மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன?

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன?
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன?

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்யும் பொழுதெல்லாம் கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்புகள் அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியது. இதில் 483 பேர் உயிரிழந்த நிலையில் லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்திருந்தனர். 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருள் சேதமானது ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக இடுக்கி, வயநாடு, பந்தளம், செங்கனூர், மலப்புரம், ஆலுவா, சாலக்குடி, திருச்சூர் திருவிழா, பழவூர், பாலக்காடு, கொழிஞ்ன்சேரி, ஆரண்முலா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. கேரள மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் இந்த பெரு வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டனர் என கேரள அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசோ இந்த இயற்கை சீற்றத்தை மூன்றாம் கட்ட பேரழிவாக அறிவித்திருந்தது. கேரளாவில் உள்ள 55 அணைகளில் 35 அணைகள் ஒரே நேரத்தில் கேரள வரலாற்றில் முதல் முதலாக திறந்துவிடப்பட்டது. நாட்டின் நான்காவது பிஸியான கொச்சின் விமான நிலையம் 15 நாட்களுக்கும் மேலாக முழுமையாக மூடப்பட்டிருந்தது. வன விலங்குகள் எல்லாம் எண்ணிக்கை செய்ய முடியாத அளவுக்கு இறந்து போயின.

அந்த பாதிப்பு சற்று சரி செய்வதற்கு உள்ளாகவே 2019ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் 127 பேர் உயிரிழந்தனர். 2 லட்சம் அதிகமானோர நேரடியாக பாதிக்கப்பட்டனர். 2000க்கும் அதிகமான வீடுகள் முழுமையாக நாசமாகின. இரண்டு தினங்களில் அம்மாநிலத்தின் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு நிலைமையை மிகவும் மோசமாகியது.

இது 2020 ஆண்டும் தொடர்ந்தது. கொரோனாவால் ஏற்கனவே கேரள மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வந்த நிலையில், விடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் பிரச்னைகளை சந்தித்தனர். தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 49 பேர் உயிருடன் புதைந்து மாண்டு போயிருந்தனர். இதில் ஏராளமான தமிழர்களும் அடங்கியிருந்தனர். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்த வெள்ளத்தினால் சேதம் ஏற்பட்டதாக கேரள அரசு கூறியது. 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மழை வெள்ளத்தின் பொழுதுதான் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந்தத் துயரம் இந்த ஆண்டும் தொடர்கிறது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கக் கூடிய நிலையில் மழை இன்னும் அம்மாநிலத்தில் விட்டபாடில்லை. கடந்த சில ஆண்டுகளில் கேரளாவில் இந்த பெருவெள்ளம் பாதிப்புகளை சற்று உற்று நோக்கும் பொழுது மனிதர்கள் செய்யும் மிகக் கடுமையான இயற்கை விதிமுறை மீறல்கள் முக்கிய காரணமாக அமைகிறது. தொடர்ந்து வனங்கள் அழிப்பு, இயற்கை வளங்கள் சுரண்டல், ஆக்கிரமிப்புகள் சட்ட விதிமுறைகளுக்கு மீறிய சுரங்கங்கள் மற்றும் கட்டுமானங்கள் வன உயிரினங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் போன்றவையெல்லாம் பெரும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. பெரு வெள்ளத்தின் போது ஏற்படும் நிலச்சரிவு உயிரிழப்புகளும் கடுமையான பாதிப்புகள் காரணமாக இருக்கிறது.

தொடர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கட்ஜில் குழு கடந்த 2011-ம் ஆண்டு அறிக்கை வழங்கியது. அதன்படி வெஸ்டர்ன் காட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்குள்ள விதிமுறை மீறிய சுரங்கங்கள், கட்டுமானங்கள் எல்லாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும். தேயிலைத் தோட்டங்கள் மீண்டும் காடுகள் ஆகவே புனரமைக்கப் படவேண்டும் போன்ற பல பரிந்துரைகளை வழங்கி இருந்தார்கள்.

ஆனால் இது நடைமுறைப்படுத்துவதில் அதிக சிக்கல் நிறைந்தது என்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் வேறு ஒரு குழு அமைக்கப்பட்டு, முந்தைய குழு மொத்த மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருந்த 64 சதவிகிதத்தை சரிபாதியாக குறைத்தும், கேரளா, தமிழ்நாடு, குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 64 ஆயிரம் சதுர கிலோமட்டர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது போன்ற பல பரிந்துரைகளை வழங்கி இருந்தார்கள்.

ஆனால் இந்த இரண்டு பரிந்துரைகளும் பெரிய அளவில் கடைபிடிக்கப் படவில்லை என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மிக முக்கியமான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி உள்ள முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேரளா தொடர்ந்து பேரழிவுகளை சந்திப்பதற்கு இந்த குழுக்களன் பரிந்துரைகளை நிறைவேற்றாததுதான் என தெரிவித்துள்ளார்.

அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணரவில்லை என்றால் கேரளா மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சூழலியல் சார்ந்து மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்று சூழியல் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். இயற்கை நமக்கு கொடுக்கும் எச்சரிக்கைகளை நாம் உதாசீனப்படுத்தும் பட்சத்தில் அது கொடுக்கும் தண்டனை வலி மிகுந்ததாக இருக்கும் எனவே கேரளத்தின் சமீபத்திய பெரு வெள்ளங்களை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com