எளியோரின் வலிமைக் கதைகள் 7 - "ரெண்டு பேரும் ஆட்டோ ஓட்டுறோம்... வீட்டு வேலைலயும் சரிசமம்!"

எளியோரின் வலிமைக் கதைகள் 7 - "ரெண்டு பேரும் ஆட்டோ ஓட்டுறோம்... வீட்டு வேலைலயும் சரிசமம்!"
எளியோரின் வலிமைக் கதைகள் 7 - "ரெண்டு பேரும் ஆட்டோ ஓட்டுறோம்... வீட்டு வேலைலயும் சரிசமம்!"

பயணம் என்றாலே பேருந்துப் பயணம், ரயில் பயணம், கார் பயணம், விமானப் பயணம், கப்பல் பயணம் என பட்டியல் நீளும். சாமானிய மக்களுக்கு அதிகப்படியான பயணம் என்பது பேருந்துப் பயணம் மற்றும் ரயில் பயணங்களாக அமையும். அவசரப் பயணம் எனில் எப்போதும் ஆட்டோதான். குறிப்பாக, நடுத்தர குடும்பங்களின் அவசரத் தேவைகளுக்கு ஆட்டோதான் ஆத்மார்த்த நண்பன்.

கொரோனா பேரிடர் காலத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்கள் மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில், சாதாரண ஆட்டோக்களும் வாடிக்கையாளர்களால் ஷேர் ஆட்டோக்களாகப் பகிரப்பட்டு வருவதைக் காண முடிகிறது. சரி, ஆட்டோ ஓட்டுநர்கள் - ஆட்டோ முதலாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய சிலரை சந்தித்தேன். பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர் என்றாலே நினைவில் கொள்வதும் நேரில் பார்ப்பதும் ஆண்களைத்தான். இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களும் ஓட்டுநர்களாக வலம் வருவதை காண முடிகிறது. அந்த வகையில், முதலில் பெண் ஓட்டுநர் சித்ராவை முதலில் சந்தித்தேன்.

"முதலில் நான் பஸ் ஓட்டுவதற்குதான் விருப்பப்பட்டேன். எட்டாவது வரைக்கும் புதுச்சேரியில படிச்சேன். படிப்ப முடிச்சிட்டு வீட்ல இருக்க எனக்கு பிடிக்கல. அந்த நேரத்துல எனக்கு குப்புசாமி என்பவரோட திருமணம் செஞ்சு வச்சுட்டாங்க. வீட்டில சும்மா இருக்க முடியல. டிரைவிங் பண்ணுகிற என்னுடைய விருப்பத்தை நான் அவர்கிட்ட சொல்லிகிட்டே இருந்தேன். அவர் ஏற்கெனவே ஆட்டோ ஓட்டிட்டு இருந்தாரு. அப்ப எல்லாம் அவர் அதுக்கு சம்மதிக்கலை. எனக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள். அவங்க பிறக்கிற வரைக்கும் என் கணவர் என்னை ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்கலை.

அதுக்கப்புறம் குடும்பச் சூழலில் இரண்டு பேர் வேலை செஞ்சாதான் ஓரளவுக்கு குடும்பத்தை காப்பாத்த முடியும்னு அவர் சம்மதித்தார். நான் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கும்போது எனக்கு வயசு 22... இப்ப எனக்கு வயசு 43.

ஆட்டோவுல ஆள் சவாரிங்க மட்டுமில்லாமல் லோடு, ட்ரிப் அடிக்கிறது அப்படின்னு தினமும் ஏதாவது வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். எல்லா நாளும் வேலை இருக்கும்ன்னு சொல்ல முடியாது. அப்ப எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரொம்ப குறைவா இருந்ததால ஓரளவுக்கு வீட்டுக்குத் தேவையான அளவுக்கும் அப்புறம் சேமிக்கிற அளவுக்கும் பணம் சம்பாதிக்க முடிஞ்சது. இப்ப எல்லா செலவும் போக ஒரு நாளைக்கு நூறு ரூபா வீட்டுக்கு எடுத்துகிட்டு போறதே சிரமமா இருக்கு.

