பரத் - மேக்ஸ்வெல் அதிரடி! ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி அசத்தல் வெற்றி! மேட்ச் ரிவ்யூ!

பரத் - மேக்ஸ்வெல் அதிரடி! ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி அசத்தல் வெற்றி! மேட்ச் ரிவ்யூ!
பரத் - மேக்ஸ்வெல் அதிரடி! ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி அசத்தல் வெற்றி! மேட்ச் ரிவ்யூ!

நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங் தேர்வு செய்திருந்தார். அதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 

எவின் லூயிஸ் - ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம்!
ராஜஸ்தான் அணிக்காக எவின் லூயிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தனர். பவர் பிளே ஓவர் முடிவில் 56 ரன்களை சேர்த்திருந்தது ராஜஸ்தான். ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் 31 ரன்களை சேர்த்திருந்தார். டேனியல் கிறிஸ்டியன் வீசிய ஆட்டத்தின் 9-வது ஓவரில் அவுட்டானார் அவர். 

லூயிஸ் 37 பந்துகளில் 58 ரன்களை சேர்த்து அவுட்டானார். அதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். 

எக்கானமியாக பந்து வீசிய சஹால்!

பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை சேர்த்திருந்தார். அதோடு லோம்ரோர், லிவிங்ஸ்டன் என இருவரது விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 

100 முதல் 149 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான்!

நல்ல தொடக்கம் கிடைத்தும் ராஜஸ்தான் அணி அதை பயன்படுத்தி கடைசி 8 ஓவர்களில் ரன் சேர்க்க தவறிவிட்டது. 100 முதல் 149 ரன்களை எடுப்பதற்குள் ராஜஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்தது. லூயிஸ், லோம்ரோர், சாம்சன், தெவாட்டியா, லிவிங்ஸ்டன், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், சேத்தன் சக்காரியா என 8 பேர் விக்கெட்டுகளை இழந்திருந்தனர். 

இருபது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான். அந்த இலக்கை விரட்டியது பெங்களூர். 

பெங்களூர் சேஸிங்!

பெங்களூர் அணிக்காக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 48 ரங்களை சேர்த்தனர். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது பெங்களூர். 

அசத்தல் இன்னிங்ஸ் விளையாடிய பரத்!

படிக்கல் வெளியேற பரத் களத்திற்கு வந்தார். கோலி 25 ரன்களை சேர்த்து ரன் அவுட்டானார். தொடர்ந்து மேக்ஸ்வெல்லும் கிரீசுக்கு வந்தார். இன்னிங்ஸை மீண்டும் முதலில் இருந்து பில்ட் செய்தது RCB. பொறுப்புடன் விளையாடிய பரத் - மேக்ஸ்வெல் 69 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பரத் 35 பந்துகளில் 44 ரன்களை சேர்த்து அவுட்டானார். அவரது ஆட்டம் பெங்களூர் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. தனது பணியை சிறப்பாக செய்தார் அவர். 

மேக்ஸ்வெல் அதிரடி!

30 பந்துகளில் 50 ரன்களை சேர்த்து அதிரடியாக விளையாடி இருந்தார் மேக்ஸ்வெல். அதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இந்த இன்னிங்ஸின் மூலம் கிரிக்கெட் உலகின் ‘பிக் ஷோ’ என அழைக்கப்படுவது ஏன் என்பதை நிரூபித்துள்ளார் மேக்ஸ்வெல். இந்த ஆட்டத்தின் 17-வது ஓவரில் 22 ரன்களை விளாசியதே அதற்கு சான்று.  வெற்றிக்கான ரன்களை டிவில்லியர்ஸ் அடித்திருந்தார். முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

“நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டோம். மிடில் ஆர்டரில் சில நம்பிக்கை வேண்டும். இந்த சீசனில் இனி நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால் சுதந்திரத்தில் இந்த ஆட்டத்தை அணுகினோம். ஐபிஎல் மிகவும் விந்தையானது. அதனால் நாங்கள் விளையாட உள்ள இறுதிப்போட்டி வரை நம்பிக்கையுடன் இருப்போம்” என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தோல்விக்கு பிறகு தெரிவித்துள்ளார். 

புள்ளிப்பட்டியலில் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன. நடப்பு சீசனில் இரண்டாவது முறையாக பெங்களூர் அணி, ராஜஸ்தானை வீழ்த்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com