ChatGPT-க்கு ஏன் சில நாடுகள் தடை விதித்து இருக்கிறார்கள்? அப்படி என்ன அச்சுறுத்தல் அதனால்?

உலகம் முழுவதும் இணையதள தேடலில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் சாட்ஜிபிடிக்கு, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
ChatGpt
ChatGptTwitter

சாட்ஜிபிடி என்பது என்ன?

உலகம் முழுவதும் இன்று, பேசுபொருளாக மாறியிருக்கிறது இணைய பூதமான, சாட்ஜிபிடி (ChatGPT). இது, செயற்கை நுண்ணறிவு (AI-Artificial intelligence) தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் செயலி உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. தவிர, இதன் சமீபத்திய வெர்ஷன் ஜிபிடி4 பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவும் கூகுளைப் போன்ற ஒரு சாஃப்ட்வேரே ஆகும். ஆனால், கூகுளைவிட அதிக பயன் தருவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மனிதனைப்போல் இயந்திரங்களாலும் யோசிக்க முடியும் என செய்து காட்டி அசத்தும் தொழில்நுட்பமே இந்த சாட்ஜிபிடி. இது, கூகுளுக்கே சவால் விடும் வகையில் இருப்பதால்தான் உலகம் முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

கூகுள்
கூகுள்file image

கூகுளை மிஞ்சி நிற்கும் சாட்ஜிபிடி

அதாவது, நமக்கு ஒரு விஷயம் பற்றித் தெரிய வேண்டுமானாலோ அல்லது அதற்குப் பதில் தெரிய வேண்டும் என விரும்பினாலோ உடனே கூகுளில்தான் அதுகுறித்துத்தான் தேடுகிறோம். கூகுளும் நமக்கு விடை சொல்கிறது. கூகுள் 90 சதவிகிதம் அளவுக்கு விடை சொல்கிறது என்றால், சாட்ஜிபிடி அதை மிஞ்சி நிற்கிறது என்று சொல்லப்படுகிறது. உண்மையில், இதற்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று பலரும் வியந்து கூறுகிறார்கள். இந்தப் புதிய தொழில்நுட்பம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது போன்றே, மிகவும் நேர்த்தியாகக் கட்டுரைகளை உருவாக்குகிறது.

”சாட்ஜிபிடி உலகை மாற்றிவிடும்!”

எத்தகைய கேள்விகளைக் கேட்டாலும் அதை உள்வாங்கிக் கொள்ளும் சாட்ஜிபிடி, அவற்றுக்குச் சரியான தொழில்முறை தீர்வுகளை அளித்து உதவுவதாகக் கூறப்படுகிறது. மனிதர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிப்பதோடு நின்றுவிடாமல், அவர்கள் விரும்பும் கவிதைகள், கதைகளைக்கூட உருவாக்கித் தந்து, அவர்களுடைய இதய சிம்மாசனத்தில் அச்சாரம் போட்டு அமர்ந்துவிடுகிறதாம். மேலும், கம்ப்யூட்டர் நிரல்களையும் உருவாக்கித் தரக்கூடியதாக இருக்கிறதாம்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்file image

இதனால்தான் அதன் சேவைகள் குறித்து உலகமே அதிர்ந்து நிற்கிறது. தவிர, அதன் வேகமும் வருங்காலத்தில் இன்னும் கூடுதலாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்துத்தான் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், ”சாட்ஜிபிடி உலகை மாற்றிவிடும்” என்கிறார். இதை, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன் ஏ.ஐ., கடந்தாண்டு நவம்பரில் வெளியிட்டது. தற்போது அதன் அபரிமிதமான வளர்ச்சியில் இணையதளம் உலகமே மிரண்டுபோயுள்ளது. காரணம், சாட்ஜிபிடியின் வருகையால், எதிர்ப்புகளும் உருவாகி உள்ளன.

சாட்ஜிபிடிக்கு எதிர்ப்பு

குறிப்பாக, சாட்ஜிபிடியின் சில பதில்கள் வன்முறையை தூண்டுவதாகச் சொல்லப்படுகிறது. அதுபோல், சில பதில்களின் நம்பகதன்மை கேள்விக்குறியானதாலும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. முக்கியமாக, இதன் வருகையால், பல துறைகளில் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை வரலாம் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே கொரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்புக்குப் பிறகு பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது.

