நீர் ஓடும் ஆறுகளைப் பார்த்திருப்போம். நெருப்புக் குழம்பு ஓடும் ஆறை பார்த்திருக்கிறீர்களா? ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலைகளில் முக்கியமானது கிலயூயே.
ஹவாய் உருவாகக் காரணமான ஐந்து எரிமலைகளில் ஒன்று. உலகிலேயே கடுமையான சீற்றத்தைக் கொண்டதும், ஆபத்தானதும் இதுதான். 30 ஆண்டுகளாக லாவாவைக் கக்கிக் கொண்டிருக்கும் இந்த எரிமலை, ஹவாயின் மொத்த நிலப்பரப்பில் 14 சதவிகித பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 190 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த எரிமலையில் ஹலெமா என்ற எரிமலைக் குழம்பு ஏரி அமைந்துள்ளது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படும் இந்த எரிமலை, லாவா குழம்பைக் கக்கியபடி, பரவுவதால்தான் இதற்கு கிலயூயே என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 1990-ஆம் ஆண்டே நவீன கால வரலாற்றில் கிலயூயே எரிமலை, பேரழிவை ஏற்படுத்திய காலமாகக் கூறப்படுகிறது. எரிமலையில் இருந்து கற்குழம்பும் புகையும் மிக அதிகமாக வெளியேறியது. லாவா குழம்பு ஆறு போலப் பெருக்கெடுத்து ஓடியது. கிட்டத்தட்ட 100 வீடுகள் மற்றும் தேவாலயங்கள் வரை லாவா குழம்பில் புதையுண்டன. கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கிட்டபடி இதுவரை 35 லட்சம் கன மீட்டர் அளவுக்கு லாவா குழம்பை வெளியிட்டுள்ளது கிலயூயே. நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளைப் போல இந்த எரிமலையில் இருந்து புறப்படும் லாவா ஆறும் கடலில் போய் கலக்கிறது.

