ஸ்டார்ட் அப் இளவரசிகள்-28: தடைகளை தகர்த்து புது யுக வங்கி துவக்கிய ஆனி போடன்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-28: தடைகளை தகர்த்து புது யுக வங்கி துவக்கிய ஆனி போடன்
ஸ்டார்ட் அப் இளவரசிகள்-28: தடைகளை தகர்த்து புது யுக வங்கி துவக்கிய ஆனி போடன்

ஆனி போடன் (Anne Boden)தொழில் முனைவு முயற்சியில் ஈடுபட்டபோது அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்பவில்லை. ஏனெனில் எல்லா அம்சங்களும் ஆனிக்கு எதிராக அமைந்திருந்தன.

ஆனிக்கு வங்கித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் இருந்தாலும், சொந்தமாக தொழில் துவங்க தீர்மானித்தபோது அவர் 50 வயதை கடந்தவராக இருந்தது பாதகமான அம்சமாக கருதப்பட்டது. அதிலும் குறிப்பாக அவர் அடியெடுத்து வைத்த ஸ்டார்ட் அப் துறையில் பொதுவாக இளைஞர்கள் அதிக அளவில் நுழைந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்தனர். நடுத்தர வயதினரேகூட ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை துவக்கி நடத்துவது என்பது விதிவிலக்காகவே கருதப்படும் நிலையில், 50 வயதை கடந்த பெண் ஒருவர் இந்த துறையில் நுழைய தீர்மானித்தபோது, அவரால் வெற்றி பெற முடியும் என எத்தனை பேர் நம்பியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேல், ஆனி துவங்க இருந்த வர்த்தக எண்ணத்தை கேள்விபட்டவர்கள் நிச்சயம் அதன் மீது நம்பிக்கை கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், வங்கித்துறையை மாற்றி அமைக்கும் வகையில் புதுயுக வங்கி ஒன்றை துவக்குவது ஆனியின் எண்ணமாக இருந்தது. பாரம்பரிய வங்கிகள்போல, கிளைகள் இல்லாமல் முற்றிலும் மொபைல் போனில் செயல்படக்கூடிய ஒரு வங்கியை துவக்கி நடத்த வேண்டும் என்பதே ஆனியின் விருப்பமாக இருந்தது. தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்த ஒரு வங்கியை துவக்கி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் புதுமையான யோசனையை ஆனி என்றில்லை, துடிப்பு மிக்க இளம் பெண் ஒருவர் முன் வைத்திருந்தாலும்கூட பலரும் அதை நிராகரித்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக வங்கித்துறையில் இருந்தவர்கள் இதெல்லாம் சரியாக வராது என எள்ளி நகையாடியிருப்பார்கள்.

தன்னம்பிக்கை

ஆனால், ஆனிக்கு தனது எண்ணத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஒரு புதுயுக வங்கியை துவக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டபோதும் அவர் கவலைப்படவில்லை. துவண்டு போய் முயற்சியை கைவிட்டுவிடவில்லை. விடமால் முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளார். ஆக, தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட எவருக்கும் ஆனியின் கதை ஊக்கமளிக்கக் கூடியது. புறக்கணிப்புகளையும், பாராமுகங்களையும் கடந்து வெற்றி பாதையில் முன்னேறுவது எப்படி என்பதற்கான வழிகாட்டி கதையாக ஆனியின் தொழில்முனைவு பயணம் அமைகிறது. ஆரம்ப தடைகளை மீறி வெற்றி பெற்றதோடு, தொடர்ந்து சவால்களை வென்று நிறுவனத்தை அவர் துடிப்புடன் நடத்தி வரும் விதமும் ஊக்கம் அளிக்கக் கூடியது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வர்த்தக தொலைநோக்கு, சிறந்த நிர்வாகம் என எல்லாவற்றுக்கும் ஆனி போடன் முன்னுதாரணமாக இருக்கிறார்.

