வேகமாக வற்றும் நீர் நிலைகள்! மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்க இருக்கும் சென்னை!

வேகமாக வற்றும் நீர் நிலைகள்! மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்க இருக்கும் சென்னை!

வேகமாக வற்றும் நீர் நிலைகள்! மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்க இருக்கும் சென்னை!
Published on

இன்னும் ஜனவரி மாதமே நிறைவடையாத நிலையில் சென்னை தண்ணீர் பஞ்சத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டது. நல்ல மழைப்பொழிவு இருந்தால் தான் சென்னை மக்கள் கோடை காலத்தை போராட்டம் இன்றி கடத்த முடியும். மழைப்பொழிவின் அளவு குறைந்தால் கோடை காலத்தில் அது எதிரொலிக்கும். நிலைமை இப்படி இருக்க இந்த வருடம் மழை பெய்யவே இல்லை என்பது தான் தற்போதைய மிகப்பெரிய பிரச்னை. வரும் கோடையில் சென்னை மிகப்பெரிய தண்ணீர் போராட்டத்துக்கு தயாராக வேண்டுமென்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த போராட்டம் சில இடங்களில் தொடங்கியே விட்டது.

நாள் ஒன்றுக்கு சென்னையின் சராசரி தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர் ஆகும். இந்த அளவின் படி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டால் தினந்தோறும் ஒரு வீட்டிற்கு 140 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் நீர்நிலைகளின் தண்ணீர் குறைவை கணக்கில் கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு 830 மில்லியன் லிட்டரிலிருந்து 650 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டது. ஆனால் சென்னையில் நீர் ஆதாரங்கள் வேகமாக காயத்தொடங்கியதால் நீரின் அளவை மீண்டும் குறைத்தது மெட்ரோ வாட்டர் நிர்வாகம். அதாவது  தற்போது வழங்கப்படும் தண்ணீரையும் நாள் ஒன்றுக்கு 100 ல்லியன் லிட்டராக குறைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இந்த அளவின்படி கணக்கீட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு வீட்டுக்கு 60 லிட்டருக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்ற நிலைமையில் உள்ளது. இதனால் சென்னையின் முகப்பேறு, தியாகராய நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேசியுள்ள மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரி, தண்ணீர் தட்டுப்பாடு என்றாலும் நகரம் முழுவதும் தண்ணீர் விநியோகம் சரியாக நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 6300 டேங்கர் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் வரும் மாதங்களை சமாளிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது கொடுக்கப்படும் நீரின் அளவை மார்ச் வரையிலும் குறையாமல் கொடுக்க வேண்டுமென்பதே திட்டம். வீராணத்தில் இருந்து வரும் நீரை வைத்து அடுத்த 3 மாதங்கள் சமாளிக்கலாம். மற்ற நீர் ஆதாரங்களை சரியான கோடையின் போதே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

அது மட்டுமில்லாமல் தற்போது மறுசுழற்சி மூலம் சுத்திரிப்பு செய்யப்படும் தண்ணீர் புழல் நீர் வடிகால் கால்வாய்களில் கொட்டப்படுகிறது. அதனை பயன்படுத்தவும், 10 மில்லியன் லிட்டர் அளவீடு கொண்ட கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய இடங்களில் உள்ள குடிநீர் நிலையங்களை இயக்கவும் டெண்டர் அறிவிக்கப்படவுள்ளது. மேலும், தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் வணிகக் கடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை 40% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

நீர் நிலைகளில் நிலவரம்:

3645 மில்லியன் க.அடி கொள்ளளவு கொண்ட செம்பரபாக்கம் ஏரியில் வெறும் மில்லியன் 57 க.அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

3231 மில்லியன் க.அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில்  213 மில்லியன் க.அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

1081 மில்லியன் க.அடி கொள்ளளவு கொண்ட சோழாவரம் ஏரியில் வெறும் 48 மில்லியன் க.அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

3300 மில்லியன் க.அடி கொள்ளளவு கொண்ட செங்குன்றம் ஏரியில் 770 மில்லியன் க.அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

ஆக மொத்தமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளின் மொத்த கொள்ளளவு 11257 மில்லியன் கன அடி. ஆனால் தற்போதைய நீர் இருப்பு 1088 மில்லியன் கன அடி மட்டுமே. இதே கடந்த வருடம் ஜனவரியில் 4865 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.

ஏரி

நீர் இருப்பு

கொள்ளளவு

கடந்த வருடம்

செம்பரபாக்கம் 57 3645 1728
பூண்டி 213 3231 1255
சோழாவரம் 48 1081 465
செங்குன்றம் 770 3300 1417
மொத்தம் 1088 11257 4865

(அளவீடு: மில்லியன் கன அடியில்)

தற்போது இருக்கும் நீரின் அளவை கணக்கில் கொண்டால் இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு சென்னை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்றும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெறுதல், உள்ளூர் நீர் ஆதாரங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துதல், தண்ணீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகள் இருந்தால் தான் வரும் கோடையை சென்னை மக்கள் சமாளிக்கவே முடியும் என்றும் கூறப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com