சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ - கேரளாவில் புதிய புரட்சி..!

சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ - கேரளாவில் புதிய புரட்சி..!

சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ - கேரளாவில் புதிய புரட்சி..!
Published on

கேரளாவில் சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்திய வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக உள்ளது.

இந்தியா எத்தனையோ பெருமைகளை தன்னுள் உள்ளடக்கிய நாடுதான். அதில் ஒரு பெருமை தான் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம். இந்தியாவில் நிலவிய ஜாதி என்னும் கொடூரத்தின் மூலம் இந்த கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வந்திருக்கிறது. நாடு 1947 இல் சுதந்திரம் அடைந்த போதும், கைகளால் மலம் அல்லுவதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவர 1993ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதேபோல், சாக்கடை அள்ளும் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என 2013ம் ஆண்டில் தான் சட்டம் இயற்றப்பட்டது. ஒவ்வொரு உயிரின் மீது அன்பு வைக்க வேண்டும் என்ற பண்பாடு கொண்ட நாம் தான் இப்படி ஒரு கேவலத்தை கண் முன்னே நிகழ அனுமதித்திருக்கிறோம். 

கைகளால் மலம் அள்ளுவதோ, சாக்கடை சுத்தம் செய்வதையோ உணர்வது அவ்வளவு எளிதானது அல்ல. செய்யும் தொழிலை வைத்து அதில் ஈடுபடும் மனிதர்களின் மதிப்பை நிர்ணயிக்கும் சமூகம் நம்முடையது. கேரள எழுத்தாளர் தகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’  நாவல் படிப்பவர்களுக்கு அந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் வலியும், வேதனைகளும், ஒடுக்குமுறைகளும் புரிந்து கொள்ள முடியும். அந்த நாவல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆன போதும், இன்றளவும் அந்த நிலை மாறிவிடவில்லை. சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 2010 முதல் 2017 வரை சுமார் 1,470 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது, 1.8 லட்சம் பேர் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலில் இன்னும் இருக்கிறார்கள். ‘சாக்கடை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு’ என்ற தலைப்பில் செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளது.

சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், கைகளால் சாக்கடை சுத்தம் செய்யும் அவலம் இன்னும் நீடித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். எத்தனையோ வேலைகளில் புதுப்புது கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இந்த தொழிலில் புதிய கருவியை கண்டுபிடிக்க இவ்வளவு நாட்கள் முடியாமல் போனது எப்படி என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது. சென்னை ஐஐடி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதில் ஒருவர், மக்களின் பணத்தில் படிக்கும் இளைஞர்கள், படித்து முடித்த பின்னர் வெளிநாடுகளில் தங்களது அறிவை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கின்றனர். ஆனால், மக்களின் அடிப்படை பிரச்னைகளில் ஒன்றான சாக்கடை அள்ளும் தொழிலுக்கு புதிய கருவியை கண்டுபிடிக்க முன் வருவதில்லை என்று தனது கவலையை 10 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருந்தார். 

இப்படி ஒரு சூழ்நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ரோபோவை ஈடுபடுத்தும் தொழில்நுட்பம் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான விஷயம் என்றே பார்க்கப்படுகிறது. உண்மையில் இப்படி ஒரு ரோபோவை கண்டுபிடித்த இளைஞர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தலைவணங்கி தனது மரியாதை செய்ய வேண்டும். அவர்களது சமூக பொறுப்புணர்வு மிகவும் போற்றுதலுக்குரியது என்பதில் சந்தேகமில்லை.

கேரள இளைஞர்கள் அறிமுகம் செய்துள்ள ரோபோ சிறிய அளவிலான சாக்கடையை சுத்தம் செய்ய 15 நிமிடங்களும், பெரியதாக இருந்தால் 45 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளும். "பண்டிகோட்" என பெயரிடப்பட்ட இந்த ரோபா, ஒரு மணி நேரத்தில் 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும். மாநில அரசின் நிதி உதவியோடு "ஜென் ரோபோட்டிக்ஸ்" என்ற நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதன்முறையாக ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வைஃபை மற்றும் ப்ளூட்டூத் வசதிகளுடன் கூடிய இந்த ரோபோவில் சாக்கடைகளை நன்றாக சுத்தப்படுத்துவதற்காக கை போன்ற பகுதியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளது. ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, 5000 சாக்கடைகள் உள்ள திருவனந்தபுரத்தில், முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோபோக்களை பயன்படுத்துவதன்மூலம், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்செய்யும்பொழுது ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோவை தமிழகத்தில் விரைவில் கொண்டு வரவேண்டும் என்ற குரல்கள் தற்போது எழுந்துள்ளது. தற்போது, தமிழகத்தில் ஜெட் ராடிங் என்னும் கருவிகளை பயன்படுத்தி தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள். இருப்பினும், நேரடியாக மனிதர்கள் பயன்படுத்தும் அவலமும் அரங்கேறிதான் வருகிறது. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் தமிழகத்தில் அந்த புரட்சியை நிகழ்த்துவோம். நம்முடைய சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்போம்.

மனிதர் நோக மனிதர் பார்க்கும் 
     வாழ்க்கை இனியுண்டோ? -- புலனில் 
     வாழ்க்கை இனியுண்டோ? -- நம்மி லந்த 
     வாழ்க்கை இனியுண்டோ

                         
                                 - மகாகவி பாரதியார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com