இணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஜிம்மி வேல்ஸ் முன்வைக்கும் 3 பாடங்கள்!

இணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஜிம்மி வேல்ஸ் முன்வைக்கும் 3 பாடங்கள்!
இணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஜிம்மி வேல்ஸ் முன்வைக்கும் 3 பாடங்கள்!

இணையம் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். பொய்ச் செய்திகளாலும், தவறான தகவல்களாலும் இணையத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். இது, இணையத்தின் தவறு அல்ல என்பதையும், இதற்கு நாமே பொறுப்பு என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். எல்லாம் சரி, இணையத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஜிம்மி வேல்ஸை விட இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க பொருத்தமானவர் யார்? - 'மீண்டும் இணையத்தை நம்பத் துவங்குவது எப்படி?' எனும் தலைப்பில் அல்ஜஸீரா செய்தி வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் இந்தக் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் வேல்ஸ்.

யார் இந்த ஜிம்மி வேல்ஸ் என கேட்பது அநீதி. வேல்ஸ், விக்கி நாயகன். இணையத்தின் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவின் இணை நிறுவனர். அதைவிட முக்கியமாக, விக்கிபீடியா அதன் ஆதார பலமாக கருதும், பயனர் பங்களிப்பு, கூட்டு முயற்சி மற்றும் திறந்த இணையத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். விக்கிபீடியாவின் வெற்றியை வைத்து தனிப்பட்ட முறையில் பணமோ, புகழோ பெற முயற்சிக்காதவர் என்பதை அவரது கூடுதல் சிறப்பாக கூறலாம்.

இவர், தனது 'மீண்டும் இணையத்தை நம்பத் துவங்குவது எப்படி?' கட்டுரை வழியாக நமக்கு குறிப்பிடும் சில பாடங்கள் இங்கே:

“ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் உண்மை எது, பொய் எது என நாம் பகுத்தறிய வேண்டியிருக்கிறது. இணையம் நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகியிருந்தாலும், அது இன்னமும் பிழைகள், தவறான தகவல்கள் மற்றும் வைரலான பொய்ச் செய்திகளால் நிறைந்திருக்கிறது. தவறான தகவலின் பரவல், உயிர் காக்கும் தடுப்பூசியை ஒருவர் தேர்வு செய்வதில் இருந்து தடுக்கலாம். இந்த நிலை நமக்கும் தெரிந்ததுதான். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன் இணையம் இவ்வாறு இல்லை. அப்போது சோதனை முயற்சிகளை வரவேற்ற இணையம், திறந்த தன்மையுடன் இருந்தது. இந்தப் பின்னணியிலேயே, டிஜிட்டல் கூட்டு முயற்சியை அடிப்படையாக கொண்டு 2001-ல் விக்கிபீடியா உருவானது.

லட்சக்கணக்கான தன்னார்வலர்களின் பங்களிப்பால் 'விக்கிபீடியா' மனித அறிவை எளிதாக அணுகக் கூடிய வழியாக இருப்பதோடு, சுதந்திரத் தன்மை கொண்ட வலையின் அடையாளமாகவும் இருக்கிறது. அது மட்டும் அல்ல, ஆரம்ப கால இணைய லட்சியங்களின் கடைசி சின்னமாகவும் திகழும் விக்கிபீடியா, கூட்டு முயற்சியும், ஒன்றிணைந்த செயல்பாடும் எப்படி தவறான தகவல்களுக்கு மாறாக தகவல்களை முன்னிறுத்த பயன்படும் என்பதற்கான உதாரணமாகவும் இருக்கிறது.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், எதிர்கால இணையத்தின் நம்பகத்தன்மைய காப்பாற்ற விக்கிபீடியா கற்றுத்தரும் மூன்று பாடங்கள் உள்ளன.

முதல் பாடம், உண்மையை வலியுறுத்துவதில் தனிநபர்களுக்கு உள்ள பொறுப்பை ஒப்புக்கொள்வது. ஒரு சில செல்வாக்கு மிக்க நபர்கள் பொய்த் தகவல்களை பரப்புவது எத்தனை எளிதாக இருக்கிறது என நாம் அனைவரும் உணர்ந்துள்ள நிலையில், நல்ல தகவல்களை அளிப்பதில் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான உதாரணமாக விக்கிபீடியா விளங்குகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, கோவிட்-19 பெருந்தொற்று பரவத்துவங்கியபோது, விக்கிபீடியாவின் லட்சக்கணக்கான தன்னார்வலர்கள், நிகழ் நேரத்தில் பொய்த் தகவல்களை சரிசெய்யும் வகையில் செயல்பட்டனர். (இன்றளவும், கோவிட்-19 தொடர்பான தகவல்களுக்காக, சார்பில்லாத, பொய்த்தகவல்கள் இல்லாத, அனைத்து பார்வைகளையும் கொண்ட ஆகச்சிறந்த தகவல் பக்கமாக விக்கிபீடியாவின் கோவிட்-19 பக்கம் இருக்கிறது). தகவல் சரி பார்ப்பவர்களாகவும், தகவல்களை விமர்சன நோக்கில் அணுகுபவர்களாகவும் பயனாளிகள் தீவிர பங்கேற்பு செய்வதன் மூலம், இணையத்திற்கு தேவையான நம்பிக்கையை மீட்டெடுக்கலாம்.

இரண்டாவது பாடமாக, தகவல்கள் நம்பகமானதாக, அண்மையானதாக, தகவல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

தகவல்களை சரிபார்க்கும் விதத்தில் வெளிப்படையான தன்மையை உருவாக்குவது மூன்றாவது பாடம் என்கிறார். தகவல் சரிபார்ப்பு தொடர்பான கொள்கை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான செயல்முறையும் பங்கேற்பார்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

விக்கிபீடியாவை இந்த விஷயத்தில் அடித்துக்கொள்ள முடியாது. அதில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தத்தையும், அதற்கான காரணத்தையும் எவரும் பார்க்க முடியும். இணையத்தின் மீதான நம்பிக்கையை தனிநபர்களாக அல்லாமல், அறிவைத்தேடும் நபர்களின் கூட்டு இயக்கமாக சாதிக்கலாம்” என்கிறார் வேல்ஸ்.

இப்படியாக, நாம் எல்லோரும் சேர்ந்து இணையத்தின் மீதான நம்பிக்கையையும், ஒவ்வொருவர் மீதான நம்பிக்கையையும் உருவாக்க முடியும் என முத்தாய்ப்பாக கட்டுரையை முடிக்கிறார் வேல்ஸ். நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள்தானே!

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com