ராமாயண கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த கேரளா.. உலகின் மிகப்பெரிய பறவை சிற்பத்துக்கு ஓர் விசிட்!

பாறையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நமது கண்கள் மட்டும் குளிர்வதில்லை; நமது மனமும் எந்த பாரமும் இல்லாமல் லேசாகிறது.
Jatayupara
JatayuparaKerala Tourism

ஒரு காவியம் நம் கண் முன்னே உயிர் பெற்று கொண்டிருக்கிறது. அட ஆமாங்க, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலரத்தில் இருக்கும் பிரம்மாண்ட பறவை சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம் இதுவே. எம்.சி. சாலை வழியாக திருவனந்தபுரம் செல்வோரின் கண்களுக்கு சடையமங்கலத்தில் இருக்கும் இந்த சிற்பம்  வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சிற்பியும் பிரபல திரைப்பட இயக்குனருமான ராஜீவ் அன்சலின் மனதில் உதித்த யோசனை இன்று நம் கண் முன்னே தத்ரூபமாக நிற்கிறது.

எம்சி சாலையில் செல்கையில் சடையமங்கலத்தை நெருங்கும் போது இறக்கையை விரித்தபடி இருக்கும் இந்த பிரம்மாண்ட பறவை சிற்பம் நமது பார்வைக்குத் தெரியும். ஜடாயு இயற்கை பூங்கா என்று அறியப்படும் ஜடாயு எர்த் சென்டர் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சிற்பம் இருக்கும் உச்சியை அடைய நடைபாதையும் கேபிள் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நடந்து செல்பவர்கள் காட்டின் வழியாக செல்லும் இப்பாதையை பயன்படுத்தலாம். காலை 9.30 முதல் 5.30 வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். இங்குள்ள கேபிள் காரில் 4 கேபின் உள்ளது. ஒவ்வொரு கேபினிலும் எட்டு பேர் செல்லலாம். இதில் பயணம் செய்பவர்கள் பச்சை பசேலென விரிந்திருக்கும் மலைத்தொடர்களை பார்த்து ரசிக்கலாம். இங்கு தாராளமான பார்க்கிங் வசதிகள் உள்ளது.

உச்சியில் இருந்து பறவைக் கோணத்தில் பள்ளத்தாக்கின் அழகை பார்க்கும் போது நாமே மெய்மறந்து போவோம். இங்கு செல்பவர்கள் உணவு பண்டங்களையோ, தண்ணீர் பாட்டில்களையோ, பெரிய பைகளையோ எடுத்துச் செல்லக்கூடாது. நமக்கு வேண்டியதை வாங்கிக்கொள்ள அங்கேயே சிறிய கடைகள் உள்ளது. கழிப்பறை வசதிகள் கூட உள்ளது. ஆகையால் யாரும் கவலைப்படத் தேவையில்லை.

இந்தச் சிற்பத்தையும் அதனோடு சேர்ந்த வளாகத்தையும் மலை உச்சியில் அமைக்க ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகியுள்ளது. சிற்பத்தின் அருகே செல்வதற்கு முன், சற்று தொலைவில் இருந்து கலை அம்சமான ஜடாயுவின் அழகியலை கண்டு ரசியுங்கள். அட, என்ன ஒரு அழகு. ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஜடாயுவின் கதை அங்குள்ள பாறையில் ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜடாயு குறித்து மலையாளத்தின் புகழ்பெற்ற கவிஞரான ஓஎன்வி க்ரூப் எழுதிய கவிதையும் இப்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது.

சீதையை ராவணன் கடத்திச் செல்லும்போது, அவளைக் காப்பாற்ற முற்பட்ட ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டி வீழ்த்தினான். வழியில் துடித்த ஜடாயு அப்படியே இந்தப் பாறையில் விழுந்ததாக ஜடாயுவின் வீரம் குறத்து ஒரு கதை கூறப்படுகிறது. அதன்பிறகு ஜடாயுவின் வீரத்தைப் பாராட்டி ராமர் அதற்கு மோட்சத்தை வழங்கியதாகவும் அதனாலேயே இப்பாறை ஜடாயு பாறை என்ற பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்கள். இந்த சிற்பம் ஒரு பெண்ணின் நேர்மைக்காகவும் அவளின் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக நுழைவாயிலின் வலதுபுறத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஜடாயு ஒரு பறவையாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக நிற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொக்கரனி

பகல் வேளைகளில் இங்கு வெப்பம் அதிகமாக இருந்தாலும் மலைகளில் இருந்து வரும் காற்று சற்று சூட்டை தணிக்கக் கூடியதாக இருக்கிறது. பரந்து விரிந்த காட்சிக்கூடம், ராமர் கோவில், ராமர் பாதம், கொக்கரனி  (புனித சுனை) என இவ்வளாகத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது.

