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இதுதொடர்பாக சமீபத்தில் பல்வேறு ஆலோசனைகள் மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மற்றும் மாநில அரசுகள் எனப் பல கட்டங்களில் நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் "ஒரு நாடு- ஒரு தேர்தல்" என்கிற குறிக்கோளை நோக்கி மத்திய அரசு செல்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. "ஒரு நாடு-ஒரு தேர்தல்" என நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.
கூடுதல் அரசு செலவினங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்த மசோதா மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஒப்புதல் பெறாவிட்டால் முக்கிய அரசு செலவினங்களில் சிக்கல் ஏற்படும் என்கிற நிலையில், இதை மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
- கணபதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com