பணி நீக்கம்
பணி நீக்கம்file image

ரோபோக்களிலும் சாட்ஜிபிடியைப் புகுத்த திட்டம்

முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் வேலைகளை பறிப்பதற்கு, சாட்ஜிபிடிதான் முதல் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பல நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் ஊழியர்களுக்குப் பதிலாக சாட்ஜிபிடி பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதன்காரணமாக, வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கும் வலைதளங்கள் சில, நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ரோபோக்களிலும் சாட்ஜிபிடியைப் புகுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன.

ரோபோ
ரோபோfile image

எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்

ரோபோக்களின் இயக்கத்திற்குப் பின்னால் மனிதர்கள் உருவாக்கும் கோடிங்கைக்கூட, வருங்காலத்தில் சாட்ஜிபிடியே உருவாக்கும் என்ற நிலை உருவானால் அது மனிதகுலத்துக்கே பேராபத்தாக முடியும் எனச் சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கே சொல்ல வேண்டுமானால் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தைச் சொல்லலாம். அதில் ரஜினி தயாரிக்கும் ரோபோ, அவருக்கே எதிராகச் செயல்படும். அதுபோல், சாட்ஜிபிடியும் செய்ய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உலகத்தின் இரண்டாவது பணக்காரரான எலான் மஸ்கே, ”இன்றைய தேதியில் இது மிக ஆபத்தான செயற்கை நுண்ணறிவு” எனக் கூறியிருக்கிறார்.

சாட்ஜிபிடியைத் தடை செய்த நாடுகள்

இதையடுத்துத்தான், சில நாடுகள் அதைத் தடை செய்யும் முயற்சியில் இப்போதே களம் இறங்கிவிட்டன. மாணவர்கள் தங்கள் பணிகளுக்கு ஆயத்த பதில்களைக் கண்டறிய இதைப் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து, இது வெளியான ஒரு மாதத்திற்குள் நியூயார்க்கில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுக் கருவிகளில் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய அசைன்மென்டுகளை தயாரிப்பதால், இந்தியாவிலும் சில பல்கலைக்கழகங்கள் இதைத் தடை செய்திருக்கின்றன. ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களும் சாட்ஜிபிடியை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கனடாவும் கல்வித் துறையில் சாட்ஜிபிடியைத் தடை செய்துவிட்ட நிலையில், தற்போது இத்தாலி, வடகொரியா, ஈரான், ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் தடை செய்துள்ளன.

அமெரிக்கா கொடி
அமெரிக்கா கொடிfile image

தடை செய்த இத்தாலி

நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம், ChatGPT தயாரிப்பாளரான OpenAI, அதன் பயனர்களின் தரவைத் திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. தவிர, சிறார்களை சட்டவிரோதமான விஷயங்களுக்கு வெளிப்படுத்துவதைத் தடுக்க சாட்ஜிபிடியில் வயது சரிபார்ப்பு அமைப்பு இல்லை என்று இத்தாலிய அமைப்பு கூறியுள்ளது. இதன்மூலம், தனியுரிமைக் காரணங்களுக்காக சாட்ஜிபிடியைத் தடை செய்த முதல் நாடாக இத்தாலி மாறியுள்ளது. அதேசமயம், சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகளும், சாட்ஜிபிடியை வேண்டுமென்றே அணுக முடியாத நிலையில் இருக்க தடை செய்யப்பட்டுள்ளது.

சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகளை பயன்படுத்தி, அமெரிக்கா தவறான தகவல்களை பரப்பி, சர்வதேச உரையாடலை வழிநடத்தலாம் எனும் அச்சம் சீனாவுக்கு இருக்கிறது. இதையடுத்தே இந்த சாட்ஜிபிடிக்கு சீனா தடைவிதித்துள்ளது. ஏற்கெனவே சீனா - அமெரிக்காவுக்கு இடையே மோதல் முற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல், சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனும் கவலை ரஷ்யாவுக்கு இருப்பதால், அந்நாடும் சாட்ஜிபிடிக்கு அனுமதி அளிக்க விரும்பவில்லை. அதுபோல் கியூபா, ஈரான், சிரியா, வடகொரியா போன்ற நாடுகளும் சாட்ஜிபிடிக்கு அனுமதி அளிக்க விரும்பவில்லை. இதில் வடகொரியா, சிரியா, கியூபா, ஈரான் போன்ற நாடுகளில் இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு வருவதுடன், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com