ஜடாயு சிற்பத்தின் பின்னால் கொக்கரனி என்று அழைக்கப்படும் சுனை உள்ளது. இது புனிதமான நீராக கருதப்படுகிறது. ஆனால் பக்தர்கள் யாரும் இதன் அருகில் செல்ல முடியாதபடி தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் கூட இந்த சுனை வற்றாது. இந்தச் சுனையைப் பற்றி கூறப்படும் கதையும் ஜடாயுவோடு தொடர்புடையதே. காயம்பட்ட ஜடாயு, தண்ணீர் தாகத்திற்காக தனது அலகால் பாறையை தோண்டியபோது தண்ணீர் கொப்பளித்து வந்திருக்கிறது. பறவையின் அலகு தேய்ந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இச்சுனையின் வடிவமும் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அதனால்தான் இந்த சுனைக்கு கொக்கரனி என்ற பெயர் வந்துள்ளது. காயம்பட்டு வீழந்த ஜடாயுவின் ரத்தம் இக்குளத்தை நிரப்பியதால் கொக்கரனியின் நீர் கூட சிவப்பு நிறமாகவே இருக்கும் என்ற இன்னொரு கதையும் இங்கு நிலவுகிறது.

ஜடாயு கோதண்டராம கோவில்

இந்த ராமர் கோவில் நான்கு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஜடாயுவிற்கு மோட்சம் கொடுத்த ராமபிரானே இக்கோயிலின் மூலக் கடவுளாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார் என்று நம்பப்படுகிறது. அதோடு இங்கு சீதா, லஷ்மணன், கணபதி, தட்சிணாமூர்த்தி, சூர்யதேவன், ஜடாயு மற்றும் ஹனுமனுக்கும் சிலைகள் உள்ளது. சுவாமி சத்யானந்த சரஸ்வதியால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஜடாயு ராமர் கோயில், தற்போது ஜடாயுபுர கோதண்டராம கோயில் சங்கத்தின் கீழ் உள்ளது. கோவிலில் தினசரி தவறாமல் பூஜை நடைபெறுகிறது. பிரசாதமாக வானரயூட்டு (குரங்குகளுக்கு) வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் கோயிலைச் சுற்றியுள்ள குரங்குகளுக்கு இப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

ராமரின் காலடித் தடம்

இங்குள்ள பாறையில் ராமரின் காலடித் தடம் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சீதையை தேடி ராமன் இங்கு வந்த போது இத்தடம் பதிந்ததாக கூறுகிறார்கள். ராமரின் காலடித் தடம் கண்ணாடி பேழையில் பாதுகாக்கப்படுகிறது. ராமரின் காலடித்தடம் அருகே ஒரு அணையா விளக்கு உள்ளது. அதை முதன்முதலில் ஏற்றியது திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாயி ஆகும். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அத்யத்மா ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜடாயு ஸ்துதியை உச்சரிக்கிறார்கள்.

ராமர் கோயிலுக்குச் செல்ல காட்டு வழியாக ஒரு பாதை உள்ளது. இந்த பாதையையே பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். கோயிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. ஜடாயுபுரத்திற்கு வரும் மக்கள் ராமர் கோவிலுக்கு செல்ல தவறுவதில்லை.

ஜடாயு சிலை, ராமர் கோவில், ராமரின் பாதம், கொக்கரனி என ஜடாயுபுரத்தில் பார்க்க வேண்டிய அழகான இடங்கள் பல உள்ளது. இயற்கையும் மனிதனின் படைப்பும் இணைந்து உருவான இந்த அழகிய இடத்தைக் காண தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகிறார்கள். பாறையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நமது கண்கள் மட்டும் குளிர்வதில்லை, நமது மனமும் எந்த பாரமும் இல்லாமல் லேசாகிறது.

ஜடாயுபுரத்தின் கீழ்தளத்தில் குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்காக வொண்டர் வேர்ல்டு ரியாலிட்டி என்ற பூங்கா உள்ளது. இளைஞர்களின் பொழுதுபோக்கிற்கு 12D ரைடர் என்ற பகுதியும் உள்ளது.  ஆகவே, ஜடாயு பாறைக்கு வருகை தருபவர்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமேயில்லை.

 இதையும் படிக்கலாமே: ஊட்டி, கொடைக்கானல் போர் அடித்துவிட்டதா? இதோ புதிய சொர்க்கம்! கேரளாவில் ஒரு காஷ்மீர்! - ’பொன்முடி’

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com