சாதிய வன்கொடுமைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - கௌசல்யா எழுப்பிய கேள்வியும் தொடரும் விவாதங்களும்!
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கௌசல்யா, திமுக, காங்கிரஸ் குறித்து பல்வேறு விமர்சனங்களை நேரடியாக முன் வைத்தார். பின்னர், அந்த நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்களை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். சங்கரின் கொலையை ஆவணப்படுகொலை என்று கூட திமுகவால் சொல்ல முடியவில்லை என்று கௌசல்யா அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நானும் சங்கரும் தாக்கப்பட்ட நிகழ்வு குறித்து திராவிட முன்னேற்ற கழகம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரு ஆணவப் படுகொலையை ஆணவப் படுகொலை என்று சொல்லக் கூட துணியவில்லை. பட்டப்பகலில் நடைபெற்ற அப்படுகொலையைக் கண்டிக்கக் கூட இல்லை. இப்படி தமிழ்நாட்டின் ஒரு பெரிய கட்சியால் இருக்க முடிந்திருக்கிறது என்பது எப்போதும் என்னை உறுத்திக் கொண்டே உள்ளது. வேறு சில சாதியப் படுகொலைகள், வன்முறைகளில் திமுகவின் நிலையும் ஏமாற்றமாகவே இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கூட்டணி தற்போது வரை அறிவிக்கவில்லை. இருப்பினும், சமீப காலமாக அனைத்துப் பொதுப்பிரச்னைகளிலும் திமுக உடன் இணைந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டத்தை நடத்துகிறது. குறிப்பாக சமீப காலமாக காவிரி விவகாரத்தில் திமுகவுக்கு உடன் முக்கிய கட்சியாக களத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைக்கும் என்றே அரசியல் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது. இப்படியொரு தருணத்தில், விடுதலை சிறுத்தைகளின் கூட்டத்தில் திமுகவை நேரடியாக விமர்சித்து கௌசல்யா பேசியுள்ளார்.
கௌசல்யா தனது முகநூலில் கருத்து பதிவிட்டது முதல் திமுக தரப்பினர் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். திமுகவுக்கு ஆதரவாக பெரியார் இயக்கங்களை சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டனர். கௌசல்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒரு கருத்துப் போரே சில தினங்களாக முகநூலில் நடைபெற்று வருகிறது. சிலர் கௌசல்யாவிற்கு அனுபவம் போதாது, நிறைய படிக்க வேண்டும், நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாகரீகமாக விமர்சித்தனர். ஆனால், சிலர் கௌசல்யாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. கௌசல்யாவை யாரோ சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் எனவும் சிலர் விமர்சித்து இருந்தார்கள்.
இந்த விமர்சனங்கள் குறித்து மீண்டும் ஒரு பதிவை கௌசல்யா பதிவிட்டார். “என்னை வழிநடத்த சில மூத்த தோழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். யாரோ ஒருவர் என்னை இயக்க நான் இயந்திரம் அல்ல. எதையும் ஆராய்ந்து தெளியும் சுயசிந்தனை கூட இல்லாததாக எனைக் கருதுவது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது. கருத்தைப் பேசுங்கள். கருத்துகளுக்கு மட்டுமே பதில். அன்பு மாறாது. சாதி ஒழிப்பு இலக்குக்கு உண்மையாக நின்று விவாதிப்போம்” என்று கூறியிருந்தார் கௌசல்யா.
மேலும், “இத்தனை காலம் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகளில் திமுக வின் நிலைப்பாடு என்ன? முரணின்றி தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக அது ஒலித்துள்ளதா? சாதி கேட்டும் சாதி பார்த்தும் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சி வன்கொடுமை நிகழ்வுகளில் யார் பக்கம் நிற்கும்? நின்றிருக்கிறது?” என்று கௌசல்யா மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் சங்கர் படுகொலையை ஸ்டாலின் கண்டித்த விதம் குறித்தும் மீண்டும் கௌசல்யா விமர்சனத்தை முன்வைத்தார். “மு.க.ஸ்டாலின் சங்கர் படுகொலை நிகழ்வு குறித்துத் தெரிவித்திருக்கிற கண்டன செய்தியில், சங்கர் எதற்காக இறந்தான். நான் எதற்காகப் தாக்கப்பட்டேன் என்ற உண்மையை கூறாமல் வெறுமனே படுகொலை என்று கூறியிருக்கிறார். எங்களை தாக்குவதற்குக் காரணம் சாதியம், நடந்தது ஆணவப் படுகொலை. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவிக்க முடியும் என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளார். அந்தக் கண்டனம் யாரைக் காப்பாற்ற? அந்தக் கண்டனம் இறுதி விளைவாக யாருக்குச் சாதகம்? ” என்று கடுமையாக கேள்விகளை எழுப்பினார் கௌசல்யா.
கௌவுசல்யா இப்படி கடுமையாக விமர்சனங்களை முன் வைத்துள்ள நிலையில், விமர்சனம் செய்ய கௌசல்யாவுக்கு உரிமை உண்டு என்று கனிமொழி கூறியுள்ளார். கௌசல்யாவிற்கு எதிராக யாரும் வசைபாடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.