இனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்?

இனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்?

இனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்?
Published on

இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகன ஓட்டுனர்களுக்கான ஓட்டுநர் தேர்வுகளை எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் நடத்துவது என்ற புதிய அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது. அதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இதனால் இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் எலக்ட்ரானிக் ஹெச் டிராக்குகளில் நடக்கும் ஓட்டுநர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே லைசன்ஸ் பெறலாம் என்ற சூழல் வரும். அது சரி, எலக்ட்ரானிக் ஹெச் டிராக் என்றால் என்ன? 

14 மீட்டர் நீளமுள்ள, ஆங்கில எழுத்து ‘ஹெச்’ன் வடிவிலான வாகனப் பாதையே ஹெச் டிராக் ஆகும். அதன் வரம்புகளில் வாகன விதி மீறல்களைக் கண்காணிக்கும் 54 சென்சார்கள் இணைக்கப்படும்போது அது எலக்ட்ரானிக் ஹெச் டிராக் ஆகின்றது. ஹெச் டிராக்கிலேயே 32 அடி நீள சாய்தளமும், போக்குவரத்து சிக்னலும் இருக்கும். இவற்றை கவனித்து வாகனத்தை ஓட்ட வேண்டும். எலக்ட்ரானிக் ஹெச் டிராக்குகளில், ஓடு பாதையின் வரம்புகளில் உள்ள 54 சென்சார்கள் மூலமே ஓட்டுநரின் தேர்ச்சி முடிவு செய்யப்படும். இதனால் தேர்வின் முறைகேடுகள் தடுக்கப்படும். ஹெச் டிராக்கில் வாகனத்தை ஓட்டுபவர், பாதையில் இருந்து விலகி சென்சாரை உரசினால் சென்சார் எச்சரிக்கை ஒலி எழுப்பும். மூன்று முறை சென்சார் ஒலி எழுப்பினால் தேர்வர் தோல்வி அடைந்ததாகக் கருதப்படுவார். 3 வாய்ப்புகளுக்குள் அவர் கொடுக்கப்பட்ட பயணத்தை நிறைவு செய்தால் வெற்றி பெறுவார்.

இந்தத் தேர்வு முழுவதும் படப்பதிவு செய்யப்படும். தேர்வு முடிவுகளில் தேர்வருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் படப்பதிவை வாங்கி ஆர்.டி.ஓ.விடம் முறையிடலாம். 7 அல்லது 8 நிமிடங்களில் இந்த முழுத் தேர்வும் நடந்து முடிந்துவிடும். இதனால் தேர்வர்களின் நேரமும் மிச்சமாகும். கடந்த மே மாதம் கரூரில் நாட்டின் முதல் எலக்ட்ரானிக் ஹெச் டிராக் ரூபாய் 40 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. கரூரின் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகால ஆய்வில் இதனை உருவாக்கினர். விரைவில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மேலும் 13 இடங்களில் எலக்ட்ரானிக் ஹெச் டிராக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான மொத்த செலவு ரூ. 10 கோடி ஆகும், இதில் ரூ. 4.46 கோடி கட்டுமானப்பணிக்காகவும், ரூ. 5.54 கோடி மின்னணு சாதனங்களுக்காகவும் செலவிடப்பட உள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com