நாங்க ரெண்டு பேருமே ஆட்டோ ஓட்டுவதனால வீட்டில இருக்கிற வேலையையும் சரிபாதியாக பிரித்து செய்வோம். ஏன்னா, இந்த தொழில்ல எவ்வளவு கஷ்டங்கள் இருக்குன்னு இரண்டு பேருக்குமே புரியும். அதனால ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிகிட்டு நடந்துக்குறோம்.

என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் இந்த ஆட்டோ ஓட்டிதான் நாங்க ரெண்டு பேரும் டிகிரி வரைக்கும் படிக்க வெச்சு கல்யாணம் பண்ணி கொடுத்தோம். இந்த ஆட்டோவை நாங்க வாழ்க்கையில் மிக முக்கியமான ஒண்ணா பார்க்கிறோம்.

சில நேரங்களில் சவாரிக்கு வர்றவங்க, 'பொம்பள ஆட்டோ ஓட்டுறாங்க'-ன்னு வண்டியில் ஏற மாட்டாங்க. ஏன்னா... பேரம் பேசுவதில் அவங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கும், நான் அதைபத்தியெல்லாம் கவலைப்பட்டுகிட்டு இருக்கிறது இல்லை. 'எவ்வளவு தருவீங்க... சொல்லுங்க'ன்னு நானே முதலில் கேட்டுடுவேன். அதுக்கப்புறம் அவங்க சொல்றத வச்சு ஆட்டோ ஓட்டிட்டு போவேன். எனக்குத் தெரிஞ்சி யாரும் கேட்ட காசை கொடுத்ததே இல்லை.

ஆட்டோ மட்டும் இல்லைங்க... சில நேரத்துல லோடு தூக்குற வேலையையும் சேர்த்து செய்யவேண்டி இருக்கும். எப்படியோ இந்த ஆட்டோ எங்களோட பிள்ளைகளைப் போல குடும்பத்தில ஒன்னோட ஒண்ணா கலந்துருச்சி அப்படிங்கற சந்தோஷம் மட்டுமே எங்களை இன்னிக்கு வரைக்கும் ஓட்டிக்கிட்டு போகுதுன்னு சொல்லலாம்" என்றார் சித்ரா.

விலைவாசி உயர்வு ஒரு வகையில் ஆட்டோ பயணத்தை சாதாரண மக்களிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அவசர காலத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் உடனடி தேவையாக தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதில் ஆட்டோவின் பங்கு பெரும் பங்கு உண்டு. ஓரிரு இடங்களில் பேரம் பேசினாலும் பயணத்தை தவிர்க்க முடியாமல் சிலர் அதிக கடினமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆட்டோ பயணத்திலேயே பயணிக்கிறார்கள். ஆனாலும், இன்றுவரை ஆட்டோவில் பயணம் செய்ய பேரம் பேசுபவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்கிறார் 62 வயதான ஆட்டோ ஓட்டுநர் ராஜா.

"எனக்கு சொந்த ஊர் புதுச்சேரி பக்கத்தில் இருக்கிற பக்கிரி பாளையங்க. சின்ன வயசிலேயே மும்பைக்கு வேலைக்கு போயிட்டேன். அங்க ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தேன். திடீர்னு அந்த கம்பெனியில் வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க. உடனே வேற வேலைக்கு என்னால போக முடியல. அப்ப 1981... அந்த நேரத்துலதான் என் கூட இருந்த கூட்டாளிங்க சொன்ன ஐடியாவை கேட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்தங்க.

அப்போ மும்பையிலேயே ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்து ஓட்டினா, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஆட்டோ வாடகை 35 ரூபாய். 200, 300 சம்பாதிக்கலாம். அப்ப பெட்ரோல் விலை ஒன்பது ரூபாய். அப்பவே மும்பையில் ஒரு கிலோ மீட்டர் ஆட்டோ பயணிக்க இருபது ரூபா வரைக்கும் வாங்குவோம். அப்படியே கொஞ்ச நாள் வாழ்க்கை ஓடுச்சு. அப்புறம் கல்யாணம் பண்ணிட்டேன்.

