சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஊடுருவுகிறதா ஆர்எஸ்எஸ்? - குமாரசாமி குற்றச்சாட்டு.. ஓர் அலசல்

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஊடுருவுகிறதா ஆர்எஸ்எஸ்? - குமாரசாமி குற்றச்சாட்டு.. ஓர் அலசல்
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஊடுருவுகிறதா ஆர்எஸ்எஸ்? - குமாரசாமி குற்றச்சாட்டு.. ஓர் அலசல்

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதள தலைவருமான குமாரசாமி, சமீபத்தில் இந்தியக் குடிமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் பற்றிக் கூறிய கருத்தால் சர்ச்சை வெடித்திருக்கிறது. இதுகுறித்து அலசுவோம்.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் இடையேயான தொடர்பு குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் எனப் பேசிய அவர், மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை எனவும் நாட்டை மனுதர்ம காலத்திற்கு எடுத்துச் செல்வதே அவர்களின் நோக்கம் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், 2016ஆம் ஆண்டு மட்டும் 676 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை 4,000 மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளாக நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டிப் பேசினார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிகழ்வு முடிந்து சில மணி நேரங்களிலேயே, தான் எந்த ஒரு இயக்கம் அல்லது கட்சி தொடர்பாகக் குறிப்பிட்டு தவறாகச் சொல்லவில்லை என விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தான் லாக்டவுன் காலத்தில் படித்த புத்தகங்களிலிருந்ததை பகிர்ந்ததாகவும், மக்கள் அதை விவாதிக்க வேண்டுமென்பதே தனது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குமாரசாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் பிரபு சவுஹான், ஆர்.எஸ்.எஸ். என்பது நாட்டை காக்கும் தேசபக்தி அமைப்பு எனவும், ஆர்.எஸ்.எஸ்.-ன் கீழ் இந்தியா பாதுகாப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ். பற்றிப் பேசுவதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் குமாரசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என விமர்சித்தவர், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இல்லையெனில் இந்தியா மற்றொரு பாகிஸ்தானாக மாறியிருக்கும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கல்வியாளர் பாலா பேசுகையில், ''ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நாட்டின் முதுகெலும்பைப்போல நிர்வாகத்தில் பங்கு வகிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்கள் ஒரு கட்சி சார்ந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களாக இருந்தால் அது ஆபத்து. காரணம், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்ட விதிகளை புறக்கணித்துவிட்டு அவர்களின் கொள்கைகளை செயல்படுத்தும் அபாயம் உள்ளது. ஆர்எஸ்எஸ் சங்கள்ப் (sankalp)
என்ற அகடாமியை டெல்லியில் நடத்திகொண்டிருக்கிறது. அந்த அகடாமியில் ஆர்எஸ்எஸ் சார்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைக்கொண்டு பயிற்சி கொடுத்துவருகிறார்கள். அதில் பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தம் கொண்ட அதிகாரிகளை நாட்டில் நிர்வாகத்தில் திணிக்க கோட்பாடுடன் செயல்படுகிறார்கள்.

சங்கல்ப் என்ற அகாடமியை 34 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருகிறார். அதிலிருந்து 2015,16,17 ஆண்டுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்ஸ் பணிகளில் 3413 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அதில் 2007 பேர் கிட்டத்தட்ட 60% பேர் சங்கல்ப் இன்ஸ்டிடியூட்டில் படித்து தேர்வு பெற்றவர்கள். தர்மேந்திர பிரதான் மற்றும் ஆளுநர் ரவி உள்ளிட்டோர் அந்த இன்ஸ்டிடியூட்டில் சென்று உரையாடுகிறார்கள். அமித்ஷா அவர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதைவிட வேறு என்ன ஆதாரம் இருந்தவிட முடியும்?. அவர்களின் சித்தாந்தம் மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மாற்றமானது'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com