வீட்டு வாசலுக்கு கீழே 2,800 ஆண்டு தொன்மை... - கொற்கை ஆச்சரியங்களின் நேரடி அனுபவம்

வீட்டு வாசலுக்கு கீழே 2,800 ஆண்டு தொன்மை... - கொற்கை ஆச்சரியங்களின் நேரடி அனுபவம்
வீட்டு வாசலுக்கு கீழே 2,800 ஆண்டு தொன்மை... - கொற்கை ஆச்சரியங்களின் நேரடி அனுபவம்

ஒரு வீட்டு வாசலின் முன்பாக மூன்று மீட்டருக்கும் அதிகமாக தோண்டப்பட்ட குழிகளுக்குள் சுமார் 2,800 ஆண்டுகள் தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இப்படி பல ஆச்சரியங்களுக்கு வித்திடும் கொற்கை அகழாய்வு தொடர்பான நேரடி அனுபவம் இது...

ஆதியில் மனிதன் நாடோடியாக அலைந்து திரிந்து வேட்டையாடி உண்டு வாழ்ந்தான். பிறகு நதிக்கரை நாகரிகங்கள் பிறந்தன. அதாவது நீர் வளம்மிக்க ஓர் இடத்தில் நிலையாக வாழிடங்களை அமைத்து, நீரை பயன்படுத்தி உணவுக்காக விவசாயத்தை முன்னெடுத்தான். அங்குதான் நவீன உலகின் முதல் கதவு திறக்கப்பட்டது. கலாசாரங்கள், வாழ்வியல் முறைகள் என ஒவ்வொன்றாக நீள... நாம் தற்போது நெளியும் மெட்ரோ ரயில்களில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணம் எப்படியானது..? - ஆதியில் வேட்டையாடி வாழ்ந்த மனிதன் மெட்ரோ ரயில் வரை பயணித்த பயணத்தின் தடங்கள் என்ன என்பதை தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறியலாம். தற்போது தமிழகத்தின் பல இடங்களில் அகழாய்வுகள் மூலம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளங்கள் நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்துவரும் அகழாய்வில் பல அரிய பொருள்கள் கிடைத்தன. அதன்மூலம் தமிழர்கள் நாடோடிகளாக இல்லாமல், நிலம் பிரித்து, நெல் விதைத்து, உண்டு, எழுத்தறிவுடன் வாழ்ந்த நாகரிக சமுதாயத்தினர் என்பது உறுதியாகியிருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கொற்கை என்றால் கடல் முத்துக்கள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்ட கடல்பகுதி என்று பொருள். குவியல் குவியலாக கடல் முத்துக்களை தமிழர்கள் விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இன்று இரண்டாயிரம் வீடுகள் வரை இந்தக் கிராமத்தில் இருக்கின்றன. கடற்கரை அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கொற்கை துறைமுகத்தின் கடற்கரையில் இருந்து கடலும் ஆறும் சேரும் கழிமுகப் பகுதிதான் மக்கள் வாழும் இன்றய கொற்கை கிராமமாக இருந்திருக்கலாம். இதுவே, தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து.

ஊருக்குள் நுழைந்ததும் வரிசையாக இருக்கும் பழமையான வீடுகளுக்கு இடையே 'தொல்லியல் துறை கள ஆய்வுப் பகுதி' என அம்புக்குறி இட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. ஊர் மக்களிடம் விசாரிக்கும்போது, ஆங்காங்கே மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயும், வீட்டு வாசல்களிலும் கூட குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படித்தான் இருந்தன காட்சிகளும்!

தற்போது மக்கள் வாழ்ந்து வரும் ஒரு வீடு, அதற்கு முன்பாக மூன்று மீட்டருக்கும் அதிகமாக தோண்டப்பட்ட குழிகள்... அதற்குள் சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான பொருள்கள் கண்டெடுக்கப்படுகின்றன. எப்படிப் பாருங்கள்... சமகால மனிதன் தன் விட்டுக் கதவைத் திறந்தால் 2,800 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாளுக்குள் காலடி வைக்கிறான். இப்படித்தான் உள்ளன அப்பகுதி கிராமங்கள்.

