உங்கள் செல்ஃபோனில் நீண்டநேரம் சார்ஜ் நிற்கணுமா? - இதோ எளிதான 9 டிப்ஸ்!

உங்கள் செல்ஃபோனில் நீண்டநேரம் சார்ஜ் நிற்கணுமா? - இதோ எளிதான 9 டிப்ஸ்!
உங்கள் செல்ஃபோனில் நீண்டநேரம் சார்ஜ் நிற்கணுமா? - இதோ எளிதான 9 டிப்ஸ்!

இன்று பெரும்பாலானவர்களிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. தகவல் பரிமாற்றம் என்பதையும் தாண்டி வங்கி செயல்பாடுகள், பணப் பரிமாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், கேமரா பயன்பாடுகள், சோஷியல் மீடியா என ஸ்மார்ட்போன் அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. அதேபோல், ஸ்மார்ட்போனுக்கு அத்தியாவசியம் என்றால், அது 'சார்ஜ்'.

பேட்டரி லைஃப் என்பதே தற்போது ஸ்மார்ட்போன்களின் பிரதான விளம்பரமாகவும் உள்ளது. அதிவேக சார்ஜிங், நீண்ட நேரம் தாக்குபிடிக்கும் பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன் செல்போன்கள் சந்தையில் குவிகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டமும் முக்கிய அம்சமான பேட்டரி சார்ஜிலேயே உள்ளது. அப்படி செல்போனுக்கு இதயமான பேட்டரி எந்த அளவுக்கு முக்கியம்? சார்ஜை நீண்ட நேரம் நீட்டிக்க நாம் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன டிப்ஸ்...

பேட்டரி: முதலில் உங்கள் செல்போனின் பேட்டரி நிலைமையை கவனிக்க வேண்டும். பேட்டரி முக்கியமானது, அதேவேளையில் ஆபத்தானதும் கூட. செல்போன் பேட்டரி வெடித்து ஏற்பட்ட உயிரிழப்புகள் பல. எனவே, செல்போன் பேட்டரியை முதலில் கவனிக்க வேண்டும். செல்போன் பேட்டரி சற்று தடித்து இருந்தால் உடனடியாக பேட்டரியை மாற்றுவது நல்லது. தடித்த பேட்டரி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலைதான். அதேபோல் விடிய விடிய சார்ஜ் போடுவது, மணிக்கணக்கில் சார்ஜ் போடும் பழக்கத்தை அடியோடு விடவேண்டும்.

பேட்டரியின் அளவு: பேட்டரி சார்ஜை முழுவதும் ட்ரை ஆகி செல்போன் ஆஃப் ஆகும் நிலைக்கு அடிக்கடி செல்லக் கூடாது. பேட்டரிக்கும் ஓர் அளவு உண்டு. 100% வரை செல்போனை சார்ஜ் போடவும் கூடாது. அதேபோல் செல்போன் ஆஃப் ஆகும் அளவுக்கும் சென்றுவிட கூடாது. 30% - 85% என்ற அளவை வைத்துக்கொள்ளலாம். 85% பேட்டரி சார்ஜ் ஆனாலே போதுமானது. பேட்டரி லைஃப்க்கும் அது நல்லது.

சரியான சார்ஜர்: ஒவ்வொரு செல்போனுடம் வரும் சார்ஜரே அதற்கு ஏற்ற சார்ஜர். சார்ஜரை மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் பேட்டரி ஆயுள்காலத்தை குறைத்துவிடும். அதேபோல் சார்ஜ் நீடிக்கும் நேரத்தையும் குறைக்கும். யூஎஸ்பி கேபிள் மூலம் கம்யூட்டர், லேப்டாப்பில் சார்ஜ் போடுவது, பைக், காரில் நேரடியாக சார்ஜ் போடுவது என்பதெல்லாம் அவசரத்துக்கு மட்டுமே. அதனை வாடிக்கையாக வைத்துக்கொள்ளக் கூடாது. உரிய சார்ஜர் மூலம் நேரடியாக மின்சாரத்தில் இணைக்கப்படுவதே சரியான முறை.

ஏரோபிளேன் மோடு: ஏரோபிளேன் மோடு என்பது கிட்டத்தட்ட செல்போனை அனைத்து வைக்கும் முறைதான். இன்டர்நெட், ரேடியோ சிக்னல்கள் எதுமின்றி செல்போன் இருப்பதே இந்த முறை. அதனால் வேறு வழியே இல்லை, சார்ஜ் சேமிக்கவேண்டிய கட்டாயம் என்ற நிலையில் ஏரோபிளேன் மோடு பயன்படுத்தலாம். உங்களுக்கு தேவையான நேரத்தில் ஏரோபிளேன் மோடை ஆஃப் செய்து பயன்படுத்தலாம். அதேபோல் தேவையில்லாத நேரங்களில் இன்டர்நெட் வசதியை நிறுத்தி வைக்கலாம்.

செயலிகளின் அப்டேட்: உங்கள் செல்போனில் உள்ள தேவையற்ற செயலிகளை டெலிட் செய்துகொள்ளுங்கள். சில செயலிகள் நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், இன்டர்நெட் மூலம் இயங்கிக்கொண்டே இருக்கும். அதனால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துபோகவும் வாய்ப்புள்ளது. அதனால் தேவையான பயன்படுத்தக்கூடிய செயலிகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

டார்க் வால்பேப்பர்: லைவ் வால்பேப்பர் அதிகம் சார்ஜை உறிஞ்சக்கூடிய ஒன்று. அதனால் லைவ் வால்பேப்பர் எனும் நகரும் வால்பேப்பரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அதேபோல் முடிந்தவரை டார்க் மோடு ஆப்ஷன்களை அதிகம் பயன்படுத்தலாம். பல செயலிகள் டார்க் மோடு ஆப்ஷன்களை கொண்டு வந்துள்ளன. அதனை பயன்படுத்துவதும் சார்ஜை காப்பாற்றிக்கொள்ள உதவும்.

ப்ரைட்னஸ் மற்றும் லொகேஷன்: ப்ரைட்னஸை நமக்கு தேவையான அளவு வைத்துக்கொண்டாலே போதுமானது. Auto ப்ரைட்னஸ் வைத்துக்கொண்டால் தேவையான நேரத்தில் ஒளி அளவை அதுவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும். அதேபோல் லொகேஷன் என்பது மிக முக்கியமான ஒன்று. தேவையான நேரத்தில் மட்டுமே லொகேஷனை ஆன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் லொகேஷன் ஆன் செய்து வைத்தால் பேட்டரி சார்ஜ் வேகமாக இறங்கும்.

வைப்ரேட்: செல்போனில் ஒவ்வொரு எழுத்து டைப் செய்யும்போதும் வைப்ரேட் ஆகும் அம்சங்கள் உண்டு. முடிந்தவரை வைப்ரேட் ஆப்ஷன்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்கலாம்.

செல்போனுக்கு ஓய்வு: செல்போனும் ஓர் இயந்திரம் தான். அதற்கும் ஓய்வு வேண்டும். வாரத்திற்கு இரண்டு மணி நேரங்களாவது செல்போனை அணைத்து வைக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்ததாத, உங்களுக்கு அழைப்புகள் வராது என்ற நேரத்தில் நீங்கள் செல்போனை அணைத்து வைத்து ஓய்வு கொடுக்கலாம். இதன்மூலம் பேட்டரி லைஃப் அதிகரிக்கும்.

- சி.முருகதாஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com