இவர்கள், தமிழ் சினிமாவின் அடுத்த வாரிசுகள்!

இவர்கள், தமிழ் சினிமாவின் அடுத்த வாரிசுகள்!

இவர்கள், தமிழ் சினிமாவின் அடுத்த வாரிசுகள்!
Published on

சினிமாவில் குடும்ப வாரிசுகளுக்கு பஞ்சமில்லை. ஏராளமான வாரிசுகள் வரிசைக் கட்டி நிற்கிறார்கள். இதற்கு விஜய் முதல் விக்ரம் பிரபு வரை சாட்சி. இவர்களை அடுத்தும் நல்ல நாள் பார்த்து, வலது கால் வைக்க காத்திருக்கிறார்கள் நட்சத்திர குடும்ப வாரிசுகள். அவர்களை பற்றிய சிறு குறிப்புகள் இங்கே:

துருவ்:


நடிகர் விக்ரமின் மகன். அப்பாவின் ஃபோட்டோ காப்பி போலவே இருக்கும் துருவ்வுக்கு ஹீரோ ஆசை இருக்கிறது. இதற்காக எதையெல்லாம் கற்க வேண்டுமோ அதையெல்லாம் கற்றிருக்கிறார் துருவ். விரைவில் இவர் ஹீரோவாகும் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட்.

ஜான்வி:


ஸ்ரீதேவியின் செல்ல மகள். கடந்த சில வருடங்களாகவே இவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். அதில் ஒன்று தமிழில் சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார் என்பது. இதை மறுத்தார் சசிகுமார். தனது மகன் அகில் ஜோடியாக நடிக்க வைக்க நாகார்ஜூனாவே, ஸ்ரீதேவியிடம் பேசியதாக வந்தது செய்தி. அதுவும் வதந்திதான். இருந்தாலும் தமிழோ, இந்தியோ விரைவில் ஹீரோயினாக பார்க்கலாம் ஜான்வியை. இதற்கிடையே, ‘அவர் நடிக்கமால் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி’ என்றிருக்கிறார் ஸ்ரீதேவி.

பிரணவ்:


மோகன்லால் மகன். 2002-ல் ஒன்னமன், புனர்ஜனி என்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரணவ், பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு உதவி இயக்குனர் ஆனார். தமிழில் பாபநாசம், மலையாளத்தில் லைஃப் ஆப் ஜோசுட்டி படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பிரணவ், வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்கவில்லையாம். இப்போது மலையாள படம் ஒன்றின் மூலம் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.

ஷிவானி:


’இதுதான்டா போலீஸ்’ ராஜசேகர்- ஜீவிதா தம்பதியின் மகள். சினிமாவுக்காக பரதம், குச்சுபுடி உள்ளிட்ட நடன வகைகளை நன்றாக படித்திருக்கிறார். கீ போர்ட், கிடார், வீணை என மியூசிக் ஏரியாவிலும் ஷிவானி மிரட்டுவார். மூன்றாவது வருடம் மருத்துவம் படிக்கும் ஷிவானியை, ’கும்கி 2’வில் பிரபு சாலமன் அறிமுகப்படுத்த இருக்கிறார் என்றார்கள். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனாலென்ன, ஷிவானிக்காக திறந்தே இருக்கிறது கோடம்பாக்க வாசல்!

சுப்புலட்சுமி:


முன்னாள் ஹீரோயின் கவுதமியின் மகள். நடிக்க ஏகப்பட்ட அழைப்புகள் வந்தும் மறுத்துவிட்டார் கவுதமி. ஏனென்றால், அப்போது சின்ன வயது. இப்போது சுப்புலட்சுமி நடிக்க ரெடியாகி விட்டார் என்கிறார்கள். நல்ல இயக்குனருக்கும் நல்ல கதைக்கும் காத்திருக்கிறாராம் சுப்புலட்சுமி. 

ஷ்ரவண்:


முன்னாள் ஹீரோயின் சரிதாவின் மூத்த மகன் ஷ்ரவண். துபாயில் மருத்துவம் படித்துள்ள இவரை ஹீரோவாக்கும் முயற்சியில் இருக்கிறார் சரிதா. தமிழோ, மலையாளமோ நல்ல கதைக்கு காத்திருக்கும் ஷ்ரவண் இப்போது இருப்பது துபாயில். நியூசிலாந்தில் படித்த சரிதாவின் இன்னொரு மகன் தேஜாஸும் அவருடன் தான் இருக்கிறார்.

ஜோவிதா:
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள். பாரதிராஜா இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தவர். அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்கிறார் ஜோவிதா. இவரும் சினிமாவுக்காக நடனம், நடிப்பு உள்ளிட்ட விஷயங்களை கற்றிருக்கிறார். 

ராம்கேசவ்:


முன்னாள் ஹீரோயின் அம்பிகாவின் மூத்த மகன். அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த ராம்கேசவை ஹீரோவாக்கும் முயற்சியில் கோடம்பாக்கத்துக்கு அழைத்துவந்துவிட்டார் அம்பிகா. இப்போது கதை தேடும் படலம் நடக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.

குறளரசன்:


டி.ஆரின் இரண்டாவது மகன். சிம்புவின் தம்பி. 'இது நம்ம ஆளு' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான குறளை ஹீரோவாக்க முடிவெடுத்திருக்கிறாராம் அப்பா. சீக்கிரமே அண்ணன் வழியில் இவரும் ஹீரோவாகும் வாய்ப்பிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com