வங்கிப்பணி

ஆனி போடன் பிரிட்டனில் உள்ள வேல்ஸில் 1960-ல் பிறந்து வளர்ந்தார். நடுத்தர குடும்ப பின்னணியை கொண்ட ஆனி, ரசாயனம் மற்றும் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற பிறகு 1982 ல் லாயிட் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். துவக்கத்தில் அவர் ஐடி துறையிலேயே வேலைக்கு செல்ல தீர்மானித்திருந்தாலும், எதற்கும் இருக்கட்டும் என விண்ணப்பித்ததை அடுத்து வங்கியின் பயிற்சி பணிக்கு தேர்வானார்.

இதே துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்வோம் என்றோ, அதன் பிறகு இந்த துறை மீது அதிருப்தி கொண்டு புதுயுக வங்கியை துவக்குவோம் என்றோ இளம் ஆனி நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நடுத்தர வயதை கடந்த நிலையில் அனுபவம் வாய்ந்த ஆனி அப்படி தான் நினைத்தார். இடைப்பட்ட காலத்தில், ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட், ஏபிஎன் ஆம்ரோ வங்கி உள்ளிட்ட முன்னணி சர்வதேச வங்கிகளில் பணியாற்றி உயர் பொறுப்புகளை வகித்திருக்கிறார். வங்கித்துறையில் அனுபவம் வாய்ந்த அதிகாரி என்ற முறையில், முன்னணி வங்கிகளில் தலைமை பதவியை வகிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த நிலையிலும், ஆனி வங்கி வேலையை உதறித்தள்ளிவிட்டு சொந்தமாக வங்கி ஒன்றை துவக்க தீர்மானித்தார்.

கைநிறைய சம்பளம் தரும் அந்தஸ்து மிக்க பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக வங்கி துவக்க நினைத்த ஆனியின் எண்ணத்தை கிறுக்குத்தனமானது என்றே பலரும் விமர்சித்தனர். ஆனால், ஆனி உறுதியுடன் இருந்தார். வங்கித்துறை தொடர்பாக அவருக்கு இருந்த அனுபவம் ஒரு காரணம் என்றால், புதிய வங்கி துவக்குவதற்கு தேவையான விரிவான ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தார்.

முன் தயாரிப்பு

அதோடு தொழில்முனைவு பாதையில் வெற்றி பெறும் வழிகளை அறிவதற்கான முயற்சியையும் மேற்கொண்டிருந்தார். தொழில்முனைவோர்களின் வெற்றிக்கதைகளை தேடித்தேடி படித்தார்.குறிப்பாக, தோல்விகளையும் தடைகளையும் கடந்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வத்துடன் படிந்திருந்தார். இவை எல்லாம் அவருக்குள் உரமாக அமைந்தன. ஆனியின் உறுதிக்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. வங்கித்துறையை முற்றிலும் வேறு விதமாக கற்பனை செய்து பார்க்க விரும்பினார். பாரம்பரிய வங்கிகள் செயல்பட்டு வந்த விதம் மீது உண்டான அதிருப்தி இந்த எண்ணத்தை அவருக்குள் உண்டாக்கியிருந்தது.

2008-ல் பொருளாதார உலகை உலுக்கிய நிதி சீர்குலைவின் தாக்கத்தால் அவர் இந்த முடிவுக்கு வந்திருந்தார். 2008 நிதி நெருக்கடியின்போது அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் முன்னணி வங்கிகள் பாதிக்கப்பட்டன. பல வங்கிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. அமெரிக்க நிதி உலகை சார்ந்திருந்த அயர்லாந்திலும்
வங்கிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. தனது துறையில் ஏற்பட்ட இந்த பாதிப்புகளை கவனித்த ஆனி, அடுத்த சில ஆண்டுகளில் நிலைமை சீரடைந்து வங்கிகள் வழக்கமாக செயல்படத்துவங்கியபோது தனக்குள் சிந்திக்கத்துவங்கினார்.

