இந்திய கிரிக்கெட் அணியில் என்னதான் நடக்கிறது?... ஓர் விரிவான அலசல்

இந்திய கிரிக்கெட் அணியில் என்னதான் நடக்கிறது?... ஓர் விரிவான அலசல்
இந்திய கிரிக்கெட் அணியில் என்னதான் நடக்கிறது?... ஓர் விரிவான அலசல்

 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலையில் களமிறங்கும் இந்திய அணி, பல்வேறு நிர்வாக சிக்கல்களால் பின்னடவை சந்தித்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே மற்றும் கேப்டன் விராத் கோலி இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மையம் கொண்டுள்ளது. கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பான ஆட்டத்தையே இந்திய அணி வெளிப்படுத்தியது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க சச்சினின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் பார்த்த திருப்தியுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. 
இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி பயிற்சிகளில் கவனம் செலுத்த முடியாமல் கும்ப்ளே-கோலி இடையிலான கருத்து வேறுபாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. ஒரு அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையே எல்லா விஷயங்களிலும் ஒருமித்த கருத்து  இருக்க முடியாது என்றார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். இந்த விவகாரம் அணியின் வெற்றியைப் பாதிக்காது என்று கருத்து தெரிவித்தார் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள வி.வி.எஸ். லட்சுமணன். இவர்களின் கருத்துகளால் கும்ப்ளே- கோலி இடையே கருத்து வேறுபாடு இருப்பதை உறுதி செய்து கொண்டான் சாமானிய கிரிக்கெட் ரசிகன்.

இது ஒருபுறமிருக்க, பயிற்சியாளராக கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரத்தில் கோலிக்கு தொடக்கத்தில் இருந்தே உடன்பாடில்லை என்ற ஒரு புதுதகவலை பிசிசிஐயின் முன்னாள் செயலாளர் அஜய் ஷிர்கே கூறியுள்ளார். ஆங்கில செய்தித் தாள் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்ட போது கோலிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து பிசிசிஐயின் அன்றைய தலைவர் அனுராக் தாக்குர், இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நியமனத்தால் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது என்று இருதரப்பினரிடமும் அனுராக் தாக்குர் வாக்குறுதியைப் பெற்றார். உச்சநீதிமன்றதால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுவின் நேரடி பரிந்துரை என்பதால் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று விராத்கோலி தரப்பிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது என்று அஜய் ஷிர்கே தெரிவித்தார்.

கும்ப்ளே-கோலி இடையிலான கருத்துவேறுபாட்டினை களையும் வகையில் சச்சின், கங்குலி மற்றும் வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ ஆலோசனைக் குழு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள கங்குலி, வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் அவர்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். இதேபோல, பிசிசிஐ நிர்வாகத்தைச் சேர்ந்த அமிதாப் சவுத்ரி மற்றும் எம்.வி.ஸ்ரீதர் ஆகியோர் வீரர்களை நேற்று சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். 

இது ஒருபுறமிறக்க பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்சநீதிமன்றதால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா சொந்த காரணங்களுக்காக, தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி குழுவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கு அவர் எழுதியுள்ள 7 பக்க கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் விராத் கோலியின் ஆதிக்கம் குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளார். அவரது கடிதத்தில், அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் கோலி, நிர்வாகத்திலும் தலையிட விரும்புவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வர்ணனையாளர்கள் குழுவில் யாரெல்லாம் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் அளவுக்கு கேப்டன் கோலிக்கு அதிகாரத்தினை யார் கொடுத்தது என்றும் குஹா, கடிதத்தில் கேட்டுள்ளார். விராத் கோலியை வர்ணனையின்போது விமர்சித்ததற்காக ஹர்ஷா போக்லே, பிசிசிஐயின் வர்ணணையாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பது தெரிந்திருந்தால், ஏன் அந்த பிரச்னை உடனடியாக கவனிக்கப்படவில்லை என்றும் கேட்டிருக்கிறார். 
அதேபோல, இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்கும் டெல்லி டேர்டெவில் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார். ஆதாயம் தரும் இரு பதவிகளில் ஒருவர் நியமிக்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ள நிலையில், இது எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். தோனியையும் விட்டுவைக்காத குஹா, அனைத்துவிதமான போட்டிகளிலும் பங்கேற்காத ஒரு வீரரை ஏ கிரேடு ஒப்பந்தத்துக்கு தேர்ந்தெடுத்தது ஏன். தோனிக்கு மட்டும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அளிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் குஹா கேள்வி எழுப்பியுள்ளார். 

வீரர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக கும்ப்ளேவின் கோரிக்கையால் பிசிசிஐ நிர்வாகம் அவர் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ரேஸில் விரேந்திர சேவாக் மற்றும் டாம் மூடி ஆகியோருடன் கடுமையாக மோத வேண்டி இருக்கும். இத்தனை நிர்வாகச் சிக்கல்கள் இருக்கும் நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 4ல் எதிர்கொள்கிறது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com