லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா......

லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா......

லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா......
Published on

பெண்களின் பாலியல் உணர்வு மற்றும் தேவைகள் அது குறித்த கனவுகள் ஆசைகள் போன்றவை எப்போதும் பாவகரமான ஒன்றாகவும் கூடாததாகவுமே பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு பெண் பேசினால் அவள் மோசமானவள் என்று பொது வெளியில் பேசும் ஆண்கள் பெரும்பாலும், பெண்கள் தங்களிடம் அதே வார்த்தைகளை யாருக்கும் தெரியாமல் அந்தரங்கமாக பேசினால் ரசிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.இது இந்த ஆணாதிக்க சமூகத்தின் முரண் முகம்.

ஃபயர் படம் வந்த போது மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆணிடம் தங்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத இரு பெண்கள் தங்களுக்குள்ளாக அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கதை அது. திருமணமான ஆண் ஒருவன் தனது மனைவியிடம் தனது பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது அவன் எல்லை கடக்க முயற்சித்தால் “என்ன செய்வான் பாவம்?” என்று பரிதாபப்படும் இந்தச் சமூகம், ஒரு மனைவிக்கு அத்தகைய நிலை ஏற்பட்டு அவள் எல்லை கடக்க முயற்சித்தால், மோசமானவள் என்று குற்றம் சாட்டுகிறது. இந்த மனப்பான்மையின் வெளிப்பாடுதான் ஃபயர் படத்திற்கு வந்த எதிர்ப்பு. தற்போது அப்படி ஒரு தடையைச் சந்தித்த படம் லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா.கெங்கனா சென் ஷர்மா, ரத்னா பதாக் ஷா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ள அந்த இந்திப்படத்தை இயக்கியவர் அலன்க்ரிதா ஸ்ரீவட்சவா எனும் பெண் இயக்குனர். 18ல் இருந்து 55 வயது உடைய நான்கு பெண்கள்தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். புர்கா அணிந்த கல்லூரிப் பெண், ஒரு இளம் அழகுக் கலை நிபுணர், மூன்று குழந்தைகளின் தாய், வயதான விதவை என அந்த நான்கு பெண்களின் உணர்வுகளைத்தான் இந்தப் படம் சொல்கிறது. அவர்கள் ரகசியமாக லிப்ஸ்டிக் பூசிக் கொள்கிறார்கள். காண்டம் பற்றி உரையாடுகிறார்கள். சிகரெட் குடித்துப் பார்க்கிறார்கள்... இப்படியாக எதுவெல்லாம் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அதையெல்லாம் செய்து பார்க்கிறார்கள்.

2016 டிசம்பரில் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்படவிழாவில் முதன் முதலாக இந்தப் படம் திரையிடப்பட்டது. பின்னர் மும்பை திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டது. ஸ்பிரிட் ஆப் ஏசியா விருது மற்றும் பாலியல் சமத்துவத்திற்கான ஆக்ஸ்பாம் விருதும் இந்தப் படத்திற்குக் கிடைத்தன.அதன்பிறகு இந்தப் படம் 2017 ஜனவரியில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கைக் குழு இந்தப்படத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இந்தப் படத்தின் கதை பெண்களை மையப்படுத்தியுள்ளது. அவர்களின் கற்பனையானது எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. பாலியல் காட்சிகள் இருந்தன. ஆபாச வார்த்தைகள் இருந்தன. ஆடியோ போர்னோ கிராபி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வை பாதிக்கிறது என தணிக்கைக் குழு பல்வேறு காரணங்களைச் சொல்லி படத்திற்கு சான்றிதழ் தர மறுத்து விட்டது.இயக்குனர் அலன்க்ரிதா மேல் முறையீட்டுக் குழுவுக்குச் சென்றார்.பெண்களின் பாலியல் விருப்பத்தையும் அவர்களின் வெளிப்படுத்தலையும் ஆபாசம் இல்லாமல் உணர்வுப் பூர்வமாகக் கையாண்டால், அதை அனுமதிக்காமல் இருக்க முடியாது என்று கூறியது மேல்முறையீட்டுக் குழு. ஏ சான்றிதழோடு படம் வெளி வர இருக்கிறது.
அலன்க்ரிதா ஆசுவாசமடைந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்தார்கள். சில வசனங்களை வெட்டினார்கள் என்று சொன்ன அவர், அவர்களின் தணிக்கையால் தனது கதையம்சமோ கருவோ பாதிக்கப்படவில்லை. தனது படத்திற்கு மேல்முறையீட்டுக் குழு ஆதரவாகத்தான் இருந்தது என்றார். ஒரு வழியாக படம் அடுத்த மாதம் வெளி வர இருக்கிறது. வெளிவந்த பிறகு என்ன வெடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com