வரலாற்றில் இல்லாத பெரும் நெருக்கடிக்கு உள்ளான பிறகும் வங்கித்துறை எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய பாணியிலேயே செயல்படுவதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பம் எல்லாத்துறைகளிலும் தாக்கம் செலுத்தி வருவதையும் கவனித்தவர், வங்கித்துறை மட்டும் கடந்த காலத்தில் சிக்கியிருப்பதாக உணர்ந்தார். இந்த எண்ணமே அவரை தொழில்முனைவு பாதையில் இறங்க வைத்தது.

மொபைலில் வங்கி

நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஒரு வங்கியை தன்னால் துவக்க நடத்த முடியும் என நம்பினார். வழக்கமான வங்கிகள்போல, சிவப்பு நாடா நடைமுறைகளுக்குள் சிக்கியிருக்காமல், வாடிக்கையாளர்கள் எளிதாக சேவை பெறும் வகையில் இந்த வங்கி அமைந்திருக்கும் என கனவு கண்டார். வங்கி கணக்கை துவக்க பல நாட்கள் காத்திருப்பதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் விரும்பிய சில நிமிடங்களில் எல்லாம் கணக்கு துவக்க வழி செய்ய வேண்டும் என்றும்
நினைத்தார்.

இந்த புதிய வங்கி, கிளைகள் இல்லாமல் மொபைல் போனில் மட்டும் அணுக கூடியதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். கிளைகள் கிடையாதே தவிர, 24 மணி நேரமும் சேவை கிடைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார். உபெர் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அளிக்கும் தகவல்கள்போல, வாடிக்கையாளர்கள் தங்கள் செலவுகள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளக்கூடிய சேவைகளையும் வங்கி அளிக்க வேண்டும் என நினைத்தார்.

2014-ம் ஆண்டு ஆனி வெளிநாட்டு வங்கி பணியை விட்டு விலகி தாயகம் திரும்பி புதிய வங்கிக்கான முயற்சியை துவக்கினார். ஏற்கெனவே ஆழமாக ஆய்வு செய்து திட்டமிட்டிருந்ததால்தான் துவக்க இருந்த வங்கி மீது அவருக்கு நம்பிக்கை அதிகம் இருந்தாலும், இதற்கான நிதி திரட்டலில் ஈடுபட்ட போது கிடைத்த வரவேற்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை.

நிதித்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்க பெரும் பணம் தேவைப்பட்டது. அதே நேரத்தில் புதிய வங்கிக்கான உரிமம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில், ஐம்பது வயதை கடந்த பெண்மணி ஒருவர் புதிய வங்கி துவக்க இருப்பதாக கூறியதை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால், ஆனி மனம் தளரந்துவிடவில்லை. தனியே அலுவலகம் கூட இல்லாத சூழலில், நிதித்துறையில் இருந்தவர்களுக்கு தினமும் இமெயில் அனுப்பி உதவி கோரினார்.

‘நான் ஆனி, வங்கி துவக்க இருக்கிறேன். உங்களால் உதவ முடியுமா?’என சளைக்காமல் கோரிக்களை அனுப்பினார். இவை நிராகரிக்கப்பட்டபோது சோர்ந்து போவதற்கு பதிலாக மேலும் பலருக்கு இமெயில் அனுப்பி கோரிக்கை வைத்தார்.

விடா முயற்சி

எட்டு மாத கால விடாமுயற்சிக்குப்பிறகு வங்கி பணிக்கு தேவையான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தொடர்புகளை பெற்றார். ஆனால், இதற்கு ஒரு மில்லியன் பவுண்ட் கடனாளியாக வேண்டியிருந்தது. இதனிடையே டாம் புளூம்பீல்டு எனும் இளம் அதிகாரி உள்ளிட்ட பலர் அவருடன் இணைந்தனர். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் ஆனிக்கும், புளும்பீல்டுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் தனியே பிரிந்து சென்றார். அவருடன் மற்ற குழுவினரும்
சென்றுவிட்டனர்.

