தமிழ்நாடு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர் படங்கள் இடம்பெற்றுள்ளன? - ஓர் பார்வை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர் படங்கள் இடம்பெற்றுள்ளன? - ஓர் பார்வை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர் படங்கள் இடம்பெற்றுள்ளன? - ஓர் பார்வை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பிற தலைவர்களின் படங்கள் குறித்துப் பார்க்கலாம். சட்டப்பேரவையில் ஏற்கனவே 15 தலைவர்கள் படங்கள் உள்ள நிலையில் 16ஆவதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படம் இடம் பெறுகிறது. 

தேசத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் சேவையினை கவுரவப்படுத்தவும் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் உருவப்படங்கள் வைக்கப்படுகின்றன. அந்த வகையில்1948ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதுதான் சட்டப்பேரவையில் இடம் பெற்ற முதல் படம். இதை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்து வைத்தார். இதற்கு அடுத்த மாதமே ராஜாஜியின் படத்தை, அப்போதைய பிரதமர் ஜவஹா்லால் நேரு திறந்து வைத்தார். சட்டப்பேரவையில், ஒரு தலைவர் உயிருடன் இருக்கும்போது அவருக்கு திறக்கப்பட்ட உருவப்படம் என்றால் அது ராஜாஜியின் படம் மட்டுமே.

இதன்பின் 1964 ஆம் ஆண்டு மாா்ச் 22 ஆம் தேதி திருவள்ளுவரின் படத்தை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீா் ஹுசேன் திறந்து வைத்தார். இதன் பின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் உருவப்படத்தை 1969 பிப்ரவரி 10 ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி திறந்து வைத்தாா்.

இதைத்தொடர்ந்து, 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆா் முதல்வராக இருந்த போது ஐந்து தலைவா்களின் உருவப் படங்கள் சட்டமன்ற பேரவையில் திறக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் படத்தை 1977 ஆகஸ்ட் 18 ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, தந்தை பெரியாா், அண்ணல் அம்பேத்கா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், காயிதே மில்லத் ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் 1980 ஆகஸ்ட் 9 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநா் ஜோதி வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

1992 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதற்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவின் படம் கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராமசாமி படையாட்சியாரின் உருவப் படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தாா்.

2021 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் உருவ படங்களை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கு அடுத்தபடியாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து சட்டப்பேரவையில் உள்ள தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 16 ஆக உயரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com