எளியோரின் வலிமைக் கதைகள் 17: ‘சிலிண்டர தூக்கிட்டு மாடி ஏறும்போது நெஞ்சு வலிக்கும் பாருங்க’

எளியோரின் வலிமைக் கதைகள் 17: ‘சிலிண்டர தூக்கிட்டு மாடி ஏறும்போது நெஞ்சு வலிக்கும் பாருங்க’

எளியோரின் வலிமைக் கதைகள் 17: ‘சிலிண்டர தூக்கிட்டு மாடி ஏறும்போது நெஞ்சு வலிக்கும் பாருங்க’
Published on

மனிதர்கள் உணவு சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆதி காலங்களில் சிக்கிமுக்கிக் கல்லை கொண்டு தீ பற்ற வைத்து வேக வைத்த உணவுகளை சாப்பிட பழகினாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அடுப்புகளை பயன்படுத்த தொடங்கினார்கள். அதற்கு பிறகு மண்ணெண்ணை அடுப்புகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே கேஸ் சிலிண்டர் மூலமாகத்தான் சமையல் வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார்கள் பெரும்பாலான மக்கள்.

அப்படிப்பட்ட கேஸ் சிலிண்டரை, மற்ற பொருட்கள் வாங்குற மாதிரி மக்களே போய் வாங்கிட்டு வர முடியாது. ஏனென்றால், அதனுடைய எடை... அதற்கான ஆபத்து என நிறைய அச்சம் மக்களிடம் இருக்கும். அப்படிப்பட்ட கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்காகவே கேஸ் கம்பெனி, ஆட்கள் வைத்திருப்பார்கள். கனமான அந்த சிலிண்டரை தூக்கிக்கொண்டு மக்களிடம் கொடுத்து, அவர்கள் கொடுக்கும் சொற்ப காசை வாங்கிக்கொண்டுதான் இன்னமும் நிறையே பேர் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்றாங்க. அப்படி கேஸ் விநியோகம் செய்யும் நபர்களைதான் இன்றைய தொடரில் பார்க்கப்போகிறோம்.

“பேரு கண்ணன். வயசு முப்பத்தி ஏழு ஆரம்பிச்சுட்டு சார். 18 வருஷமா இந்த சிலிண்டர் போடுற வேலையதாங்க செய்கிறேன். நான் வேலைக்கு வந்தப்ப சிலிண்டர் கொண்டு போய் வீடுகளில் போட்டா ஒரு சிலிண்டருக்கு 2 ரூபாய் கொடுப்பாங்க. எத்தனை மாடியாக இருந்தாலும் சரி, இந்த ரெண்டு ரூபாய்தாங்க தருவாங்க. அதுக்கு மேல தரமாட்டாங்க.

காலையில 7 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்திடுவேன். சாயங்காலம் எப்ப போறதுன்னு தெரியாது. எவ்வளவு டெலிவரி இருந்தாலும் முழுசும் வேலை செஞ்சுட்டுதான் போவனும். ஒரு சிலிண்டர் குறைந்தது 34 கிலோ இருக்கும். ஒவ்வொரு வீடும் பக்கத்துல பக்கத்துலதான் இருக்குன்னு சொல்ல முடியாதுங்க. இந்த கடைசியில் ஒரு வீடு இருந்தா, அந்தக் கடைசியில் ஒரு வீடு இருக்கும். இந்த தெருவில ஒரு வீடு இருந்தா, அந்த தெருவில ஒரு வீடு இருக்கும். வீடு எங்க இருந்தாலும் சிலிண்டரை உங்களுக்கு எடுத்துக் கொண்டு போய் கொடுப்பதுதானே எங்க வேலை.

கம்பெனியில் ஒன்னும் பெருசா சம்பளம் தரமாட்டாங்க. எனக்கு அப்போது 500 ரூபாய் கொடுப்பாங்க மாசம். அதுக்கு பிறகு ஒவ்வொரு வீட்டிலும்போய் சிலிண்டர் போடும்போது அவங்க இரண்டு, மூணு ரூபாய் கொடுப்பாங்க. அது வச்சிகிட்டுத் தாங்க குடும்பத்தை ஓட்டணும். அதுவும் இப்ப எல்லாம் ஆன்லைனில் புக்கிங் பண்றதால பணத்தையும் ஆன்லைன்லேயே கட்டிடுவாங்க. சில வீடுகளில் காசு கொடுக்காமல் விட்டுடுவாங்க. அதையெல்லாம் பார்க்க முடியுமா?

நான் என்ன சிலிண்டர் கம்பெனி ஓனரா? நானோ கூலி வேலை செய்றவன்தாங்க. அப்ப மூணு சக்கர வண்டியில் எட்டு சிலிண்டர் வரைக்கும் வச்சிகிட்டு போவோம். அதுக்கு மேல வண்டி ஓட்ட முடியாது. அதுக்கே எப்படா வீட்டுக்குப் போவோம்னு தோணும். வீட்டுக்கு போனதும் துண்டை விரிச்சு படுத்தால், அசதியில தூக்கம் எப்படி வரும்னு தெரியாது. அப்படி ஒரு தூக்கம் வரும். நிம்மதியா தூக்கம் வந்தாலும் கூட கனவுல காலையில் எந்திரிச்சு வேலைக்கு போகிற நினைப்பும் வந்துடும். மறுபடியும் எழுந்திருச்சு காலையில வேலைக்கு வருவோம்.