எனக்கு மூணு பொண்ணுங்க. இப்ப மூணு பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. இதுக்கு மேல மும்பையில் இருக்க முடியாதுன்னு 1988-ல் பாண்டிச்சேரிக்கு வந்துட்டேன். அப்புறம் அங்க ஒரு பெட்ரோல் ஆட்டோ வாடகைக்கு எடுத்து ஓட்டிட்டு இருந்தேன். மும்பையில் இருந்த மாதிரி பெரிய ஓட்டம் எல்லாம் இல்லை. பாண்டிச்சேரியில அப்பவே முப்பது ரூபா ஆட்டோ வாடகை. பெட்ரோல், விலை இருபத்தி ஒரு ரூபாய். மும்பையை விட சவாரி செய்றவங்க காசு குறைவாதான் கொடுப்பாங்க. என்ன, ஒரு கிலோமீட்டருக்கு 15 ரூபா, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி 20 ரூபாயா மாறிச்சு.

2019-ல எனக்கு சொந்தமான நானே ஒரு டீசல் ஆட்டோ வாங்கிட்டேன். மாசம் 8000 ரூபாய் டியூ கட்டிட்டு வர்றேன். ஒன்பது ரூபா பெட்ரோல் விலை இருக்கும்போது ஆட்டோ ஓட்டுன நான், இப்ப 102 ரூபா பெட்ரோல் விக்கிற காலம் வரைக்கும் ஆட்டோ ஓட்டிகிட்டுதாங்க இருக்கேன். இப்பதான் டீசல் ஆட்டோ சொந்தமா வாங்கி இருக்கேன்.

கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் விலைக்கு வந்துடுச்சு. 93 ரூபாய். இப்ப எல்லாம் ஒரு கிலோமீட்டர் இரண்டு கிலோமீட்டர் அப்படின்னு பேரம் பேசவும் முடியாது. மீட்டர் போட்டும் வண்டி ஓட்ட முடியாது. மீட்டருக்கு குறைந்தது முப்பது ரூபாய். அதுக்குள்ளேயே இறங்கி போற கஸ்டமரும் வருவாங்க இல்லையா... அப்ப நமக்கு மீட்டர் பயன்படாது போய்விடும். ரெண்டு பேர், மூணு பேரா சேர்ந்து வந்தா குறைந்தது 50 ரூபாய் இல்லாம சவாரி ஓட்ட முடியாதுங்க. 50 ரூபாய் குடுக்குறதுக்கு ஆளுங்க உடனே வர்றது இல்ல. ரெண்டு மூணுபேர் சேர்ந்து வந்தா உண்டு... இல்லையா ரொம்ப அவசர தேவையா யாராவது வந்தா உண்டு.

ஆட்டோ சவாரிக்கெல்லாம் ஆளுங்க வந்து கிட்டத்தட்ட 5 வருஷம் ஆயிடுச்சி. ஏதோ ஆஸ்பத்திரிக்கு போறவங்க கல்யாணத்துக்கு போறவங்க போன்ற கஸ்டமர் இருப்பதனால்தான் பொழப்பு ஓடுது. அவங்க இல்லன்னா குடும்ப நடத்துறது ரொம்ப ரொம்ப சிரமம்" என்றார் ராஜா.

நாம் ஒவ்வொரு முறையும் பயணிக்கும்போது ஒரு ஆட்டோ ஓட்டுநரை சந்திக்கிறோம். அந்தப் பயணம் தினமும் கூட அமைவது இல்லை. ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் தினமும் பல பயணிகளை சந்திக்கிறார்கள். ஒவ்வொரு பயணிகளின் நடவடிக்கைகளையும் கவனிக்கிறார்கள். அப்படி பலரிடமிருந்து பல செயல்களை அவர் தெரிந்துகொள்கிறார். அந்த வகையில் தன் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொள்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com