ஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா!

ஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா!
ஓடிடி திரைப் பார்வை: Life of an outcast - நிச்சயம் புறக்கணிக்க முடியாத சினிமா!

"படிச்சதும் உங்க சாதி, தராதரத்தையெல்லாம் மறந்துவிடுவீங்களா?", "என் சாதி நியாபகம் இருக்கு... நான் மறந்தாலும் உங்களை மாதிரி ஆட்கள் மறக்க விட்றதில்லையே..." - படத்தில் வரும் முக்கியமான உரையாடல் இது. இந்திய சமூகத்தில் இன்றளவும் புரையோடிக்கொண்டிருக்கும் சாதிய பாகுபாடுகளை தோலுரித்து காட்டும் படமாக கண்முன் விரிகிறது 'லைஃப் ஆஃப் அன் அவுட்கேஸ்ட்' (Life of an outcast) என்னும் இந்தி திரைப்படம்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நிகழ்கிறது கதை. கல்வியில் மதத்தை நுழைக்க விரும்பாத பள்ளி ஆசிரியர் பாஸ்கர் ஜா, சாதிய ஆதிக்க சக்திகளால் கைது செய்யப்படுகிறார். மற்றொருபுறம் தனது மகனை எப்படியாவது ஜாமீனில் வெளியே கொண்டுவந்துவிட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார் அவரது தந்தை. இதையொட்டி நடக்கும் சம்பவங்களை ஒன்றரை மணி நேர படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ஸ்ரீவத்சவா.

கடந்த 2018-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தப் படம் கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டது. தான் எடுத்துக்கொண்ட கதையை எந்தவித சமரசமும் இல்லாமல், வெளிப்படையான வசனங்களுடன் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் ஸ்ரீவத்சவா. கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அதற்கான காரணங்களையும், அம்மக்கள் கல்வியில் முன்னேறினாலும் ஆதிக்க சக்திகளால் அவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதையும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.

வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம். காவல்நிலையத்தில் பாதிப்புக்குள்ளான பள்ளி ஆசிரியருக்கும், காவல் அதிகாரிக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் கவனிக்க வைக்கிறது.

படத்தில் வரும் டீக்கடைக்காரர் கதாபாத்திரம் எளிதில் கடந்து செல்ல முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 'மோடியும் என்னைபோல ஒரு டீக்கடைக்காராக இருந்தவர்' என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். வடமாநிலங்களில் 'மன் கி பாத்' ஏற்படுத்தும் தாக்கத்தை டீக்கடைக்காரரின் வசனங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, அவர் கடைக்கு வருபவர்களின் எந்த பிரச்னைகள் குறித்தும் அவர் கவலைப்படுவதில்லை. மாறாக, நம்மை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிரசார உலகத்தின் ஒட்டுமொத்த உருவகமாக இருக்கிறது டீக்கடைக்காரர் கதாபாத்திரம்.

தந்தை - மகனின் இரு வேறு சிந்தனைகளின் போக்கில் படம் செல்கிறது. முந்தைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான எண்ண ஓட்டத்தையும் சேர்ந்தே படம் பிரதிபலிக்கிறது. ''டெல்லி போன்ற பெரு நகரங்களுக்கு சென்றுவிடு'' என தாய் கூறும்போது, 'நீங்களும்தான் உங்கள் சொந்த ஊரை விட்டு வந்தீர்கள்... என்ன நடந்தது?'' என்ற மகனின் பதிலில்லாத கேள்வி நமக்குமானதுதான்.

இத்தகைய அழுத்தமான காட்சியமைப்பும் வசனமும், படத்தின் மீதான தாக்கத்திலிருந்து நம்மை மீளவிடாமல் துரத்திக் கொண்டேயிருக்கிறது. தவிர, படம் முழுவதும் வரும் லென்த் ஷாட்டுகள் அயற்சியை ஏற்படுத்துகின்றன. ஆவணப் படத்துக்கான உணர்வு ஆங்காங்கே எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. எப்படியிருந்தாலும், 'லைஃப் ஆஃப் அன் அவுட்கேஸ்ட்' திரைப்படத்தை நிச்சயம் புறக்கணிக்க முடியாது.

கடந்த 2014-ம் ஆண்டு 'நாயா படா' (Naya Pata) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் கே.ஸ்ரீவத்சவா. பீகாரில் தயாரிக்கப்பட்ட முதல் கிரவுட் ஃபண்ட் திரைப்படமான இது, இழந்த அடையாளத்தை மீட்க போராடும் தனிமனிதனின் வாழ்க்கையை பேசியது. தொடர்ந்து 'கும்ப் தி அதர் ஸ்டோரி' (Kumbh The Other Story) என்ற ஆவணப் படத்தையும் இயக்கியிருக்கிறார். அதேபோல 'ஐ எம் திரௌபதி' (I Am Draupadi) படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

தனது நேர்காணல் ஒன்றின்போது பேசிய இயக்குநர் ஸ்ரீவத்சவா, "வெகுஜன சினிமாவில் கிராமப்புற இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களின் பிரச்னைகள் குறித்து பேசும் திரைப்படங்கள் இங்கு மிகவும் சொற்பம். 'சாய்ராட்', 'ஃபேன்ட்ரி' போல ஆயிரத்தில் ஒன்றோ, இரண்டோ படங்கள்தான் இங்கே இயக்கப்படுகின்றன. பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் யாவும் மல்டிப்ளெக்ஸ் பார்வையாளர்களுக்காக மட்டுமே திரைப்படங்களை உருவாக்குகின்றன. ஆனால், திரை வெளிச்சம்படாத மக்களின் உலகத்தை காண்பிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகம் என ஒன்று இருப்பதே பலருக்கு தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.

அவரது வார்த்தைகளுக்கு வடிவம் கொடுப்பதாகவே அமைந்த படைப்புதான் 'லைஃப் ஆஃப் அன் அவுட்கேஸ்ட்'.

- கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com