இந்த குழிகள் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் பழமையான பிள்ளையார் கோயில் இருப்பது தெரியவந்தது. அது ஒரு காலத்தில் சிவன் கோயிலாக இருந்திருக்கலாம் என்பதை, அதன் கட்டமைப்பு நமக்குச் சொல்கிறது. இதுவும்கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோயில் என்று சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் கோயிலின் கட்டுமானச் சுவர் பகுதியில் நாம் இப்போது பார்க்கும் செங்கற்களை விட மூன்று மடங்கு பெரிய அளவு கொண்ட செங்கற்களின் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

இந்தக் கோயிலில் இருக்கு விநாயகரை அக்கசாலை விநாயகர் என்று சொல்கின்றனர். அக்கசாலை என்றால் அந்தக் காலத்தில் நாட்டுக்குத் தேவையான பண்டமாற்று பணமான தங்கக் காசுகள் தயாரிக்கும் இடம் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு காலத்தில் தமிழகத்திற்கு தேவையான காசுகளை தயாரிக்கும் இடமாக இந்த கோயிலின் பின்பகுதி இருந்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடந்த 1961-ஆம் ஆண்டு தமிழக தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. 1968-ஆம் ஆண்டில் முதல் தொல்லியல் களமாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அமைந்திருக்கும் கொற்கை தேர்வு செய்யப்பட்டு, அங்குதான் முதல் அகழாய்வு தொடங்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறையின் இரண்டாம் கட்ட அகழாய்வும் இதே கொற்கையில் 2021 பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. தற்போது வரை இங்கு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் வரை இங்கு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தமிழக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த அகழாய்வில் உடைபட்டு கிடைத்த கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், கடல் சங்குகள், தமிழ் பெயர் பொறித்த பானை ஓடுகள் என இதுவரை ஐநூற்று எண்பத்தைந்து பொருள்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் கொற்கை இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமையானது என்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் காணக்கிடைக்காத ஒன்றாக... ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற ஒன்பது அடுக்குகள் கொண்ட 'சுடுமண் குழாய் வரிசை' கிடைக்கப் பெற்றுள்ளது. இது ஒரு வடிகட்டியாக இருக்கலாம். சங்கு அறுக்கும் தொழில் இந்தக் கொற்கையில் நடைபெற்று வந்ததாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் இவை சங்கு அறுக்கும் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட சுடுமண் வடிகட்டியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொற்கை ஊருக்குள் தொல்லியல் துறைக்கு என ஓர் அலுவலகமும் உள்ளது. அந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள தனிநபர் ஒருவரின் தோட்டத்திலும் அகழாய்வு நடைபெற்றது. அதில் அதிகமாக கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், கடல் சங்குகள் கிடைத்தன. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்பொழுது, ஓர் இடத்தில் அகழாய்வு தொடங்கும்போது அங்கு பானை ஓடுகள் கிடைத்தால், அங்கு மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. அந்த அடிப்படையில் அடுத்தடுத்த ஆய்வு பணிகள் அங்கு தொடரும் என தெரிவித்தனர்.

மேலும், ஒரு சிறப்பாக கீழடியில் கிடைத்தது போன்று, இங்கும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகள் பழமையான தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது மிகவும் நம்பிக்கைக்குரிய விஷயம் என்றார்கள். இதனால் அந்தக் கால கட்டங்களில் தமிழர்கள் நாடோடிக் கூட்டமாக இல்லாமல், ஒரே இடத்தில் உழுது, பயிர் செய்து வாழ்ந்த நாகரிக சமூகம் என்பது தெரிய வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் அதிகம் செய்யப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கொற்கையில் 1968-ஆம் ஆண்டு அகழாய்வு நடக்கும்போது, அப்போது பணியின் போது உடனிருந்தவரும், இப்போது அக்கசாலை கோயிலின் அர்ச்சகராகவும் இருக்கும் பெருமாள் பட்டர் கூறும்போது, "தஞ்சாவூர் அருகே ஒரு கொற்கை உள்ளது. பழங்கால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்த கொற்கையா அல்லது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்த கொற்கையா என்பதற்கான ஆய்வுதான் தமிழகத் தொல்லியல் துறையின் முதல் ஆய்வாக இருந்தது. அதில், இங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களைக் கொண்டு நடந்த ஆய்வின் அடிப்படையில், வரலாற்றில் குறிப்பிடப்பட்ட கொற்கை என்பது இங்குதான் அமைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது" என்றார்.

மேலும், "அந்த அடிப்படையில் இரண்டாவது கட்ட ஆய்வும் தொடங்கப்பட்டிருப்பதால் தமிழர்களின் வாழ்வியல் குறித்த வரலாறு நமக்கு மிகத் தெளிவாகத் தெரியவரும்" என்றார்.

மூன்று மீட்டர் தோண்டினால் மூவாயிரம் ஆண்டுகள் வரை பயணிக்கலாம். அக்கால மனிதர்களின் வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ளலாம் என்பதே வியப்புதான். ஆம், இவற்றை எல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்று பலரும் கேட்கின்றனர். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை அறிந்துகொள்வது, நாம் எதை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com