இரண்டாவது மாடி, மூணாவது மாடின்னு சிலிண்டர தூக்கிட்டுபோய் போடும்போது நெஞ்சுவலிக்கும் பாருங்க; அப்படியே உட்கார்ந்துல்லாம்போல இருக்கும். ஆனால் கீழே இருக்கிற வண்டியில சிலிண்டரை பார்த்தேன்னா, இன்னும் நிறைய டெலிவரி இருக்குன்னு, வலியை பொறுத்துக்கிட்டு வேலையை செய்ய ஆரம்பிச்சுடுவேங்க. என்ன இப்ப தள்ளுவண்டியில் இருந்து கொஞ்சம் மாறி டாட்டா ஏசியில கொண்டு போறேன். டாட்டா ஏசியில சிலிண்டர் போடும்போது அவங்க கொடுக்குற காசுக்குதான் டாட்டா ஏசிக்கு வாடகை. கம்பெனி எல்லாம் காசு கொடுக்கமாட்டாங்க. நான் மட்டும் இல்லீங்க, சிலிண்டர்போடுற எல்லோருடைய நிலையும் இப்படித்தான் இருக்கு” என்றார்.

சிலிண்டர் போடுகிறவர்களுக்குள் இவ்வளவு இருக்கிறதா என்பது பலருக்கு இன்னமும் தெரியாது. இந்த சிலிண்டர் எப்படி வருகிறது என்றுகூட இன்னும் சிலருக்கு தெரியாது. அவற்றை சுமந்து வருகிற அவர்கள் நம்மையும் சேர்த்து சுமந்து வருகிறார்கள் என்கிற எண்ணம் நமக்குள்ளே தோன்ற வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் சுதாகரை சந்தித்தோம்

"என் பேரு சுதாகர்ங்க. எனக்கு வயசு 34 ஆவுது. நான் 11 வருஷமா சிலிண்டர் போடுறேன். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வேற வேலை ஏதும் கிடைக்காத நிலையில சிலிண்டர் போடுற வேலைக்கு வந்துட்டேன். மாசம் எனக்கு கம்பெனியில் 5 ஆயிரம் சம்பளம் கொடுப்பாங்க. அது வச்சிட்டு குடும்பம் நடத்த முடியுமா? முடியாதுங்க.

கஸ்டமர் கொடுக்குற இருபது, முப்பதுலதாங்க என் குடும்பம் ஓடுது. எவ்வளவு தூரமாக இருந்தாலும் கஸ்டமருக்கு சிலிண்டர் கொண்டுபோய் கொடுக்கிறதுதாங்க எங்களை போன்றவர்களுக்கு வேலை. இதுல சில இடங்கள்ல, வண்டியில் மற்ற சிலிண்டர வச்சிட்டு, கஷ்டப்பட்டு கஸ்டமருக்கு கொடுக்குறதுக்கு ஒரு சிலிண்டர மட்டும் தூக்கிட்டு போயிட்டு வந்து பார்த்தா, யாராவது ஒரு களவாணி பையன் ஒரு சிலிண்டரை திருடிகிட்டு போய்டுவான். அவ்வளவுதான் அந்த ஒரு மாச சம்பளம் போய்டுங்க.

ஒரு சிலிண்டர் காணாமபோனா 3000 ரூபா வரைக்கும் நம்ம கட்ட வேண்டியிருக்கும். அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது. சிலிண்டரை கொண்டுபோய் கஸ்டமர்கிட்ட கொடுக்குற வரைக்கும் நம்ம வேலை தாங்க. வேற வேலைக்கு போலாம்னா வேற வேலை எதுவும் பழக்கம் இல்லீங்க. வெயிட் தூக்கற வேலையா இருந்தாலும் இது பழகிப் போனதால் ரொம்ப சாதாரணமா இருக்கு எங்களுக்கு. இதுலவர வருமானத்தை வைச்சிதான் குடும்பம் நடக்குது. இரண்டு பசங்களையும் படிக்க வைக்கிறேன்.

நான் நினைக்கிறதெல்லாம் என் பசங்களும் இந்த மாதிரி கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறேங்க. எங்கள மாதிரி சிலிண்டர் தூக்கும் வேலைக்கு யாருமே வரலன்னா, இவங்களுக்கெல்லாம் சோறு ஆக்குவது பெரிய சிரமமாக இருக்கும். ஆனால் இந்த விஷயம் பெருசா யாருக்கும் தெரியுறது இல்லீங்க. சில கஸ்டமர் 10 ரூபாய் கொடுத்துட்டு தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பாங்க. இன்னும் சில வீடுகளில் குடிக்கத் தண்ணி கேட்டா கூட கொடுக்கமாட்டாங்க. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த வேலை செஞ்சிட்டு வர்றோங்க” என்றார். வாழ்க்கை முறை என்பது ஒரு சுழற்சி. அவற்றில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் மகத்தான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கிற எளிய மனிதர்கள் இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com