இந்த எதிர்பாராத நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த ஆனி நிறுவனத்தில் இருந்து தான் விலகுவதாக கூறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் அவ்வாறு செய்வது கோழைத்தனமாக இருக்கும் என்பதோடு தான் துவங்கி விரும்பிய வங்கி கனவுக்கும் விரோதமாக இருக்கும் என உணர்ந்தவர், இந்த சோதனையை பொருட்படுத்தாமல் முயற்சியை தொடர்ந்தார். எதிர்பாராத சோதனை போலவே, எதிர்பாராத விதமாக புதிய குழு ஒன்று அவர் பின் சேர்ந்தது. பழைய நண்பர் ஒருவர் தற்செயலாக
ஆனியை சந்திக்க வந் போது, அவரது குழுவில் இணைய முடிவு செய்தார். அவரைத்தொடர்ந்து வேறு சிலரும் வந்து இணைந்தனர். புதிதாக இணைந்தவர்கள் அனுபவசாலிகளாக இருந்ததால், அமைதியாக வேலை பார்த்தனர். அதைவிட முக்கியமாக ஆரம்ப மாதங்களில் சம்பளம் இல்லாமல் செயல்பட்டனர்.

இந்த நிலையில் தான் பஹாமாசில் இருந்து ஹாரால்டு மெக்பைக் எனும் கோடீஸ்வரர் ஆனியை சந்திக்க அழைத்திருந்தார். ஆனி துவக்க இருந்த, போட்டி வங்கி (challenger bank)என அறியப்பட்ட்ட கருத்தாக்கத்தின் மீது அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆனியிடம் புதிய வங்கிக்கான செயல்திட்டம் பற்றி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்ட அந்த கோடிஸ்வரர் ஆனியின் வங்கியில் பல கட்டமாக முதலீடு செய்யவும் முன்வந்தார்.

இறுதியில் வெற்றி

புதிய வங்கிக்கான 48 மில்லியன் பவுண்ட் முதலீட்டுடன் ஆனி தாயகம் திரும்பினார். இதனிடையே அவரது வங்கிக்கான உரிமம் கிடைக்கவே 2016-ல் ஸ்டார்லிங் வங்கியை (Starling ) துவக்கினார். இரண்டு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு துவக்கப்பட்டாலும், கிளைகள் இல்லாமல் மொபைல் போனில் சேவை அளித்த வங்கி வாடிக்கையாளர்களை விரைவாக கவர்ந்தது. அவரிடம் இருந்து பிரிந்த சென்ற குழுவினர் மோன்சோ எனும் பெயரில் போட்டி வங்கி ஒன்றை துவக்கியிருந்தாலும், ஆனியின் ஸ்டார்லிங் வங்கி வளர்ச்சியும், வரவேற்பும் பெற்றது.

வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு அவர்கள் எதிர்பார்த்த சேவைகளை விரல் நுனியில் வங்கி வழங்கியது. தொடர்ந்து பல புதுமையான அம்சங்களையும் அறிமுகம் செய்தது. இதன் காரணமாக வரவேற்பு அதிகரித்தது. தொழில்நுட்ப தாக்கம் காரணமாக பரவலாக நிதித்துறையிலும் பெரும் மாற்றம் ஏற்படத் துவங்கியிருந்தபோக்கும் ஆனியின் வங்கி வளர உதவியது. இவற்றின் விளைவாக பாரம்பரிய வங்கிகளுக்கு சவால் விடும் போட்டி வங்கிகளில் முதன்மை வங்கிகளில் ஒன்றாக ஸ்டார்லிங் வங்கி உருவானது. அதன் செயல்பாடுகளுக்கான விருதுகளையும் வென்றது.

இன்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மொபைலில் மட்டும் செயல்படும் வங்கிகள் பிரபலமாகி வருகின்றன. இந்த பிரிவில் புதிய உத்வேககத்தை கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவராக ஆனி கருதப்படுகிறார். இன்று அறுபது வயதை கடந்த நிலையிலும், ஸ்டார்லிங் வங்கியை உற்சாகமாக நடத்தி வருகிறார். அவரைப் பொருத்தவரை அந்த வங்கி தான் எல்லாமுமாக இருக்கிறது. அவரது கனவும் அது தான் அல்லவா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com